FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 12, 2016, 09:17:26 PM
-
முதுமையை கொஞ்சம் ஒத்திப் போடலாம்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13166029_1571382953159174_421203379263911240_n.jpg?oh=de0656948a127f5452bab75ebacf7abb&oe=57E2A8B8)
எல்லோருக்கும் நெடுநாள் வாழ வேண்டும் என்று ஆசை. அதிலும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனாலும், இயற்கை அப்படியே இளமையாக மனிதனை வாழவிட்டு விடுவதில்லை. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான மூப்பை உடல் வெளிப்படுத்துகிறது.
மனிதன் பிறந்தவுடனே அவனின் முதுமைக்கான பரிணாமம் தொடங்கி விடுகிறது. வாழ்நாள் முழுவதும் இந்த மூப்பு பணி நடந்து கொண்டே இருக்கிறது.
குழந்தை பிறக்கும்போது அதன் ஒவ்வொரு உறுப்பும் மென்மையாகவும், இளமையாகவும் இருக்கிறது. பின்னர் அந்த உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து நிகழும் இந்த வளர்ச்சியை யாரும் தடுக்க இயலாது. வயதாகும் போது உடல் சம்பந்தமான வளர்ச்சி குறைகிறது. இதன் விளைவாக உடல் சக்தியும், மென்மையான உணர்வுகளும் குறைந்து விடுகிறது.
உடலில் புரதச்சத்து குறைவதே மேற்குறித்த நிலைக்கு காரணம். உடல் வலிமை குறைகிறது. எடை குறையத் தொடங்குகிறது. கண் பார்வை மங்கலாகிறது. முடி நரைக்கிறது. இவையெல்லாமே வயோதிகத்தின் அறிகுறிகள்.
வயோதிகப் பருவத்தில் உடலின் எல்லா உயிர்மங்களிலும், திசுக்களிலும் மாற்றம் விளைகிறது. ஈரல், செரிமானச் சுரப்பி, குடல், கிட்னி ஆகிய உறுப்புகளின் உயிர்மங்கள் பலவீனமடைகின்றன. ரத்தக்குழாய்களும், பழையதாகி விடுவதால் அவற்றால் அதிகமான ரத்தத்தையும், சத்துக்களையும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்ல முடிவதில்லை. இதனால் மூப்பு அதிகரிக்கிறது. கண், காது, சருமம், பற்கள், ஜீரண சக்தி அனைத்துமே பாதிப்படைகின்றன. ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. இறுதியாக வாழ்நாள் முற்றுப் பெறுகிறது.
வயோதிகம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. சிலருக்கு விரைவிலேயே வயோதிகம் எட்டிப்பார்க்கிறது. சிலருக்கு சற்று தாமதப்படுகிறது. ஆனால், யாரும் வயோதிகத்தில் இருந்து தப்ப முடியாது. உடற்கூறின் இந்த இயக்கத்தை யாரும் தடை செய்ய முடியாது.
ஆனால், முதுமையை கொஞ்சம் தள்ளிப் போடலாம். அதற்கு சத்தான உணவு, சுத்தமான காற்று, சுகாதார மிக்க சூழ்நிலை, அளவுடன் கூடிய உடற்பயிற்சி இவற்றையெல்லாம் கடைபிடித்து வந்தால் இளமையை நீடித்து முதுமையை ஒத்திப்போடலாம். ஒத்திப்போடும் எண்ணம் மட்டும் போதாது, செயலிலும் இறங்க வேண்டும்.