FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 02, 2012, 04:12:18 AM

Title: அடுத்தடுத்து 'அச் அச்'..?, அலர்ஜியா இருக்கும்!
Post by: RemO on February 02, 2012, 04:12:18 AM
நச் நச் என்ற தும்மல், நம நம என்ற அரிப்பு, திடீரென செந்நிற தடிப்புகள் தோன்றி ஆளை அச்சுறுத்தும். எதனால் என்று யோசித்தால் திடீரென நினைவுக்கு வருவது நாம் உண்ட உணவு.

குறிப்பிட்ட சில பொருட்கள் சிலருக்கு ஆகாது. தெரியாமல் அதை உண்ட உடன் அது தன்னோட வேலையை காட்டத் தொடங்கிவிடும். எனவே அலர்ஜி உடையவர்கள் அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் பிரச்சினையே இல்லை.

அரிப்பு, கொப்புளங்கள்

சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படுவதும் கூட அலர்ஜியாக இருக்கலாம்.

மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தியும் ஏற்படும். அதோடு, அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு.

வேர்க்கடலை, பட்டாணி

பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் ஏற்படுத்தக் கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்கிறது. இதுதவிர, முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன.

இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு.

உணவுகளை தவிருங்கள்

அலர்ஜியை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான். வெளியில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம்.வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல் மேல்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலத்தை கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மாசும், தூசும் எதிரி வெளிப்புற தூசி, குப்பைகளில் இருந்து வரும் வாசனையினால் அலர்ஜி ஏற்படுகிறது எனில் மூக்கை மூடும் மாஸ்க் உபயோகிக்கலாம். வீட்டில் தூசு படியாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அலங்காரத்திற்கு உபயோகப்படுத்தும் துணிகளை மாதம் இருமுறை துவைத்து வெயிலில் காயவைத்து பின்னர் உபயோகிக்கலாம்.

நாய் குட்டிகள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளின் ரோமங்களில் இருந்தும், அவைகளிடம் உள்ள ஒரு வித உண்ணிகளும் கூட அலர்ஜியை ஏற்படுத்தும் எனவே செல்லப்பிராணிகளுக்கு முறையான பராமரிப்பு அவசியம்.

இதையெல்லாம் விட ஊட்டச் சத்துள்ள உணவுகளை முறையாக உட்கொண்டால் எந்த வித நோய் என்றாலும் எதிர்த்துப் போராடலாம்.