FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 25, 2014, 01:24:41 PM

Title: புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்
Post by: Little Heart on September 25, 2014, 01:24:41 PM
இன்று யாருக்கு, எந்த வயதில், எந்த சூழ்நிலையில் புற்றுநோய் வருகின்றது என்பதே தெரியவில்லை, அப்படி மோசமான நிலையில் இன்று இந்த நோய் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. இன்றைய அறிவு டோஸில் நான் உங்களுக்குப் புற்றுநோய் வருவதன் வாய்ப்பைக் குறைக்க நாம் செய்யக் கூடிய மற்றும் செய்யக் கூடாத 9 விடயங்களை அறியத் தருகின்றேன்.

1. புகைபிடிக்கவோ, புகையிலை உபயோகிக்கவோ கூடாது! புகைபிடித்தல் புற்றுநோய்க்கு எளிதாக வழி செய்கிறது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். நுரையீரல், உணவுக் குழாய், வாய், தொண்டை, வயிறு மற்றும் கணையம் போன்ற இடங்களில் புற்றுநோய் உருவாகுவதற்கு இதுவே முதன்மையான காரணம் ஆகும்.

2. அவ்வப்போது மருத்துவரிடம் முறையான பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்! இந்த பரிசோதனைகளின் மூலம் நம் உடம்பில் பெருங்குடல் (colon), மார்பகம் (breast), புராசுட்டேட் சுரப்பி (prostate), கருப்பை வாய் (cervix) மற்றும் தோல் புற்றுநோயை கண்டுபிடிக்கலாம். எந்தவித அறிகுறியே இல்லை என்றாலும், புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதன் மூலம், அதைக் குணப்படுத்த வாய்ப்புக்கள் அதிகமாக உண்டு.

3. குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள்! வாயில் வரக்கூடிய புற்றுநோய், குடிப்பழக்கத்தால் ஆறு மடங்கிற்கு அதிகரிக்கின்றது.

4. சூரிய கதிர்களிடம் இருந்து உங்கள் தோலைப் பாதுகாத்து வையுங்கள்! புற ஊதாக் கதிர்வீச்சுகள் (ultraviolet) உங்கள் தோலின் டி.என்.ஏ. (D.N.A.) மரபியல் மாறுதலுக்கு தூண்டுகின்றது. அதன் விளைவாக தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

5. உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்! உடற்பயிற்சி செய்பவர்கள் மிக குறைந்த அளவே மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

6. உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள்! உங்கள் உடல் எடை 25 அல்லது அதற்குக் குறைவான BMI உடன் தான் இருக்க வேண்டும். இது பெருங்குடல், தைராய்டு, பித்தப்பை, உணவுக்குழாய், சிறுநீரகம் போன்ற இடங்களில் உருவாகக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும்.

7. மாதவிடாய் நிறுத்தம் பற்றிய அறிகுறிகளுக்கு ஹார்மோன் மாற்று மருந்துகளை (HORMONE REPLACEMENTtherapy) உபயோகிக்கக் கூடாது! இவை சிறுநீரக புற்றுநோயை உண்டாக்க வாய்ப்புகள் உண்டு.

8. புற்றுநோயை விளைவிக்கும் காரணிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்! கதிர்வீசல் மற்றும் வேதியியல் பொருட்கள் புற்றுநோயை விளைவிக்கும். காமாக்கதிர்கள் (gamma), புற ஊதாக் கதிர்கள் (ultraviolet), ஊடு கதிர் அலைகள் (x-ray) போன்றவை தைராய்டு, நுரையீரல், மார்பக மற்றும் வயிற்றுப் புற்றுநோயை உண்டாக்கும்.

9. தரமான உணவு பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிங்கள்! பழங்களைத் தினமும் உட்கொள்ள வேண்டும்.

நண்பர்களே, இவ்வாறான இலகுவான வாழ்க்கை நடைமுறைகளை நீங்கள் பின்பற்றி வந்தால் புற்றுநோய் வருவதன் வாய்ப்பை மிகவும் குறைக்கலாம். எனவே இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். எல்லோரும் ஆரோக்கியமாக வாழலாம்!