FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Yousuf on July 19, 2011, 04:08:33 PM

Title: ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாது!!!
Post by: Yousuf on July 19, 2011, 04:08:33 PM
‘மனிதன் நாட்டத்தில் எதுவும் நடப்பதில்லை - இறைவன் நாட்டமின்றி ஓர் அணுவும் அசைவதில்லை’. இதுதான் ஆன்மீகவாதியின் நம்பிக்கையாக இருக்க முடியும், அவர் எந்த மதத்தைச்சார்ந்தவராக இருப்பினும் சரியே.
உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது, உச்சரிக்கவும் கூடாது.


‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூ லுல்லாஹி’ (வணக்கதிற்குரியவன் ஏக இறைவனை தவிர வேறு யாரும் இல்லை) கலிமாவை மொழிந்து ஏறறுக்கொண்டுள்ள ஒரு முஸ்லீம் - முஃமினுடைய (இறை நம்பிக்கையாளன்)  உதடுகள் எக் காரணத்தைக் கொண்டும் உச்சரிக்கக் கூடாத ஒரு வார்தை ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’.

மனிதனின் பரம எதிரியான, ஷைத்தான் கூட இவ்வார்த்தையை உச்சரிக்கத் தயங்குவான். ஏனெனில் அவனுக்குக்கூட தன்னுடைய வரம்பு எது என்று ஓரளவுக்காவது புரியும். ஆனால் இந்த நன்றிகெட்ட மனிதன் தன்னைப்பற்றி இறைவன் அறிவித்துக் கொடுக்காத எதையும் தெரிந்து கொள்ள ஆற்றல் இல்லாத நிலையில் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்வதோ உச்சரிப்பதோ வரம்பு மீறுதலின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

இன்று நேற்றல்ல நெடுங்காலமாக மக்களை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள்; இவ்வார்த்தையை மேடைகளில் முழங்குவதை கண்டு கொண்டுதான் வருகிறோம். சினிமாவிலும்,
ஊடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் கூட இவ்வார்தையை அடிக்கடி உச்சரிப்பதை அறிய முடிகின்ற போது இது எந்த அளவுக்கு இளம் தலைமுறையினரின் உள்ளத்தில் ஊடுருவி அவர்களது இறைநம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


இதில் பெரிய வினோதம் என்னவென்றால் இறைநம்பிக்கையற்ற நாத்திகர்களின் வாயில் இவ்வார்த்தை வருவதில்லை. ஏனெனில் அவர்கள் இறைவனே இல்லையென்று வாதிடக்கூடியவர்கள். ஆனால் இறைநம்பிக்கையுள்ள மற்ற சகோதரர்கள்கூட சர்வ சாதாரணமாக இவ்வார்த்தையை உச்சரிக்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு இறைவனின் ஆற்றலில் நம்பிக்கையில்லையா?

ஆன்மீகவாதி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பிரபலமான நடிகர்கூட சினிமாவுக்காக மட்டுமின்றி மேடையில்கூட அடிக்கடி இவ்வார்த்தையை பிரயோகம் செய்வது அவர் ஒரு பொய்யான ஆன்மீகவாதி என்பதை பறைசாற்றுகிறது என்பதை அவர் உணர வேண்டாமா? உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது.
இவ்வார்த்தையைச் சொல்வதற்கான தகுதி எந்த மனிதனுக்காவது உண்டா என்றால் இல்லை என்பதுதான் ஆணித்தரமான பதில்.


ஒரு அர்ப்பமான கொசுவுக்குக்கூட அசைந்து கொடுக்கக்கூடிய பலகீனமானவனாகத்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இறைவன் தனது திருமறையில் இந்த உலகைப்பற்றிக் குறிப்பிடும்போது அவனது பார்வையில் இவ்வுலகம் ஒரு கொசுவின் இறக்கைக்குக்கூட பொருமானமில்லை என்று விளிக்கின்றான். இந்நிலையில் ஏக வல்லமைப் படைத்த ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ (நவூதுபில்லாஹ்(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)) என்று எவரேனும் சொல்வாரானால் அவர் அறிவிலியாகத்தான் இருக்க முடியுமே தவிர அறிவாளியாக அல்ல.

ஏனெனில் இதை சொல்லக்கூடியவன் அகங்கார மிக்கவனாகவும், வரம்பு மீறியவனாகவும் தான் இனங்காணப்படுவான். தன்னையே இறைவன் என்று சொல்லிக்கொண்ட ஃபிர்அவ்னுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு அதிகமில்லை.

சரி இது ஒருபுறம் இருக்கட்டும். திருக்குர்ஆனில் இறைவன் ‘இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்’ என்று சொல்வதை கடமையாக்கி வைத்திருக்கும்போது அதற்கு நேர்மாறான ஒரு வார்த்தையை விளையாட்டுக்குக்கூட சொல்வது கூடாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் கூறுவோம் இதன் பொருள்
"அல்லாஹ் நாடினால்" என்பதாகும். இதைச்சொல்வது குறித்து குர்ஆனில் 18:23,24, 2:70, 12:99, 18:69, 28:27, 37:102, 48:27 ஆகிய ஏழு இடங்களில் வருகின்றன.

மக்கா குரைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டு திணற வைத்தனர். அவர்களுடைய மார்க்கத்தை போலி மார்க்கமாக சதி சூழ்ந்து யத்ரிபிலுள்ள யூத ரப்பிகளிடம் ஆலோசனை கலந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அணுகி குகைவாசிகள்பற்றி வினவினர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ "இன்ஷா அல்லாஹ்"(இறைவன் நாடினால்) என்று கூறாது "நாளை இதற்கு பதில் கூறுகிறேன்" என்று மறுமொழி பகர்ந்தனர். இவ்வாறு அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாதன் காரணமாக இறைவனிடமிருந்து அவர்களுக்கு இரண்டு வார காலமாக வஹீ வருவது நின்று விட்டது.

வாக்களித்தபடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தநாள் பதில்கூறாததைக் கண்ட குறைஷகள் அவர்களை பொய்யெரென இழித்துரைக்கத் துவங்கினர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ கண்ணீர் மல்க தம் பாவம் பொறுத்தருள மண்டாடினர். அப்பொழுது இறைவனிடமிருந்து "நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்பவனாக இருக்கிறேன் என்று யாதொரு வாக்குறுதியும் அளிக்க வேண்டாம் என்றும் அல்லாஹ் நாடுவதையல்லாது இன்னும் நீர் எதையேனும் மறந்தீரானால் உம் இரட்சகனை நினைவு கொள்வீராக! (18:23,24) என்றும் அருள் எச்சரிக்கை வந்தது. அத்துடன் குகைவாசிகள் பற்றிய சில விவரங்களையும் இறைவன் கூறினான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே இந்த எச்சரிக்கை என்றால் நம்முடைய கதி என்ன? சிந்திக்க வேண்டாமா?

ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்துணை சிறியதாயினும், பெரிய தாயினும். அதனை அளிக்கு முன் "இன்ஷா அல்லாஹ்" (இறைவன் நாடினால்) என்று கூறினால், அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கடமைப் பட்டவராகிறார். மேலும் அல்லாஹ், அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றப் போதுமானவன்.

எனவே ஒருவர் மற்றவருக்கு வாக்குதி வழங்குமுன் "இன்ஷா அல்லாஹ்" (இறைவன் நாடினால்) எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும். இன்ஷா அல்லாஹ் எனக்கூறுவதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பேற் படுகிறது.

உலகில் அனைத்துச் செயலகளும், இயக்கங்களும், அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன. மனித வாழ்வின் அனைத்துப் போக்குகளும் இறைக் கட்டளைப்படியே நடந்தேறுகின்றன. எனவே இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும். இந்நிலையில் என்று விளையாட்டுக்குக்கூட ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ சொல்வது மாபெரும் தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

‘மனிதன் நாட்டத்தில் எதுவும் நடப்பதில்லை - இறைவன் நாட்டமின்றி ஓர் அணுவும் அசைவதில்லை’. இதுதான் ஆன்மீகவாதியின் நம்பிக்கையாக இருக்க முடியும், அவர் எந்த மதத்தைச்சார்ந்தவராக இருப்பினும் சரியே.

மீண்டும் நினைவு படுத்துகிறோம்: உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது, உச்சரிக்கவும் கூடாது. சிந்திப்போம் சிர்பெறுவோம்.