FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on June 24, 2016, 06:57:07 PM

Title: இல்லாத உலகம் இல்லை
Post by: thamilan on June 24, 2016, 06:57:07 PM
ஆசை இல்லாத மனிதன் இல்லை
பாசம் இல்லாத தாய்மை இல்லை
கர்வம் கொள்ளாத கலைஞன் இல்லை
பொய்கள் கூறாத கவிஞன் இல்லை

முகமூடி அணியாத முகங்கள் இல்லை
ரகசியங்கள் இல்லாத இதயங்கள் இல்லை
எழுதாத கவிதைக்கு அணிந்துரை இல்லை
எதுகைக்கும் மோனைக்கும் அவசியம் இல்லை

கல்லுக்கும் புல்லுக்கும் குடைகள் இல்லை
வீதியில் வாழ்வோருக்கு வீடுகள் இல்லை
போதனை இல்லாத மதங்கள் இல்லை
போதி மரம் இங்குண்டு புத்தன் இல்லை

வேதனை இல்லாத வாழ்க்கை இல்லை
விடியாத இரவென்று எதுவும் இல்லை 
சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை
சோம்பேறிகள் சாதனைகள் படைப்பதும் இல்லை

சேதாரம் இல்லாமல் நகைகள் இல்லை
தேய்மானம் என்பது தமிழுக்கு இல்லை