FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on December 23, 2011, 08:50:26 PM

Title: சமூக உருவாக்கத்தின் அடிப்படைகளை ஊடகங்களே தீர்மானிக்கின்றன - பேரறிஞர் யூஸுப் அல்
Post by: Global Angel on December 23, 2011, 08:50:26 PM
சமூக உருவாக்கத்தின் அடிப்படைகளை ஊடகங்களே தீர்மானிக்கின்றன - பேரறிஞர் யூஸுப் அல் கர்ளாவி  

ஊடகத் துறையில் கவனம் செலுத்த வேண்டியவர்கள் யார் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
இன்று தொடர்பூடகங்கள் மனிதனது சிந்தனையை, நம்பிக்கையை,உளப்பாங்கை கட்டியெழுப்புவதில் முன்னிலை வகிக்கின்றன. சமூகங்களை உருவாக்குவதற்கான அடிப்படைகளை ஊடகங்களே இடுகின்றன. எனினும், கவலைக்குரியவிடயம், முஸ்லிம்கள் - அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்கள் - பள்ளிவாயல் கட்டுவதையும் ஸதகா செய்வதையுமே தமது வக்ப் சொத்தின் மூலம் நிறைவேற்ற முடியுமான அமல்கள் என்று நினைக்கின்றனர். மனிதர்களைக் கட்டியெழுப்பும் அல்லது சமூகங்களைக் கட்டியெழுப்பும் ஊடகத் துறையில் கவனம் செலுத்துவதை தேவையற்றது என்று எண்ணுகின்றனர்.
ஊடகத்துறையின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் நோக்கும்போது இத்துறையைக் கட்டியெழுப்பி, அதனை வளர்ச்சியடையச் செய்வதில் சட்ட நிபுணர்கள், கலைத்துறை சார்ந்தோர்,பயிற்றுவிப்பாளர்கள், சிந்தனையாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் என எல்லாத் தரப்புமே இவ்விடயத்தில் பங்கெடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இது எமது அன்றாடப் பிரச்சினையாகும்.

நாளாந்தம் ஊடகத்தோடு நாம் உறவாடுகின்றோம். அவை நமது அறிவை மட்டுமன்றி, கலா ரசனையை கண்ணோட்டங்களை, உலகப் பார்வைகளை வடிவமைக்கின்றன. சிறுவர்கள்,பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என சமூகத்தின் எல்லா மட்டங்களோடும் உறவாடும் ஆற்றல் ஊடகங்களுக்கு மாத்திரமே உண்டு. இதிலிருந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
அறபு முஸ்லிம் நாடுகளில் இயங்கும் தேசிய ஊடகங்கள் இன்னும் குருட்டுப் பின்பற்றல் என்ற கட்டத்தைத் தாண்டாமல் இருப்பது கவலை தருகின்றது. அறபு-முஸ்லிம் தனித்துவமோ சுயசிந்தனையோ, புத்தாக்க முயற்சிகளோ இன்றி அவை ஒரே வகையான சட்டகங்களுக்குள் சுழன்றுகொண்டிருக்கின்றன.
* இஸ்லாமிய ஊடகத் துறைக்கும் மார்க்க ஊடகத் துறைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக சிலர் கருதுகின்றனரே.
இஸ்லாமிய ஊடகத்துறை என்பது இஸ்லாமிய சிந்தனைப் போக்கையும், இஸ்லாமிய கண்ணோட்டத்தையும் கொண்டது. மனிதன், பிரபஞ்சம், வாழ்க்கை அனைத்தையும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நோக்குவதே இஸ்லாமிய ஊடகம். அதேவேளை, இஸ்லாமிய ஷரீஆ வரையறைகளை பேணும் எந்த ஊடகமும் இஸ்லாமிய ஊடகமாகவே கொள்ளப்படும். இஸ்லாமிய வரையறைகள் என்பதன் மூலம் சட்ட அறிஞர்கள் வகுத்துள்ள வாஜிப், முஸ்தஹப்,முபாஹ், மக்றூஹ், ஹராம் எனும் அடிப்படைகளையே நாம் கருதுகிறோம்.
நேரடியான மார்க்க ஊடகம் எனும்போது ஜும்ஆ தின குத்பாக்கள், பள்ளிவாயல் பயான்கள்,மார்க்க வகுப்புகள், ஷரீஆ கலந்துரையாடல்கள் போன்ற நேரடியான மார்க்க நிகழ்ச்சிகளைக் கொண்டதாக அது இருக்கும். மார்க்க ஊடகத்தைவிட இஸ்லாமிய ஊடகம் மிகவும் விரிவானது. ஏனெனில், இஸ்லாமிய ஊடகத்துறை மார்க்க நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியிருக்கும். அதேவேளை, செய்திகள், பகுப்பாய்வுகள், கருத்துப் பரிமாற்றம், கலை இலக்கியம் சார் நிகழ்ச்சிகளையும் கொண்டிருக்கும்.
* இவ்வரைவிலக்கணத்தினூடே தற்போதுள்ள ஊடகங்கள் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
மார்க்க ஊடகமே இன்னும் குறுகிய எல்லைக்குள்ளேயே நிற்கின்றது. அது விளைதிறனோ வினைத்திறனோ அற்று, ஒரு பாரம்பரிய எல்லைக்குள் சுருங்கிப் போயுள்ளது. இன்றைய ஜும்ஆ தின குத்பாக்கள் இதற்கு நல்லதோர் உதாரணம். குத்பாக்களை முன்வைப்பதிலும் அதன் உள்ளடக்கத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காலத்தின் தேவைக்குப் பொருத்தமற்றதாகவும் கேட்கின்றவர்களின் உள்ளங்களை ஈர்க்காததாகவும் அவை மாறியுள்ளன.
சமகாலத்திற்கும், எப்போதும் பேணப்பட வேண்டிய அடிப்படைகளுக்கும் இடையிலான சமநிலையை அவை பேணத்தவறிவிட்டன. இஸ்லாம் சமகாலத்திற்கும், அடிப்படைகளுக்கும் இடையில் நிலைத்திருக்கக் கூடியது. பெரும்பாலான குத்பாக்கள் அடிப்படைகளில் நிலைத்திருக்கின்றனவே ஒழிய, சமகாலத்தை கருத்திற் கொள்ளவில்லை. சிலபோது அடிப்படைகளே அங்கு பேணப்படவில்லை.
சில கதீப்மார்கள் பலவீனமான மூலாதாரங்களைக் கொண்டு புனைந்துரைக்கப்பட்ட போலி ஹதீஸ்களையும் மூட நம்பிக்கைகளையும் வெறும் கதைகளையும் மிம்பர்களில் கட்டவிழ்க்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் சமகாலத்திற்கு வெளியே வாழ்கின்றனர்.
நாம் வாழும் காலம் அல்லாத வேறொரு யுகத்திலேயே அவர்கள் இருக்கின்றனர். ஆக, எதிர் பார்க்கப்பட்ட தரத்திற்கு மிம்பர் ஊடகமே வரவில்லை. "நாம் அனைத்து நபிமார்களையும் தங்களது தூதைத் தெளிவுபடுத்துவதற்காக அவர்களது சமூகத்தின் மொழியைப் பேசுபவர்களாகவே அனுப்பினோம்." (ஸூறா இப்றாஹீம்: 04)
இவ்வசனத்தில் தெளிவுபடுத்தல் என்பது சாதாரண அல்லது மேலோட்டமான தெளிவுபடுத்தல் என்பதை விட ஆழமான கருத்தினைக் கொண்டது. ‘லிசான்’ என்ற சொல் ‘மொழி’ என்பதை விட கருத்தாளம் மிக்கது. அதாவது குறிப்பிட்ட சமூகத்திற்கு விளங்குகின்ற பாஷையில் பேசுவதால் பொதுமக்களுக்கு ஒரு மொழியிலும் ஏனையவர்களுக்கு இன்னொரு மொழியிலும் தஃவா முன்வைக்கப்பட வேண்டும். இங்கு மொழி வேறுபாடுகள் மட்டுமன்றி, பிரதேசரீதியாக வேறுபடும் மக்களின் அறிவுத்தரம், விளங்கும் ஆற்றல், துணைக் கலாசாரம், வழக்காறுகள் என் பனவும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
* சட்டத்திற்கும் (பிக்ஹ்) ஊடகத்திற்கும் (இஃலாம்) இடையிலான உறவு எப்படியுள்ளது?
சட்டத்திற்கும் ஊடகத்திற்கும் இடையிலான தொடர்பு இன்னும் வெறும் பத்வா சார்ந்ததாகவே உள்ளது. அதாவது இத்துறைசார்ந்து வழங்கப்படும் மார்க்கத் தீர்ப்புகள் பெரும்பாலும் ஹராம் என்பதாகவே அமைகின்றன. உண்மையில் இஸ்லாம் என்பது ஒரு விசுவாசக் கோட்பாடு, ஒரு சட்ட ஒழுங்கு, ஒரு ஒழுக்கக் கோவை. இவையெல்லாம் இணைந்தே இஸ்லாமிய ஊடகத்துறைக்கான செல்நெறியை வடிவமைக்க வேண்டும். ஆனால், இன்னும் நாம் வானொலி,தொலைக்காட்சி, அவற்றின் கலை-இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்து ஹராம் என்ற பாணியிலேயே பத்வா வழங்கி வருகின்றோம்.
சட்டத்துறையில் கடும்போக்கை பின்பற்றுகின்றவர்கள் ஊடகத்தை இஸ்லாத்தின் எதிரியாகப் பார்க்கின்றனர். மக்களது வாழ்க்கையில் அனைத்து விவகாரங்களையும் ஹராம் என்று தீர்ப்பளித்து விட்டால், மக்களின் எதிர்வினைகள் மிக மோசமாக அமைந்துவிடும் என்பதை எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும். பெண்கள் தொழில் பார்க்கலாமா? கற்பதற்கு வெளியேறிச் செல்லலாமா போன்ற அபத்தமான கேள்விகளே பிக்ஹ் துறையில் மேலோங்கி நிற்கின்றன.
நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தின் பெயரால் எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் ‘ஆகும்’ என அனுமதியளிப்பதற்கும் தீமைகளைத் தடுத்தல் என்ற பெயரில் அனைத்தையுமே ‘ஹராம்’ எனத் தடுப்பதற்கும் இடையில் ஒரு நேர்மையான சமநிலையைப் பேண வேண்டும். இமாம் ஸுப்யான் அத்தௌரி அவர்கள் சொன்னதுபோன்று மார்க்கத்தைப் பேணுதலோடு பின்பற்றுபவர்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும். கடும் போக்கைப் பொறுத்தவரை அதனை எல்லா மனிதர்களும் சுயமாகப் பின்பற்ற வேண்டும்.
இன்று இஸ்ரேல் செய்மதிகளைத் தயார்செய்து, அறபு நிலங்களை சாண் சாணாக அளந்து கொண்டிருக்கிறது. நாங்களோ கமராவினால் போட்டோ எடுக்க முடியுமா என்ற வீண் சர்ச்சையில் மூழ்கியிருக்கிறோம். எனவே, நாம் கொள்கை ரீதியில் கடக்க வேண்டிய பல கட்டங்கள் உள்ளன. அதில் கடும்போக்கோ கவனயீனமோ ஏற்பட்டு விடக்கூடாது.
கிளையம்சங்கள் தொடர்பாக வந்துள்ள சட்ட வசனங்களுக்கும் ஷரீஆவின் ஒட்டுமொத்த நோக்கத்திற்கும் இடையில் பேணப்பட வேண்டிய சமநிலையையே கவனத்திற் கொள்ள வேண்டும். நாம் இன்று பல மில்லியன் முஸ்லிம்களுடன் தொடர்புகொள்கிறோம். அவர்கள் வேறு சமூகங்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள். அவர்களது வாழ்வியல் இலகுபடுத்தலை வேண்டி நிற்கின்றது. பிக்ஹை இலகுபடுத்திக் கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.
றஸூல் (ஸல்) அவர்கள், "நீங்கள் இலகுபடுத்துங்கள், கஷ்டப்படுத்தி விடாதீர்கள். நன்மாராயம் கூறுங்கள், மக்களை விரட்டி விடாதீர்கள்" எனக் கூறியுள்ளார்கள்.
ஊடகம் பற்றி தீர்ப்பு வழங்கும்போதும், ஊடகத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றபோதும் இக்கருத்துக்களை நாம் கவனத்திற் கொள்வது அவசியம்