FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 05, 2015, 02:26:57 PM

Title: ~ பக்கத்து வீடு! ~
Post by: MysteRy on October 05, 2015, 02:26:57 PM
பக்கத்து வீடு!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F10%2Fywvlnj%2Fimages%2Fp32c%25281%2529.jpg&hash=8535e0356a49c8634c79fb9b2ea7fb0315a52f29)

நீங்கள் செய்துபார்த்து ருசிக்க, பகிர்ந்தளிக்க, பாராட்டு பெற... சமையல்கலை நிபுணர் ‘மெனு ராணி’ செல்லம், ‘யம்மி’ ஸ்வீட்ஸ் செய்யக் கற்றுத் தருகிறார்...
Title: Re: ~ பக்கத்து வீடு! ~
Post by: MysteRy on October 05, 2015, 02:30:22 PM
பாதாம் அல்வா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F10%2Fywvlnj%2Fimages%2Fp32b.jpg&hash=c5e25d2b9441d682b9c674f5c5824e57cb2a8423)

தேவையானவை:

பாதாம், சர்க்கரை - தலா கால் கிலோ
 நெய் - அரை கப்
 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
 பால் - கால் கப்

செய்முறை:

பாதாம்பருப்பை சுடுநீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் அரைத்த பாதாம் விழுது சேர்த்துக் கிளறவும். தளதளவென்று கொதிக்கும்போது நெய் ஊற்றி, குங்குமப்பூ சேர்க்கவும்.
வாணலியில் ஒட்டாமல் பதமாகத் திரண்டு வந்தவுடன் இறக்கி, நெய் தடவிய தட்டில் பரவலாகக் கொட்டி மேலே நெய்யில் வறுத்த பாதாம் துண்டுகள் சேர்த்து அலங்கரிக்கவும்.
Title: Re: ~ பக்கத்து வீடு! ~
Post by: MysteRy on October 05, 2015, 02:32:05 PM
பாதுஷா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F10%2Fywvlnj%2Fimages%2Fp32a.jpg&hash=7e0c9cc59872b94075aa71c55b5493ffa5454c18)

தேவையானவை:

மைதா - 600 கிராம்
 வனஸ்பதி/நெய்/வெண்ணெய் - 200 கிராம்
 லேசாகப் புளித்த தயிர் - அரை கப்
 சோடா உப்பு - அரை டீஸ்பூன்
 வறுத்த முந்திரி - தேவையான அளவு

பொரிக்க:

 நெய்/எண்ணெய் - அரை கிலோ
சர்க்கரைப் பாகு தயாரிக்க:
 சர்க்கரை - 4 டம்ளர்
 தண்ணீர் - 2 டம்ளர்

செய்முறை:

ஒரு பெரிய தாம்பளத்தில் மைதா மாவைச் சலித்துப் போட்டு நடுவில் குழித்துக்கொள்ளவும். இதில் முதலில் வனஸ்பதி/நெய்/வெண்ணெய் சேர்த்து கைவிரல்களால் அழுத்தி மைதாவுடன் சேர்த்துப் பிசிறிவிடவும். நன்கு கலந்தவுடன் மீண்டும் நடுவில் குழித்து தயிர், இதன் மேல் சோடா உப்பு சேர்த்து மீண்டும் அழுத்திப் பிசையவும். கடைசியில் லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளவும். மேலே ஈரத் துணியால் மூடி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறுசிறு உருண்டைகளாக்கி வட்டமாகத் தட்டிக்கொள்ளவும். நடுவில் கட்டைவிரலால் லேசாக அழுத்தி பள்ளம்போல் செய்துகொள்ளவும். அனைத்து உருண்டைகளையும் இதேபோல் தயார் செய்து ஒன்றன் பின் ஒன்றாக நெய்/எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதற்குள் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு பிசுக்குப் பதத்தில் சர்க்கரைப் பாகு தயார் செய்து கொள்ளவும். பொரித்தெடுத்த பாதுஷாக்களை சூடு ஆறும் முன் சர்க்கரைப் பாகில் போடவும் (பாகு சூடாக இருக்க வேண்டும்... ஆனால், மிகவும் சூடாக இருக்கக் கூடாது). சில மணி நேரம் கழித்து, பாதுஷாக்களை பாகிலிருந்து எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே வறுத்த முந்திரி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
Title: Re: ~ பக்கத்து வீடு! ~
Post by: MysteRy on October 05, 2015, 02:33:46 PM
சோன் பப்டி கேக்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F10%2Fywvlnj%2Fimages%2Fp32.jpg&hash=02c5ec8c5b10efdd86756ca28847524568d0fc4c)

தேவையானவை:

கடலை மாவு, மைதா மாவு - தலா 1 கப்
 நெய் - ஒன்றரைகப்
 சர்க்கரை - 2 கப்,
 க்ளுக்கோஸ் - 2 டீஸ்பூன்
 பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
 பொடித்த பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்
 சாரைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

கடலை மாவு, மைதா மாவு, நெய் மூன்றையும் ஒரு வாணலியில் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி வைத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிட்டு, கம்பிப்பதமாக வந்ததும் இறக்கவும் (ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் விடும்போது, கையில் உருட்டும் பதமாக வரவேண்டும்). இப்போது க்ளுக்கோஸை நீரில் கரைத்து, சர்க்கரைப் பாகில் விடவும். பாகு சற்று மஞ்சள் நிறமாகும். அந்தப் பாகை வெண்ணெய் தடவிய ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் விட்டு நன்கு கலக்கவும். சுருண்டு, பிரவுன் நிறத்தில் பந்து போல வரும் சர்க்கரைப் பாகை வறுத்த மாவுக் கலவையில் கொட்டிக் கிளறவும். கலவையை மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டாம். நெய் அல்லது வெண்ணெய் தடவிய தட்டை ரெடியாக வைத்துக் கொள்ளவும். இப்போது கலவையை அப்படியே எடுத்து சுத்தமான மேஜை மீது சதுர வடிவில் பரப்பவும். சூடாக இருக்கும் போதே மாவை நாலாப்புறமும் நன்கு இழுத்துவிட்டு சதுர வடிவம் வருமாறு மடிக்கவும். இதே போல ஐந்து தடவை மடிக்கவும். இனி கைகளால் மாவின் மேற்புறத்தைத் தட்டி சமப்படுத்தவும். இதன் மேலே தயாராக உள்ள முந்திரி, பாதாம், சாரைப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, கலவையை அப்படியே நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். ஆறியவுடன் வில்லைகளாக வெட்டவும். இது நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.