FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 17, 2015, 09:21:27 PM

Title: ~ உடல் நலத்தை பாதுகாக்கும் முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் :- ~
Post by: MysteRy on January 17, 2015, 09:21:27 PM
உடல் நலத்தை பாதுகாக்கும் முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் :-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10917430_854484341240549_2007141281851049236_n.jpg?oh=7f0ef6680188b9797206b05d6a87fa27&oe=5562ECC3&__gda__=1433347871_d034b6cd7efb04a4ec6fca0945ac9325)

முள்ளங்கி. வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் கொண்ட காய். இதிலுள்ள ஃபோலேட், நார்ச்சத்து, தாதுச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகிய அனைத்தும் முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான விஷயங்களில் இருந்து நம்மைக் காக்கக்கூடியவை. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய குணம் முள்ளங்கியில் உள்ளது. முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். மாவுச்சத்து இல்லாத காய் இது என்பது குறிப்பிடத் தக்கது. சாலட்டுகளில் சேர்க்கும் போது, ஒருவித காரத் தன்மையுடன், நறுக்கென்ற ருசியையும் கொடுக்கக்கூடியது.

நீரிழிவு உள்ளவர்களும் அல்லது எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு வரலாம் என்கிற நிலையில் இருப்போரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உச்சத்துக்குப் போகாமலிருக்க மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். முள்ளங்கிக்கு அதில் முதலிடம். ஆனால், ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை முள்ளங்கியை சாப்பிட்டு மட்டுமே சரிக்கட்ட முடியாது என்பதும் முக்கியமான தகவல்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல் - 16 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட் - 3.4 கிராம்
புரதம் - 0.68 கிராம்
தயாமின் - 0.012 மி.கி.
ரிபோஃப்ளோவின் - 0.039 மி.கி.
நியாசின் - 0.254 மி.கி.
வைட்டமின் பி6 - 0.071 மி.கி.
வைட்டமின் சி - 14.8 மி.கி.
கால்சியம் - 25 மி.கி.
இரும்பு - 0.34 மி.கி.
மக்னீசியம்- 10 மி.கி.
மாங்கனீசு - 0.069 மி.கி.
பொட்டாசியம் - 233 மி.கி.
துத்தநாகம் - 0.28 மி.கி.

குளிர்ச்சியானது

முள்ளங்கி குளிர்ச்சியான தன்மை கொண்டது. அதனுடைய கடுமையான வாசனையும் குளிர்ச்சியான தன்மையும் சீன மருத்துவத்தில் கொண்டாடப்படுபவை. வெயில் அதிகமுள்ள மாதங்களில் ஏற்படுகிற வெம்மையைத் தணிக்கும் மருந்தாகவே அங்கு முள்ளங்கியைப் பயன்படுத்துகிறார்கள்.

தொண்டைக்கு இதமானது

முள்ளங்கியின் காரத்தன்மையும் வாடையும் உடலிலுள்ள அதிகப்படியான சளியை விரட்டி, ஜலதோஷம் பிடிக்காமலிருக்க உதவும். சைனஸ் தொந்தரவிலிருந்து விடுதலை கொடுத்து, கரகரப்பான தொண்டைக்கு இதமும் தரக்கூடியது முள்ளங்கி.

செரிமானத்தை சீராக்கும்

இயற்கையாக ஜீரண மண்டலத்தை சுத்திகரிக்கக்கூடிய இயல்பு இதற்கு உண்டு. பல வருடங்களாக உடலில் படிந்த உணவு நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்றக் கூடியது.

வைரஸ் தொற்றைத் தவிர்க்கும்

இதிலுள்ள இயற்கையான சுத்திகரிப்புத் தன்மையும் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தும் வைரஸ் தொற்று ஏற்படாமல் காக்கக்கூடியவை.

நச்சுகளை வெளியேற்றும்

சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் முள்ளங்கிக்கு நச்சுகளை முறிக்கிற தன்மை உள்ளதாகவும் புற்றுநோய்க்குக் காரணமான தன்மைகளை வெளியேற்றும் குணம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

புற்றுநோயுடன் போராடும்

பிராக்கோலி, முட்டைகோஸ் போன்ற குறுக்கு வெட்டுக் காய்கறிக் குடும்பத்தைச் சேர்ந்ததால் முள்ளங்கியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ், தாதுச்சத்துகள், வைட்டமின்கள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியவையாக இருக்கின்றன.

அஜீரணத்துக்கு மருந்தாகும்

வயிற்று உப்புசத்தைப் போக்கி, வயிற்றுப் பொருமலை சரியாக்கி, இதமான உணர்வைக் கொடுக்கக் கூடியது. குறைந்த கலோரியும் அதிக ஊட்டமும் கொண்டது ஒரு கப் முள்ளங்கி எடுத்துக் கொண்டாலுமே அதில் 20க்கும் குறைவான கலோரிகளே இருக்கும் என்பதால், எப்போதும், எந்த உணவுடனும் இதைச் சேர்த்து உண்ணலாம். குறைந்த கலோரி கொண்டதானாலும் அதிக ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

உடல் வறட்சியை விரட்டும்

முள்ளங்கியில் நீர்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகச் சத்தும் அபரிமிதமாக உள்ளன. இது திசுக்களுக்கு ஊட்டமளிக்கவும் உடல் வறண்டு போகாமலும் சருமம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.