நலம் சேர்க்கும் வாழை ரெசிப்பிகள்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F08%2Fnuowez%2Fimages%2Fp52a.jpg&hash=e237f0bc11316afaad00e32b38ec33f3ce6e8968)
முக்கனிகளில் ஒன்றான வாழை எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது. வாழைப்பூ, காய், பழம், தண்டு, இலை என அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக்குணம் நிறைந்தது. வாழைப்பூ, காய் மற்றும் பழத்தைப் பயன்படுத்தி, சுவையான ரெசிப்பிக்களை செய்துகாட்டுகிறார் திருச்சி ‘ஆப்பிள் மில்லட்’ உணவகத்தின் செஃப் இரா.கணேசன். வாழையின் பலன்களைக் கூறுகிறார் சித்த மருத்துவர் இரா.பத்மபிரியா.
வாழைப்பூ கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F08%2Fnuowez%2Fimages%2Fp52b.jpg&hash=207f6f07487f9cfda74a099f9f9c2c9967a4c57d)
தேவையானவை:
வாழைப்பூ - 1, கேரட்- 2, பீன்ஸ், வெங்காயம் - தலா 50 கிராம், மஞ்சள் தூள், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 4, தேங்காய் - கால் மூடி, மோர் - ஒரு கிளாஸ், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பூவை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, மோரில் போட்டு பிழிந்து, மஞ்சள் தூள், சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளித்து, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறவும். பாதி அளவு வெந்ததும், வேகவைத்த வாழைப்பூவைப் போட்டுக் கிளறி, துருவிய தேங்காய், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பலன்கள்:
வாழைப்பூ, துவர்ப்புச் சுவை கொண்டது. நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைவாக உள்ளன. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வலி ஏற்படும்போது, ஒரு கப் சமைத்த வாழைப்பூவைச் சாப்பிட்டு வந்தால், பிரச்னை சரியாகும். வாழைப்பூவை நன்றாகச் சமைத்து, தயிர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ப்ரோஜெஸ்டிரான் அதிகம் சுரந்து, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து, புரதச்சத்து இருப்பதால், வளர் இளம்பருவத்தினர் வாரம் ஒருமுறையேனும், வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலநோய் மற்றும் வயிற்றுப் புண்ணை நீக்கும்.