FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 14, 2016, 09:08:37 PM

Title: பைத்தியம்
Post by: PraBa on March 14, 2016, 09:08:37 PM
(https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQcum67DUDsmIi1ZDAj9U-caiJ-PYzKumjz8t2AadN8D2pwcN53yQ)அழுக்குப்படிந்த
அவனது சட்டையையும்
கழுத்துரசும் தாடியுடன்
இழுத்துச் சுமக்கும் கோணியையும்
பார்ப்பவர்கள்
பட்டெனச்சொல்ல முடியும் தான்
அவனொரு பைத்தியமென்று..!

அவ்வப்போது
அவனது குரலில்
கணீரென்று ஒலிக்கும்
அவனது கானங்களில்
நீங்கள் கவனம் மறைத்ததுண்டு..!
அவனொரு பைத்தியமென்ற
உங்கள்
அலட்சிய பார்வை கண்டு
அலட்டிக்கொண்டதில்லை
அவன்..!

அவசர நிமித்தம்
அணைத்தெறியப்பட்ட உங்கள்
பீடிகளும் சிகரெட்டுகளும்
அவனுதட்டில் புகைவதுண்டு...!

பைத்தியமென்று
அவனை நீங்கள்
அடையாளப்படுத்த
அது கூட போதும் தான் ..!
மீதமென்று நீங்கள் எறியும்
எந்த எச்சிலையும்
நாய்க்கொரு பங்கிடாமல்
அவன் தின்றதில்லையென்பது
எவர்க்கேனும் தெரியுமா...?

அவன் உறிஞ்சிய புகைச்சுருட்டை
அணைக்காமல் எறிந்ததில்லை
அதுவேனும் தெரியுமா....?
அவனை விரட்ட
எறிந்த கற்களுக்காகவெல்லாம்
அவன்
உங்களை வெறுத்ததில்லை என்பதேனும் தெரியுமா ...?

அவனுறங்கும் தெருவழியே
அடிக்கடி செல்லும் நீங்கள்
கவனித்திருந்தால்
உங்களுக்கும் தெரிந்திருக்கும்
எல்லா மழையிலும்
அவனது கோணி
நாய் போர்த்தியிருப்பதேனும்..!
சரி தான்
நேசிக்கத்தெரிந்தவனை
பைத்தியமென்று சொல்வதில்
ஆச்சரியமென்ன இருக்கிறது ..?
அவனது மனதில்
நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள்
என்பதை மட்டும்
எப்போதும் அவன்
சொல்லப்போவதில்லை தான் ..!
பைத்தியமென்றே சொல்லுங்கள்
பரவாயில்லை ..!

வரப்போகிற மழைக்காக
நாயையும்
கோணியையும்
தேடிக்கொண்டிருக்குமவனை
விரட்டாமலேனும்
விலகிச்செல்லுங்கள்...!
Title: Re: பைத்தியம்
Post by: Mohamed Azam on March 15, 2016, 09:16:56 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsourcefb.com%2Fpicture%2Fpic_521.jpg&hash=a0bc95cee796050103c5ed6456f36c1b5281168b)
Title: Re: பைத்தியம்
Post by: aasaiajiith on March 15, 2016, 10:58:24 AM
மிரட்டல் விடுக்கும் அரட்டல் வரிகள் !!
நல்ல உணர்வுப்பூர்வமான வரிகளும் கூட !!

சிந்தனை வெகு சிறப்பு !!