FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: SiVa000000 on April 06, 2016, 03:06:58 PM

Title: இருபதும் இரண்டும்
Post by: SiVa000000 on April 06, 2016, 03:06:58 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FBIiklVF.jpg&hash=56f24dd91fc4a661cc843de8f8070ed97dc4b958)
ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.

ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.

“முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?’ என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்:

“”நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?”

ரங்கன் சொன்னான்: “”இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!”

முதலாளி சொன்னார்: “”ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!.


செ.சத்யா செந்தில், தமிழ் முதலாம் ஆண்டு. மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.
Title: Re: இருபதும் இரண்டும்
Post by: SarithaN on December 19, 2016, 01:29:27 AM
சிவா அண்ணா வணக்கம்,

இருபதும் இரண்டும், அழகிய கருத்துரை அண்ணா;
இப்படியான தெளிவுகள் இல்லாது வாழ்க்கை
நேரத்தை வீண்விரையம் செய்வது தீரா நோய்க்கு
ஒப்பானது,

அழகான பதிவு அண்ணா, வாழ்க வளமுடன்.
நன்றி