FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on June 03, 2016, 07:06:58 PM
-
எங்கேயும் போய்விடவில்லை
அம்மா
காலைப்பனியில் காலார நடக்க
பாதணிகளை அணியும் போது
கழுத்தில் கம்பளித் துணியை
சுற்றி விடுகிறாள்
தவளையும் பாம்புமாய்
கபம் தொண்டையில் சண்டையிடுகையில்
மணக்க மணக்க
தழை ரசம் வைத்துத் தருகிறாள்
தூங்கும் போது
கால்அமுக்கி இதமாக தலைதடவி
தூங்க வைக்கிறாள்
பண்டிகை வந்தால்
பளிங்குக் கிண்ணமாய்
வீட்டை புதுப்பிக்கிறாள்
வாயார வயிறார
பண்டங்களை சமைத்துப் பரிமாறுகிறாள்
மருமகள் மீது
கொள்ளைப் பிரியம்
மடியில் வைக்காத குறையாய்
மனதில் வைத்துத் தாங்குகிறாள்
வெளியூர் சென்று
தாமதமாய் வந்தால்
பலதடவைகள் கதவாக மாறி காத்திருக்கிறாள்
காலையில் காப்பி
மேசைமேல் வைக்கும் ஓசை கேட்டு
அம்மா என்று அழைக்கத் திரும்பினேன்
மனைவி!!
பூச்சரம் எடுத்து
அம்மாவின் படத்துக்கு
மாலையிட்டாள் அவள்
எங்கேயும் போய்விடவில்லை
அம்மா!!