FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on January 26, 2012, 07:41:27 AM

Title: நோய் தீர்க்கும் மல்லிகை தேநீர்!
Post by: RemO on January 26, 2012, 07:41:27 AM
“மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மனம் மயக்கும் நறுமணத்தை கொண்டது மல்லிகை மலர். பெண்களுக்கு பிடித்த மலர்களிலேயே மல்லிகைக்குத்தான் முதலிடம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மல்லிகையின் நறுமணத்தில் மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வெள்ளை நிறத்தில் பூத்துக்குலுங்கும் மல்லிகை மலர்கள் நறுமணத்திற்காக தலையில் சூடுவதற்கு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.

மருத்துவ குணம்

மல்லிகையில் சாதிமல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி, என பல்வேறு வகைகள் உள்ளன. இதன் இலை, பூ, மொட்டு, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.

தினமும் ஓரிரு மல்லிகைப்பூக்களை உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

மல்லிகைப்பூவை பெண்கள் சூடுவதால் அவர்களுக்கு அழகோடு பல பயன்களும் கிடைக்கிறது.

மல்லிகை டீ

மல்லிகைப்பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து, டீ போல போல் காய்ச்சி குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும். நீர்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும். மல்லிகைப் பொடி டீ தினமும் குடித்தால் எலும்புருக்கி நோய், நுரையீரல் புற்று நோய்களின் பாதிப்பு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.

குடற்புழுக்கள் நீங்கும்

குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும். வாய்ப்புண்களுக்கும் மல்லிகை சிறந்த மருந்து.

நரம்பு தளர்ச்சி நீங்கும்

நேரங்கடந்த உணவு, சத்தான உணவின்மை போன்றவற்றினால் சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியடைந்து உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இவர்கள் மல்லிகைப்பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

கண்களில் சதை வளர்வதால் ஏற்படும் பார்வைக் கோளாறுகள் நீங்க மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.

மல்லிகைப் பூக்களை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வர தலைவலி குணமடையும்.

பெண்கள் நோய் தீர

பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையினால் தாய்பால் கொடுக்க முடியாமல் மார்பில் சுரந்த பால் கட்டிக்கொண்டு வலி ஏற்படும். இந்த சமயத்தில் மல்லிகைப்பூக்களை அரைத்து மார்பகத்தில் பற்றுபோல் போட்டால் வலி குறைந்து பால் சுரப்பது நிற்கும். மார்பகத்தில் தோன்றும் நீர்கட்டிகள் குணமடையவும் மல்லிகையை பற்று போடலாம். இதனால் வலி நீங்கி கட்டிகள் குணமடையும்.

மல்லிகைப்பூவை நன்கு கொதிக்க வைத்து ஆறியபின்பு குடித்து வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் பிரச்சினைகள் குணமடையும்.
மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் கர்ப்பப்பைக்கு வலுவூட்டி பிரசவத்தின் போது உண்டாகும் வலியை குறைத்து சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது.

பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெயை பயன்படுத்தலாம். நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமடையும்.

நோய் எதிர்ப்பு சக்தி

மல்லிகைப்பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.

மல்லிகை மொட்டுக்களை புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமடையும்.

மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.