FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 16, 2014, 08:07:29 PM

Title: ~ இயற்கை உணவை நோக்கிய எளிய வழி ~
Post by: MysteRy on December 16, 2014, 08:07:29 PM
இயற்கை உணவை நோக்கிய எளிய வழி

இயற்கை உணவின் அருமை உலக மக்களால் வேகமாக உணரப்பட்டு வருகிறது. ஆனால் பல காலமாக உணவைப் பல்வேறு முறைகளில் சமைத்து நாவுக்கு ருசியாக உண்டு பழகியாயிற்று!

அது உடல்நலத்துக்கு எதிரானதாக இருந்தாலும் அதன் சுவை நம்மால் கைவிட முடியாத அளவு சுண்டி இழுக்கிறது.

இதுதான் இன்று நம் முன் உள்ள முக்கியமான பிரச்சினை!

அனைவராலும் ஒரே மூச்சில் தோசையைத் திருப்பிப் போடுவதைப்போல சமைத்த உணவுகளில் இருந்து முழுக்கவும் இயற்கை உணவுக்கு மாறிச் செல்ல முடியாது!

ஆனால் சமையல் உணவின் தீங்கில் இருந்து விடுபட்டு இயற்கை உணவில் கிடைக்கும் நற்பயன்களை அடைந்தாக வேண்டும்!

அதற்கு என்ன செய்வது?….

அதற்கு முதலில் சில விஷயங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆதாவது இதுகாலமும் நாம் உண்டு வந்த சமைத்த உணவுகளின் தரத்தையும் வகைகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அதன்மூலம் சமைத்து உண்கின்ற உணவு மற்றும் மற்ற பண்டங்களில் எவை எல்லாம் உடல்நலத்துக்குத் தீங்கானவை, எவையெல்லாம் அதிக அளவு சத்துக்கள் சின்னாபின்னமாகச் சிதைக்கப்படுகின்றன, எவையெல்லாம் சமைத்தபின் அதிக அளவு வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன, என்றெல்லாம் ஆராயவேண்டும்.

அதே சமயம் சமைத்த உணவுகளில் மிகக் குறைந்த அளவே மேற்ச்சொன்ன விளைவுகளைக் கொண்டிருக்கும் உணவு வகைகள் என்னென்ன என்பதையும் ஆராய வேண்டும்!

அந்த இரண்டாம் வகைச் சமையல் உணவு வகைகளில் மிகச் சுவையாகவும் உள்ள சில வகைகளைத் தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தேர்வு செய்யப்படும் உணவு வகைகளைக் கொஞ்சமாகவும் இயற்கையான சமைக்காத உணவு வகைகளை அதிகமாகவும் இருக்கும்படி உண்ணும்போது அந்த சமைத்த நல்லுணவு வகைகளில் உள்ள கொஞ்ச நஞ்ச குறைகளும் நாம் அதிகமாக உண்ணும் இயற்கை உணவுகளின் நற்பண்புகளாலும் மருத்துவக் குணத்தாலும் போக்கப்பட்டு மிக உயர்ந்த பயனை அடையலாம்!

நாளடைவில் சமைத்த நல்லுணவுகளின் அளவை மெல்ல மெல்லக் குறைக்கவும் சமைக்கத இயற்கை உணவுகளின் அளவை அதிகப்படுத்தவும் முயற்சி செய்யலாம்.

அந்த முயற்சியில் எந்த அளவு முன்னேற்றம் காண்கிறோமோ அந்த அளவு நாம் சமையல் உணவை வென்று இயற்கை உணவின் அரவணைப்புக்கு மாறிச் செல்கிறோம் எண்பது பொருள்!

இன்றுள்ள நிலையில் நம்மால் இயற்கையுணவின் பயன்களை அடைய முடியவில்லையே! சமைத்த உணவுகளை விட முடியவில்லையே என்று எண்ணும் அனைவர்க்கும் இது மிகச் சிறந்த வழி ஆகும்!….