FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on October 07, 2014, 11:15:14 AM
-
நீங்கள் இரவு நேரத்தில் வானத்தைக் கவனித்தால், ஒரு பிரகாசமான கோளைப் பார்க்கலாம். அது தான் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள வெள்ளி, சுக்கிரன் அல்லது வீனஸ் (Venus) என்று அழைக்கப்படும் கோளாகும். பல ஆண்டுகளாக, பண்டைய மக்கள், சில வேற்று கோள் அரக்கர்கள் வீனஸில், மேகங்களின் கீழ் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது, வினஸின் கடும் வெப்பத்தால் இது சாத்தியம் இல்லை என்பது நமக்குத் தெரியவந்துள்ளது. இன்றைய அறிவு டோஸில் இந்த வீனஸ் கோள் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்களை அறியத் தருகிறேன்.
வீனஸ் பல அற்புதமான இயல்புகளைக் கொண்டுள்ளது. வீனஸும் பூமியும் இரட்டைக் கோள்களாகவே பெரும்பாலும் கருதப்படுகின்றன. இதற்குக் காரணம் வீனஸும் பூமியும் எறத்தாழ ஒரே அளவில் இருப்பதும், இரு கோள்களும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருப்பதும் தான். இது இரண்டிலும் ஒற்றுமைகள் இருந்தாலும், இவ்விரு கோள்களும் மிகவும் மாறுபட்டனவாகவே உள்ளன.
ஆனால், இதில் எல்லாவற்றிலும் என்னை மிகவும் வியக்க வைத்த விடயம் என்ன தெரியுமா? வீனஸில் ஒரு நாள், அதன் முழு ஆண்டை விட நீளமானது என்கிற உண்மை தான்! இதன் விளக்கத்தைப் படிக்கும் முன் இது எப்படி சாத்தியம் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் நண்பர்களே! இதற்குக் காரணம் அதன் சுழற்சி தான். வீனஸ் தன்னைத் தானே சுற்றி வர, மிகவும் மெதுவாக, பூமியின் நாள் கணக்கின்படி 243 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. மாறாக, பூமிக்கு இதே சுழற்சிக்கு 24 மணி நேரம் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும், வீனஸ் சூரியனைச் சுற்றி வர, பூமியின் நாள் கணக்கின்படி 225 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே, வீனஸில் ஒரு நாள் அதன் ஒரு ஆண்டை விட நீளமானது.