FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 21, 2011, 05:40:38 PM

Title: சுவரொட்டி
Post by: Global Angel on December 21, 2011, 05:40:38 PM
சுவரொட்டி

ஊரடங்கும் நள்ளிரவில்
ஒட்டுகிறான் சுவரொட்டி,
தான் மட்டும் உறங்காத
தகவலையும் தெரிவிக்க!

நட்டநடு நிசிப் பொழுதில்,
நடமாடும் பேய் போல,
ஒட்டுகிறான் காகிதத்தை
ஒவ்வொருவரும் பார்ப்பதற்கு..



திக்கேதும் தெரியாமல்
திணறுகின்ற தன் வாழ்வை.
முக்குச் சந்துகளில்
மூச்சுமுட்ட ஒட்டுகிறான்..

ஊரோடு ஒட்டி வாழ்தல்
உயர்வெனும் தத்துவத்தை,
ராவோடு ராவாக
நடைமுறைப் படுத்துகிறான்..

வெட்டிக் கதைபேச,
விழாவெடுக்கும் மனிதர்களின்
கட்டளைக்கு அடிபணிந்து
கஷ்டத்தை ஒட்டுகிறான்..

நீச்சல் உடையணிந்த
நிர்வாண அழகிகளை
கூச்சம் ஏதுமின்றி
கொஞ்சிடாமல் ஒட்டுகிறான்..

இன்றோடு கடைசியென,
துன்பத்தை நினைத்தவாறு,
அன்றாடம் ஒட்டுகிறான்
அகலாதக் கனவோடு,

ஒட்டாமல் இருப்பவர்கள்
உலவுகின்ற வீதிகளில்,
ஒட்டுவதால் இருக்கின்றான்!
உண்மைகளை கிழிக்கின்றான்!

இண்டு இடுக்கெல்லாம்
இருக்குமிவன் கைரேகை!
கண்டு செல்பவர்கள்
காண்பதில்லை கண்ணீரை!!!
Title: Re: சுவரொட்டி
Post by: RemO on December 21, 2011, 06:29:34 PM
nice one angel
Title: Re: சுவரொட்டி
Post by: Global Angel on December 21, 2011, 07:14:56 PM
thank you ;)