FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 28, 2016, 08:50:44 PM

Title: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 08:50:44 PM
செஃப் ரஜினி
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F1.jpg&hash=49078e5106d18a43c16aff3db1b335f4067eff10)

தேவையானவை:

 பாசிப்பருப்பு – 200 கிராம், கோதுமை மாவு – 200 கிராம், நெய் – 100 மில்லி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 400 கிராம், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி – 10.

செய்முறை:

 பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, அரை மணி நேரம் ஊற வைத்து வேகவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சர்க்கரை நனையும் அளவுக்கு தண்ணீர் விட்டு  கொதிக்கவிடவும். கம்பிப் பாகு பதம் வந்ததும் அரைத்த பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு இரண்டையும் கலந்து, சர்க்கரைப் பாகில் சேர்த்துக் கிளறவும். கிளறும்போது நெய், கேசரி பவுடர் சேர்க்கவும். அல்வா பதம் போல கெட்டி யானதும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 08:52:01 PM
போண்டா
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F2.jpg&hash=477d2a91f12657205c79c61e3005848340f40107)

தேவையானவை:

 கடலை மாவு – 250 கிராம், உருளைக்கிழங்கு – 250 கிராம், சிறிய பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி –  ஒரு சிறிய துண்டு, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும். இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

 இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 08:53:39 PM
மனோகர பருப்பு தேங்காய்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F3.jpg&hash=d44f3bfe0adde3d1990a2b2772c0a1ad9ee06d13)

தேவையானவை:

அரிசி மாவு – கால் கிலோ, பாகு வெல்லம் – கால் கிலோ, வறுத்து, அரைத்து, சலித்த உளுத்தம்பருப்பு மாவு – 2 டீஸ்பூன்,  எண்ணெய் – அரை லிட்டர், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:

 அரிசி மாவில் முறுக்குமாவு பதத்துக்கு தேவையான தண்ணீர் விட்டு, உளுந்தமாவு சேர்த்துப் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதுதான் மனோகரம். வெல்லத்தை உடைத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கெட்டிப் பாகாக காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு  வெல்லப்பாகை சிறிது ஊற்றி கையில் திரட்டினால்… உருண்டு  வரும். இதுதான் சரியான பதம்). பாகை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, செய்து வைத்திருக்கும் மனோகரத்தை சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் பருப்பு தேங்காய் கூட்டில் உள்புறம் சிறிது நெய் தடவி மனோகரத்தை நிரப்பவும். பிறகு, கூட்டை அகற்றினால், கூம்பு வடிவில் அழகாக இருக்கும் மனோகர பருப்பு தேங்காய்.

குறிப்பு:

 பருப்பு தேங்காய் கூட்டினை கலர் பேப்பரால் அலங்கரித்தால் மிகவும் அழகாக இருக்கும். கூட்டின் உள்புறம் நெய் தடவி இருப்பதால் எளிதாக எடுக்க முடியும். உப்பு சேர்க்க வேண்டாம். பெயர்தான் பருப்பு தேங்காய்… ஆனால், தேங்காய் சேர்க்கத் தேவையில்லை.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 08:55:26 PM
ரவா கிச்சடி
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F4.jpg&hash=1a748a1b4af636b4cc49bf4b0d21d34db938dd1e)

தேவையானவை:

ரவை – 250 கிராம், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) – ஒரு கப், கேரட் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று,  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு – 10, நெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கேரட்டை நெய்யில் வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, ரவையுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேவையான உப்பு சேர்த்து, ரவை – காய்கறிகள் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 08:57:10 PM
தேங்காய் சாதம்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F5.jpg&hash=aff2720c2924782b5230ab1958249a8bd8d22050)

தேவையானவை:

பாசுமதி அரிசி – 250 கிராம், நன்கு முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, வறுத்த முந்திரி – 10, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 பாசுமதி அரிசியில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் பொட்டுக்கடலை தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்து, சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும். கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு:

முந்திரிக்குப் பதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 08:58:24 PM
கீரை வடை
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F6.jpg&hash=afc74cfb888091342f92fdc7832a7b5538babb9c)

தேவையானவை:

உளுத்தம்பருப்பு – 250 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை – இரண்டு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரையை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

 இதே முறையில் காய்களை நறுக்கி சேர்த்தும் வடை தயாரிக்கலாம். இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:00:16 PM
பூந்தி தயிர்வடை
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F8.jpg&hash=e2355ebfe249b182a243660081beeff04a32d4e2)

தேவையானவை:

உளுத்தம்பருப்பு – 200 கிராம், கராபூந்தி – 100 கிராம், தயிர் (புளிக்காதது) – 250 மில்லி, கேரட் துருவல் – 4 டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி –  சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து தண்ணீரை வடிகட்டி… பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தண்ணீரை லேசாக சூடாக்கி வடைகளைப் போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு அகலமான தட்டில் பரவலாக வைத்து, மேலே கேரட் தூவி, பூந்தி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:01:36 PM
பிஸிபேளாபாத்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F9.jpg&hash=ec0e9004fb831ea88fe66ef76a824a1528134818)

தேவையானவை:

அரிசி – 500 கிராம், துவரம்பருப்பு – 400 கிராம், சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) – 20, உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய் – தலா ஒன்று, பீன்ஸ் – 10, உரித்த பச்சைப் பட்டாணி  – ஒரு கப், புளி – 25 கிராம், காய்ந்த மிளகாய் – 4, கொப்பரைத் தேங்காய் –  பாதி அளவு,  தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 6 டீஸ்பூன், நெய் – 100 மில்லி, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், புதினா – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசியுடன் பருப்பு சேர்த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். கேரட், உருளை, பீன்ஸ், குடமிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி, சின்ன வெங்காயம், பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து, வதக்கிய காய்களுடன் சேர்த்து… உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், கொப்பரைத் தேங்காய் துண்டுகள், தனியா, கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்து, கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும். வேக வைத்த சாதம் – பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, சாம்பாரை ஊற்றி நன்கு மசிக்கவும். புதினாவை வதக்கிப் போட்டு நன்கு கலக்கவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:03:45 PM
மிக்ஸ்டு சேவை
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F10%281%29.jpg&hash=7e7e00bddee64eb2c820ac0d592457b96853f0a9)

தேவையானவை:

புழுங்கல் அரிசி – 250 கிராம், பொடியாக நறுக்கிய அல்லது  துருவிய கேரட்,  பொடியாக நறுக்கிய குடமிளகாய் , தேங்காய் துருவல், பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப், சிறிய பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) – 3, எலுமிச்சம் பழம் – ஒன்று, கடுகு – தேவையான அளவு, பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10, எண்ணெய் – 6 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து களைந்து, மிக்ஸியில் கெட்டியாகவும் நைஸாகவும், தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு, மாவை சிறிது உப்பு சேர்த்துக் கலந்து, கெட்டியாகக் கிளறவும். கிளறிய மாவை கெட்டியாக பிசைந்து உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். சேவை பிழியும் அச்சில் உருண்டைகளைப் போட்டு, சேவையாக பிழிந்து, அதை மூன்று பங்குகளாக பிரிக்கவும். கேரட், பட்டாணி, குடமிளகாய், சிறிதளவு பச்சை மிளகாயை வதக்கி ஒரு பங்கு சேவையுடன் சேர்த்து, கடுகு தாளித்து கலக்கவும். தேங்காய் துருவலில் சிறிதளவு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து தேங்காய் சிவக்கும் வரை வறுத்து மற்றொரு பங்கு சேவையுடன் கலந்து சிறிதளவு வறுத்த முந்திரி சேர்க்கவும். கடுகு, சிறிது பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து மீதமுள்ள சேவையுடன் கலந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். மீதமுள்ள முந்திரியை சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:05:10 PM
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F11.jpg&hash=f806ddb53ff87a95bcfef5867463b56a86937fca)

தேவையானவை:

சேப்பங்கிழங்கு – 500 கிராம், சோள மாவு – ஒரு டீஸ்பூன், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 200 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 சேப்பங்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். ஆறியவுடன் தோல் உரித்து சரிபாதியாக நறுக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நறுக்கிய சேப்பங்கிழங்கு துண்டுகளில் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது சிறிதாக சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

 மாவுடன் தண்ணீர் சேர்க்கக் கூடாது, சேப்பங்கிழங்குடன் சோள மாவு சேர்ப்பதால் மொறுமொறுவென இருக்கும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:18:48 PM
வெஜிடபிள் புலாவ்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F12.jpg&hash=85a42b5dbac137f8af0c58d20dfa113962e9e91f)

தேவையானவை:

 பாசுமதி அரிசி – 250 கிராம், பீன்ஸ் – 6, குடமிளகாய் (சிறியது) – ஒன்று, உரித்த பச்சைப் பட்டாணி – ஒரு கப், கேரட், பெரிய வெங்காயம் – தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, நெய் – 100 மில்லி, வறுத்த முந்திரி – 10, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். பீன்ஸ், குடமிளகாய், கேரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கி, உப்பு போட்டு, சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன், வறுத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்தால்… வெஜிடபிள் புலாவ் ரெடி!

குறிப்பு:

 பனீர் பொரித்து சேர்க்கலாம். இதற்கு தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் ராய்தா சூப்பர் காம்பி னேஷன்!
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:20:13 PM
கோசுமல்லி
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F13.jpg&hash=d496e27c70dd46358a816519984ad5fbc1189cb6)

தேவையானவை:

பாசிப்பருப்பு – 100 கிராம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் – தலா ஒரு கப், எலுமிச்சம் பழம் – ஒரு மூடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 பாசிப்பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடியவிட்டு… கேரட் துருவல், வெள்ளரிக்காய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து, நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு தாளித்து சேர்க்கவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:21:49 PM
பொங்கல்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F14.jpg&hash=40bf0fa6949b042711f92deb60f32ea91e6bd652)

தேவையானவை:

அரிசி – 250 கிராம், பாசிப்பருப்பு – ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய இஞ்சி  – 2 டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு,  நெய் – 100 மில்லி, வறுத்த முந்திரிப்பருப்பு – 10, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 பாசிப்பருப்பையும் அரிசியும் ஒன்று சேர்த்து லேசாக சூடு வரும் வரை வறுத்து, ஒரு பங்கு அரிசிக்கு ஐந்து பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு, சீரகத்தை லேசாக மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு இஞ்சி, மிளகு – சீரகப் பொடி, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து… கறிவேப்பிலை, வறுத்த முந்திரி சேர்க்கவும். இதை வேகவைத்த சாதத்துடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு:

 தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். சாம்பார், கொத்சுவும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:23:22 PM
பீன்ஸ் பருப்பு உசிலி
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F15.jpg&hash=5a4c110d5b842ed510d4657fcaf2b604f6a3eb46)

தேவையானவை:

பீன்ஸ் – 200 கிராம், துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 3,  கடுகு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 பீன்ஸை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பீன்ஸை தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… அரைத்த பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும். பின்பு பீன்ஸையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:

 இதே முறையில் கோஸ், அவரைக்காய், கொத்தவரங்காயிலும் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:26:00 PM
வெண்டைக்காய் மோர்க்குழம்பு
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F16.jpg&hash=0ae5b24c6695edfec980a5e1e9ebe127b8dfa6ac)

தேவையானவை:

வெண்டைக்காய் – 20, அதிக புளிப்பு இல்லாத மோர் – 500 மில்லி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், அரிசி – ஒரு டீஸ்பூன்,  கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு –  தேவையான அளவு.

செய்முறை:

 வெண்டைக்காய்களை காம்பு நீக்கி இரு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, மோருடன் கலந்து, உப்பு போட்டுக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம் தாளித்து…  மோர் கலவையை சேர்த்து, வதக்கிய வெண்டைக்காய் துண்டுகளையும் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:

 இதேமுறையில் கத்திரிக்காயிலும் மோர்க்குழம்பு தயாரிக்கலாம்
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:27:23 PM
பருப்பு வடை
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F17.jpg&hash=9f605c9743deb28c11e19923e5e167a55c297bb3)

தேவையானவை:

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி… காய்ந்த மிளகாய் இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாகவும், சிறிது கொரகொரப்பாகவும் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:28:53 PM
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F18.jpg&hash=2774b199e6c9a26dc5f13879f06875520c65b74a)

தேவையானவை:

காலிஃப்ளவர் (சிறியது) – ஒன்று, சோள மாவு – 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 200 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 காலிஃப்ளவரை, கொஞ்சம் பெரிய சைஸ் பூக்களாக நறுக்கி, தண்ணீர் விட்டு சிறிது நேரம் சூடாக்கி, தண்ணீர் வடிக்கவும். சோள மாவு, கடலை மாவு, கேசரி பவுடர், அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, காலிஃப்ளவருடன் சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசிறி வைத்த காலிஃப்ளவரை பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

  காலிஃப்ளவரை வேக வைத்து, மசாலா கலவையும் தயார் செய்து வைத்து, சாப்பிடும் சமயம் சூடாகப் பொரித்தால், மிகவும் ருசியாக இருக்கும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:30:17 PM
கதம்ப சாம்பார்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F19.jpg&hash=cd194280141fd3227d364bfa092e67b5dc0ae8d9)

தேவையானவை:

 துவரம்பருப்பு – 200 கிராம், புளி – 100 கிராம், சாம்பார் பொடி – 6 டீஸ்பூன், கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட் – தலா ஒன்று, அவரைக்காய் – 4, பச்சை மிளகாய் – 2 , தேங்காய் துருவல் – ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 துவரம்பருப்பை குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல்  சேர்த்து அரைக்கவும். கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட், அவரைக்காய், பச்சை மிளகாயை நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும். புளிக் கரைசலை அதில் விட்டு… உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு கலவை, வேக வைத்த துவரம்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:31:31 PM
மணத்தக்காளி வற்றல் குழம்பு
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F20.jpg&hash=08aa86f57b03c5f1bbe19b9893d6fe83ff37e814)

தேவையானவை:

புளி – 25 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மணத்தக்காளி வற்றல், எண்ணெய், சாம்பார் பொடி – தலா 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றை தாளித்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:

 இதே முறையில், பச்சை காய்களைப் பயன்படுத்தியும் குழம்பு தயாரிக்கலாம்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:36:09 PM
சேனை வறுவல்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F21.jpg&hash=7e4faf11725ddb7cfc7a38c27c6f9ce08e094250)

தேவையானவை:

சேனைக்கிழங்கு – 250 கிராம், மஞ்சள்  தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 சேனையை தோல் சீவி, வறுவலுக்கு நறுக்கும் விதத்தில் சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாகக் கழுவி தண்ணீர் வடியவிடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்திருக்கும் சேனைத் துண்டுகளைப் பொரித்து எடுத்து,  மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு:

 காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:37:36 PM
அவியல்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F22.jpg&hash=6e550755f619265e17088fae6ad4255c4718886b)

தேவையானவை:

கத்திரிக்காய் – 2, பீன்ஸ் – 6, சௌசௌ – பாதி, அவரைக்காய் – 10, கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று, பரங்கிக்கீற்று – பாதி அளவு, பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல், தயிர் – தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 கத்திரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், சௌசௌ, கேரட், பரங்கிக்கீற்று, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் – பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்து சேர்த்து, தயிர் சேர்த்து, தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:

 அடைக்கு, இந்த அவியல் தொட்டு சாப்பிட்டால்.. அற்புத சுவையில் இருக்கும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:47:35 PM
பூரி – சன்னா
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F23.jpg&hash=a0ad07e51cae9ca08e23352d8ff687116b608fa6)

தேவையானவை:

கோதுமை மாவு – 250 கிராம், கொண்டைக்கடலை – 100 கிராம், தக்காளி, – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், கசகசா – ஒரு டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து சிறிய பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். தக்காளி, காய்ந்த மிளகாய், கசகசா, தேங்காய் துருவல், தனியா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்த கொண்டைக் கடலையுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு:

 பூரி – சன்னா மிகவும் சுவையான காம்பினேஷன். கோதுமை மாவு பிசைந்த உடனேயே பூரியை பொரித்துவிட வேண்டும். சன்னாவின் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவலாம்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:49:15 PM
ஜீரா போளி
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F24.jpg&hash=d6a2e1acde0fc36b42959c125642740cfaeb7172)

தேவையானவை:

ரவை, சர்க்கரை – தலா 200 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 500 மில்லி.

செய்முறை:

 ரவையை தண்ணீர், கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, இதை மீண்டும் பிசைந்து அப்பள வடிவில் இட்டு எண்ணெயில் பொரிக்கவும். சர்க்கரைப் பாகு வைத்து (கம்பிப் பதம்), பொரித்த போளிகளைப் போட்டு இருபுறமும் சர்க்கரைப் பாகு படும்படி புரட்டி, தனியாக தட்டில் எடுத்து வைக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.

குறிப்பு:

 இதை சாதாரண ரவையில் செய்ய வேண்டும். ரோஸ்டட் ரவை பயன்படுத்தக் கூடாது. ஒரு வாரம் வரை வைத்தி ருந்து சாப்பிடலாம். கொதிக்கும் பாலில் இந்த போளியை நனைத்து எடுத்து, ஊறிய உடன் சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:51:24 PM
பால் பாயசம்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F25.jpg&hash=67741cb6331250a97ec16b94a98ebaf197056eed)

தேவையானவை:

பாசுமதி அரிசி – ஒரு கைப்பிடி அளவு, பால் – 2 லிட்டர், சர்க்கரை – 400 கிராம், வறுத்த முந்திரி – 10, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

செய்முறை:

 பாசுமதி அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும் (குக்கரை மூடக் கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிவிட வேண்டும்). பால் கொதித்து, அரிசி வெந்து,  பால் பாதியளவுக்கு குறுகி  வரும்போது சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:

 பாதாம்பருப்பை நான்கு பொடித்து சேர்க்கலாம்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:57:30 PM
அக்காரவடிசல்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F26.jpg&hash=7d52c8e2456d94a04facdb8446ac79f952073c49)

தேவையானவை:

அரிசி – அரை கிலோ, வெல்லம் – கால் கிலோ, பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – 200 கிராம், கல்கண்டு – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,  உலர் திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு – தலா 10, நெய் – 100 மில்லி,  குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை:

 அரிசியுடன் ஒரு லிட்டர் பால், அரை லிட்டர் தண்ணீர் கலந்து குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் வெல்லப்பாகு, சர்க்கரை, கல்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நெய்யில் திராட்சையை வறுத்து சேர்த்து, வறுத்த முந்திரிப்பருப்பையும் போடவும்… ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 09:59:03 PM
பழப்பச்சடி
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F27.jpg&hash=88b56a1458a26947b4c015cf1b513c5fb5dbcfb6)

தேவையானவை:

தக்காளிப்பழம் – 4, திராட்சைப் பழம் – 100 கிராம், சர்க்கரை – 2 கப், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

 தக்காளியை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சர்க்கரையை நனையும்வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் வதக்கியத் தக்காளியைப் போட்டு, பிறகு திராட்சைப் பழத்தையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு:

 பப்பாளிப்பழத் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 10:00:22 PM
வெண்டைக்காய் ரோஸ்ட்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F28.jpg&hash=d4ae590b612e49b6d5ee0ee25d721a4f0955a3a1)

தேவையானவை:

 வெண்டைக்காய் – 250 கிராம், கடலை மாவு, அரிசி மாவு – தலா 4 டீஸ்பூன், சோள மாவு – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி, உலரவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, வெண்டைக்காயுடன் நன்றாக கலக்கவும். பிறகு, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 10:01:41 PM
பைனாப்பிள் ரசம்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F29.jpg&hash=f0515a2ed87f3bbf0094795a6ff21c0ddb9939c0)

தேவையானவை:

பைனாப்பிள் – 4 துண்டுகள், புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தண்ணீர் – 250 மில்லி, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், மிளகு – சீரகத்தூள் – கால் டீஸ்பூன், வேக வைத்த பருப்பு –  ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன்,  கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 புளியை  தண்ணீர் விட்டுக் கரைத்து, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு… கடுகு, கறிவேப்பிலை, மிளகு – சீரகத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 10:03:08 PM
ஃப்ரூட் தயிர்சாதம்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F30.jpg&hash=5c99d40f482905c0fa162da0aaee6a421f847a7f)

தேவையானவை:

அரிசி – 250 கிராம், புளிக்காத தயிர் – 100 கிராம், கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை – தலா 10, மாதுளம் முத்துக்கள் – ஒரு கப், கேரட் துருவல் – 4 டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பால் – 300 மில்லி, வறுத்த முந்திரி – 10, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 ஒரு பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்கு மசித்து பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து… திராட்சை, மாதுளம் முத்துக்கள், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த  முந்திரி தூவவும்.

குறிப்பு:

 மாங்காய், வெள்ளரிக்காய், கேரட் சேர்த்தும் தயாரிக்கலாம்.
Title: Re: ~ 30 வகை கல்யாண சமையல் ~
Post by: MysteRy on April 28, 2016, 10:04:31 PM
முந்திரி கேக்
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2012%2F09%2Fyzuzyz%2Fimages%2F31.jpg&hash=36a547565cd029fd5d3fb88b391d0e57fc98c55a)

தேவையானவை:

முந்திரிப்பருப்பு – 40, சர்க்கரை – 200 கிராம், நெய் – 100 மில்லி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:

 முந்திரிப்பருப்பை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில், நனையும் வரை தண்ணீர் விட்டு கம்பிப் பதமாக பாகு காய்ச்சி, முந்திரிப் பொடியை சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கெட்டியாக வரும்போது ஒரு பிளேட்டில் நெய் தடவி, கிளறியதை கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு:

 குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகள் போடலாம். பாதாம் பருப்பிலும் இதேமுறையில் கேக் தயாரிக்கலாம்.