FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: RemO on February 04, 2012, 03:23:23 PM

Title: பாசிப்பருப்பு நெய் உருண்டை!
Post by: RemO on February 04, 2012, 03:23:23 PM
பாசிப் பருப்பு புரதச் சத்து நிறைந்தது. இதில் எளிதான ஏராளமான பலகாரங்களை செய்யலாம். பாயசம், நெய் உருண்டை போன்றவைகள் பாரம்பரியம் மிக்கவை. பாசிபருப்பு நெய் உருண்டையானது சத்து மிக்கது. இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வர அபார வளர்ச்சி தெரியும்.

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு – 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் 200 கிராம்
ஏலக்காய் – 6
முந்திரி உடைத்தது 50 கிராம்

நெய் உருண்டை செய்முறை

பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.

அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.

வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

சுவையான சத்தான இனிப்பு இது. செட்டிநாட்டுப் பக்கம் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதனை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்.