FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 22, 2016, 06:31:27 PM

Title: என் மனமாலையில் இருந்து சிதறிய முத்துக்கள்
Post by: thamilan on March 22, 2016, 06:31:27 PM
    இருட்டு
புரண்டு புரண்டு
தூங்கத் தொடங்கியபோது
பரண் மேலேறி அமர்ந்தது இருட்டு


    கண்ணீர்
கடலோடு என்ன உறவோ
கண்ணீரும் கரிக்கிறதே
உப்பு

     மின்சாரம்
கண்களுக்கு ஆயிரம்  வோல்டேஜ்
அவள் ஒரு அழகிய
அனல் மின்நிலையம்


            குறி
ஆடை என்றும்
அடைப்புக் குறிக்குள்
அவள் ஒரு அழகிய
ஆச்சரியக் குறி


    கூண்டுப் பறவை
கூடு விட்டு கூடு  பாயும்
போலிச் சாமியார்
கூண்டு  விட்டு கூண்டு
மாற்றப்பட்டார்   

      புத்தகம்
புத்தகம் என்பது பூந்தோட்டம்
அர்த்தம் என்பது ஆணிவேர்
வாக்கியங்கள் எல்லாம் கிளைகள்
எழுத்துக்கள் எல்லாம் மலர்கள்
வாசகர் எல்லாம் வண்டுகள்
கவிதைகள் எல்லாம் தின்னத் தின்ன
திகட்டாத தேன் கூடுகள்

       
   வாழ்க்கை
இனி வாழப்போகும்
காலங்களை விட
அதிசயம்
இது வரை
வாழ்ந்து முடித்த
காலங்களே

     மனம்
எல்லா ஆசைகளையும்
கவலைகளையும்
கோபங்களையும்
சந்தோஷங்களையும்
உள்வாங்கும்
ஓர் அதிசயக் குப்பை மேடு
நம் மனம்

     பிரசவவலி
காலம் மாறி விட்டது
தாய் தந்தையருக்கு
ஆண்குழந்தை பிறந்தால்
ஆனந்தம்
பெண்குழந்தை பிறந்தால்
பேரானந்தம்
ஒவ்வொரு பிறந்தநாளன்றும்
நாம் மறக்கக் கூடாதது
தாயின் பிரசவவலி

    கண்ணீரில் மலர்ந்த பூக்கள்
உனது நினைவில்
என்னோடு சேர்ந்து
பேனாவும் அழ
காகிதத்தில்
ஈரமாய் மலர்கிறது
கவிதைப் பூக்கள்


       என் காதலி
என்னை காதலித்தவர்கள்
பலர்
இன்னும் காதலிப்பவர்
சிலர்
என்னையே நினைத்து வாழ்பவர்
சிலர்
என்னிடம் காதல் சொல்லப் பயந்தவர்கள்
பலர்
ஆனால்
நான் காதலிப்பது மட்டும்
என் காதலியை


     போட்டா போட்ட போட்டி
துடிக்கிறதே மனம் - ஆனால்
எதிர்த்துக் கொல்கிறதே
அறிவு
நாற்பதிலே  காதலா
நல்ல துணையை மறந்து
இன்னொன்றா
எப்படியாவது நாற்பதிலிருந்து
இருபதுக்குப் போக போக ஆசைபடுகிறது
மனம்
கடந்தகாலங்கள் திரும்புவதில்லை என்கிறது
அறிவு
Title: Re: என் மனமாலையில் இருந்து சிதறிய முத்துக்கள்
Post by: PraBa on March 22, 2016, 07:56:18 PM
சிந்தனை வெகுசிறப்பு
வாழ்த்துக்கள் தமிழன்..,
Title: Re: என் மனமாலையில் இருந்து சிதறிய முத்துக்கள்
Post by: thamilan on March 23, 2016, 08:13:42 AM
உனக்குச் சொந்தமான
எல்லாம் என்னிடம் இருக்கிறது
எனக்கு சொந்தமான நீ மட்டும்
என்னிடம் இல்லை

மழையில் நனைந்த
அவள் உருவத்தைக் கண்டு
சாலையோர மரங்கள் கூட
உடல் சிலிர்த்தன

நீ என்னைக் காயப்படுத்தும்போதெல்லாம்
கண்ணீராக வடிகிறது ரத்தம்
நீ உன் புன்சிரிப்புடன்
என்னைப் பார்க்கும் போதெல்லாம்
அந்தக் கண்ணீரே கவிதையாகுகிறது

உன் இதயம் ஒரு கல்லறை
அங்கே அடக்கம் செய்யப்பட்டது
எனது காதல்
உன் கல்லறையில் பூத்த
கல்லறை மலர் நான்

முத்தத்தால் ஒவ்வொருவரும்
அன்பையும் காதல்லயும்
உறிஞ்ச எத்தனித்து
வெறும் உமிழ்நீரோடு முடிந்து போகிறார்கள்

நீ படிகள் மேலேறி
கோவிலுக்கு வரும் அழகை
ரசிப்பதற்காகவே
கோபுரத்தின் மேலேறி நிற்கின்றன
சிலைகள்

எந்த சிகரத்தையும்
வலம் வர முடியும்
என்னால்
சிறகாக நீ இருந்தால்

பெண் ஒரு அகல் விளக்கு
அணைத்திட எரியும்
அதிசய விளக்கு
 
Title: Re: என் மனமாலையில் இருந்து சிதறிய முத்துக்கள்
Post by: thamilan on March 25, 2016, 01:58:57 PM
     ஊனம்

திட்டுத் திட்டாய்
திசை திசையாய்
தவழ்ந்து செல்லும்
கால்கள் இல்லாத
மேகங்கள்

அட
ஊனத்தையும் மீறிய
உன்னத வெற்றி
என்று
ஆண்டவன் உலகுக்குக் காட்டும்
உற்சாக டானிக்

Title: Re: என் மனமாலையில் இருந்து சிதறிய முத்துக்கள்
Post by: thamilan on April 04, 2016, 07:57:32 PM
உன் காதல் கடிதங்களை
எரித்து விட்டேன்
காயங்களை என்ன செய்வது


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னல்
ஒரு பெண் இருப்பதுபோல
ஒவ்வொரு ஆணின்
கண்ணீர் துளிகளுக்குப்  பின்னாலும்
ஒரு பெண் இருக்கிறாள்


விந்தை  உதிரமாக்கி
 உதிரத்தை கருவாக்கி
 கருவை உயிராக்கி
உயிரை உருவமாக்கி
உருவத்தை உலகுக்கு அளித்திடும்
படைப்பாளி அம்மா


மழைக்கும் வெயிலுக்கும்
ஒரே குடை
என் வாழ்வுக்கும் சாவுக்கும்
நீ
Title: Re: என் மனமாலையில் இருந்து சிதறிய முத்துக்கள்
Post by: thamilan on June 24, 2016, 07:21:12 PM
         அழகு

எதுகையும் மோனையும் கூட்டி
நான் எழுதிய கவிதைகள்
சுமாராய் இருந்தது
எதுவும் இல்லா என் குழந்தையின் கிறுக்கல்கள்
மிக அழகாய் இருந்தது


              அம்மா

அழகான உலகுக்கு
அன்பான உயிர்களுக்கு
ஆண்டவன் எழுதிய அணிந்துரை
அம்மா!!


            பிரியம்

எல்லோரிடமும் இருக்கிறது
பலசமயம்  அது
மாவோ சொன்னது போல
பன்றிகளுக்கு முன் இறைந்து கிடைக்கும்
முத்துக்களாக இருக்கிறது


              பாவ புண்ணியங்கள்

பாவம் செய்தவனுக்கு
நரகத்தில் சாத்தான்கள் கை குலுங்குகின்றன
புண்ணியம் செய்தவனுக்கு
சொர்கத்தில் தேவதைகள் சாமரம் வீசுகின்றன



                    கையொப்பம்

கையொப்பங்களே வாழ்க்கையை
தீர்மானிக்கின்றன
இரண்டு பேருடைய கையொப்பம் அவர்களை
இணைக்கிறது
அதே இரண்டு பேருடைய கையொப்பம்
அவர்களை பிரிக்கவும் செய்கிறது
Title: Re: என் மனமாலையில் இருந்து சிதறிய முத்துக்கள்
Post by: JoKe GuY on June 26, 2016, 12:39:18 PM
    இதமிழ் கவிஞர் என்பதை இந்த கவிதைகள் மூலம் நிருபித்து விட்டீர்கள் பாராட்டுக்கள் உங்களின் கவிதை பூங்காவில் இன்னும் கவிதை பூக்கள் பூக்க வேண்டும்