FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 11, 2016, 09:20:29 PM
-
பத்திய சமையல்
நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி) கேழ்வரகை ‘கூரவு’ என்பார்கள். கூரவு தோசை... நாஞ்சில் நாட்டு உணவு வகைகளில் பிரசித்திபெற்றது. எல்லா ஊர்களிலுமே கேழ்வரகு எளிதாகக் கிடைக்கக்கூடிய, உடலுக்குக் குளிர்ச்சியும் சத்தும் கொடுக்கக்கூடிய தானியமான கேழ்வரகில் தோசை செய்ய சொல்லிக் கொடுக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பாஞ்சாலி. கூடவே, காரசட்னி, செய்முறையும் இடம்பெறுகின்றது.
கூரவு தோசை!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-3KCOMNccwMc%2FVpOWIfW_X7I%2FAAAAAAAAQdQ%2F_JOObTtb5js%2Fs1600%2F12.jpg&hash=577315e6644bc8e1870e49209bde2a05b0087cfb)
தேவையானவை:
கூரவு மாவு (கேழ்வரகு) - அரை கிலோ
உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உளுந்து, வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைத்து, சிறிது தண்ணீர் தெளித்து மையாக அரைத்து வைக்கவும். இதனுடன் கூரவு மாவைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு நன்றாகக் கலக்கி 8 மணி நேரம் புளிக்கவிடவும். அவ்வாறு புளித்த மாவை தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுத்தால், பஞ்சு போல மிருதுவாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி, பிரண்டை சட்னி, தக்காளி சட்னி சுவையாக இருக்கும். இதே மாவுடன் துருவிய கருப்பட்டி, தேங்காய்த்துருவல் சேர்த்து நெய் ஊற்றி தோசையாக வார்த்தால், குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
‘வேலைக்குச் செல்லும் எங்களுக்கு இதெல்லாம் செய்ய ஞாயிறுக்கிழமைதான் நேரம் கிடைக்கும்’ என்கிறீர்களா? அதற்கு நீங்கள் இப்படி செய்யலாம்.
கேழ்வரகு, உளுந்து மற்றும் வெந்தயம் மூன்றையும் வெயில் காலங்களில் நன்கு காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். தேவையான சமயங்களில் மாவை எடுத்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதை 8 மணி நேரம் ஊறவைத்து தோசை வார்த்தால், மிகவும் சுவையாக இருக்கும். இதே முறையில் கேழ்வரகுக்கு பதிலாக கோதுமையும் சேர்த்துச் செய்யலாம். தோசை மிருதுவாகவும், மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
-
கார சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-x3exl3Tv3kU%2FVpOWUjdle1I%2FAAAAAAAAQdY%2Fdu_9s1K76Qc%2Fs1600%2F13.jpg&hash=328fa1c5bb70b9e24567938eee0824e05417ca74)
தேவையானவை:
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
தக்காளி - 5 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 5 பல்
காய்ந்த மிளகாய் - 8
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு பொரிக்கவும் இதனுடன் தக்காளியைச் சேர்த்து சுருள வதக்கிக் கொள்ளவும். இதில் தேங்காய்த்துருவல் மற்றும் பூண்டு சேர்த்து, நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும். கலவை ஆறியதும் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்தவற்றைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும். இதை நீண்ட நேரம் வரை வெளியில் வைத்திருந்து சாப்பிடலாம். விருப்பம் உள்ளவர்கள் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.
-
புளி இல்லா கறி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-EwKZ2H46FIM%2FVpOWq69GAwI%2FAAAAAAAAQdg%2F6QvvCs1Tirs%2Fs1600%2F14.jpg&hash=774934a022d107329a5dde98386818a07b2e4bbc)
தேவையானவை:
சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
அவரைக்காய் - கால் கிலோ (மீடியம் சைஸில் நறுக்கவும்)
முருங்கைக்காய் - 1 (சின்ன துண்டுகளாக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 200 கிராம்
பெருங்காயம் -
சிறு துண்டு (பொடிக்கவும்)
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
அரைக்க:
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
அரைக்க வேண்டிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை வாணலியில் லேசாக வறுத்து குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய வேகவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காய் மற்றும் முருங்கைக்காயைச் சேர்த்து மஞ்சள்தூள், வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
காய்கள் வெந்ததும் இதனுடன் வெந்த பாசிப்பருப்பு, மிக்ஸியில் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து கொதிக்கும் கலவையில் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி பரிமாறவும்.
குறிப்பு:
இந்தக் குழம்பில் காய்கறிக்குப் பதில் வெறும் முருங்கை இலை சேர்த்தும் செய்யலாம்.