FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on January 17, 2012, 03:58:16 PM
-
உங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பெரிய யானை வளர்க்கிறீர்கள். அந்த யானையைக் கட்டிப்போடுவதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள்?
தோல் பட்டை? தாம்புக் கயிறு? இரும்புச் சங்கிலி?... இவை எதுவும் தேவையில்லை,யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டுவைத்தாலே போதும்.
இது என்ன கூத்து? அத்தனை பெரிய மிருகத்தைக் கட்டிப் போடுவதற்குத் தக்கனூண்டு குச்சியா?யானை நினைத்தால் அரை நொடியில் அறுத்துக்கொண்டு ஓடிவிடுமே.
உண்மைதான். ஆனால், அந்த யானை ‘நினைக்க’ வேண்டுமே, அதான் மேட்டர்!
சின்ன வயதில்,அந்த யானைக்குட்டியை ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் பிணைத்து நன்றாகக் கட்டிப்போட்டிருப்பார்கள். யானைக்குட்டி அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவோ போராடிப் பார்க்கும். இழுக்கும், தள்ளும், முட்டும், மோதும், ஒரு பலனும் இருக்காது.
இப்படிக் கொஞ்ச நாள் போராடித் தோற்கிற யானைக்குட்டி, ஒருகட்டத்தில் தன்னால் இந்தப் பிணைப்பிலிருந்து விடுபடமுடியாது என்று முடிவு செய்துவிடுகிறது. விடுதலைக்கு முயற்சி செய்வதையே நிறுத்திவிடுகிறது.
இப்போது அந்த யானை பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலைபோல நிற்கிறது. ஆனால், இப்போதும் நம்முடைய யானை தப்பி ஓட முயற்சி செய்வதே இல்லை.தன்னைக் கட்டிப் போட்டிருப்பது ஒரு சாதாரணக் குச்சிதான்,லேசாக இழுத்தாலே அது விடுபட்டுவிடும் என்பதுகூட அந்த யானைக்குப் புரிவதில்லை.
நம்மில் பலரும் இந்த யானையைப் போல்தான்.நமது திறமைகள் என்னென்ன,நம்மால் எதையெல்லாம் சாதிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், அதிசாதாரணமான மனத்தடைகளுக்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்கிறோம்.அவற்றை உடைத்துக்கொண்டு வெளியே வரத் தயங்குகிறோம்.
இந்த யானைக்கதையை மையமாக வைத்து ‘The Elephant And The Twig’
என்ற பிரமாதமான பாஸிட்டிவ் சிந்தனைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜெஃப் தாம்ஸன்.
ஜெஃப் தாம்ஸனைப் பொறுத்தவரை, நாம் ஒவ் வொருவரும் யானை பலம் கொண்டவர்கள். நம்மைச் சில சின்னக் குச்சிகள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை முறித்து எறிந்துவிட்டு வெளியேறும் போதுதான் நமது முழு பலமும் முழுத் திறமையும் உலகிற்குத் தெரிகிறது. அதிவேக முன்னேற்றம் சாத்தியப்படுகிறது.
இதற்காக, ஜெஃப் தாம்ஸன் 14 முக்கியமான விதிமுறைகளைச் சொல்லித்தருகிறார். அவை இங்கே சுருக்கமாக:
1 எதையும் அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ, இந்த விநாடிதான்!
2 நம்முடைய உலகத்தில் நாம்தான் கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள்.
3 நாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள்?
4 உங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை.அந்த ‘எனர்ஜி’யை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்வது என்று யோசியுங்கள்.
5 வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்யமாட்டார்கள்.நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.
6 சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்
7 உங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள்.உங்கள் செயல்வேகம் ஜிவ்வென்று எகிறும்
8 இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்
9 உங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள்.அநாவசியமான நேரக்கொல்லிகளை விரட்டியடியுங்கள்
10 நதியைப்போல் ஓடிக்கொண்டிருக்க, நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொள்ளவேண்டும்.
11 தேவைதான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்
12 நேர்மை முக்கியம். இலக்கை அடையக் குறுக்குவழிகளைப் பின்பற்றாதீர்கள்
13 நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப்போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது
14 அடுத்தவர் உங்கள்மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதர் யார்? அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, வேகப்படுத்தும்!. ;) ;) ;)
-
nalla karuththukal shur
valkaila munera uthavum thagavalkal
thanks for sharing
-
நல்ல தெளிவு கொடுக்கும் பதிவு ஸ்ருதி நன்றி