FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ஸ்ருதி on December 14, 2011, 07:47:30 AM
-
ஒரு குருகுலம்; மாணாக்கர் பலர் அங்குத் தங்கி இருந்தனர்; கல்வி பயின்றனர்.
அவர்களுக்குக் கற்பித்த குரு மிகக் கற்றவர்; மாணாக்கர்கள் சிறந்த கல்வி பெறவேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். பல கலைகளையும் முறையாகக் கற்பித்தார்.
புலவர் ஒருவர் மகனும் குருகுலத்தில் கல்வி கற்றான்.
இயல்பிலேயே கூர்த்த அறிவு கொண்டவன் அவன்; குரு கற்பிப்பனவற்றைக் கவனமாகக் கற்றான். தலைமாணாக்கனாக விளங்கினான்.
காலம் ஓடியது; பல ஆண்டுகள் கழிந்தன.
அவன் கல்வி நிறைவு எய்தியது.
அவன் தன் இல்லம் திரும்பும் நாள் வந்தது.
குருவைப் பணிந்து வணங்கினான்; தன் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டான்.
“குருவே, அனைத்துக் கலைகளையும் எனக்குக் கற்பித்து அருளினீர்கள்; உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்; என் உயிருள்ள மட்டும் உங்களை நான் மறவேன். இன்று நான் இல்லம் செல்கிறேன்; இன்னும் எனக்குக் கூறவேண்டுவது ஏதேனும் இருந்தால் அருள்கூர்ந்து கூறி அருளவேண்டும்!” என்று பணிவாக வேண்டினான்.
“கற்பிக்க வேண்டுவன அனைத்தையும் உனக்குக் கற்பித்துவிட்டேன்; இனி உனக்குக் கற்பிக்க ஏதும் இல்லை. மகிழ்ச்சியாக இல்லம் செல்; உலக வாழ்க்கையைத் தொடங்கு; உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் சமுதாயத்துக்கும் பயனுள்ள நல்ல மனிதனாக வாழத் திருவருள் உனக்குத் துணைநிற்குமாக!” என்று உள்ள நிறைவோடு அவனை வாழ்த்தினார் குரு.
மீண்டும் வணங்கி எழுந்தான் மாணாக்கன்.
"இனிச் சொல்லவேண்டுவது ஒன்றே ஒன்றுதான் உண்டு; சொல்கிறேன், கேட்டுக் கொள். வாழ்வில் என்றும் இதனைக் கடைப்பிடி. எக்காலத்திலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் முட்டாள்களோடு விவாதம் செய்யாதே!” என்றார் குரு.
“என்ன காரணம் என்று கூறி அருளவேண்டும்!” என்று வினாவினான் மாணாக்கன்.
“காரணமா? எளிய காரணம்தான். முட்டாள் ஒருவனோடு நீ விவாதம் செய்வாயானால் உங்கள் இருவருள் யார் முட்டாள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விடும்!” என்று விடையிறுத்தார் குரு. ;) ;) ;)