FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on December 23, 2015, 07:36:36 PM

Title: ~ `யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' ~
Post by: MysteRy on December 23, 2015, 07:36:36 PM
`யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'

பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்துவிட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.
மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்துக்கு சென்றுவிட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்துவிட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-3t1uQYpoT8M%2FVnpg5wG7KUI%2FAAAAAAAAQQA%2FYcb0B3TQTRc%2Fs1600%2F14.jpg&hash=21e80790d3df2860b6b70cf0163876e1cccdc21d)

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகிவிடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்தரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்துவிடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.
ஒருவேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக நாமே காரணமாகிவிடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல்  யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றிவிட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்துவிட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பிவிட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
`யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம்
இன்பமயமாகிவிடும் அல்லவா?