FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 22, 2014, 05:52:24 PM
-
நம் எல்லோருக்கும் வேறு யாராவது ஒருவர் நமது உடலில் ஏதாவது ஒரு இடத்தில் தொடும் பொழுது கூச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், இப்படி மற்றொரு நபர் நம்மை கூச்சம் காட்டுகிற பொழுது சிரிப்பது என்பது ஒரு இயற்கையான எதிர்வினை ஆகும். பிறர் நம்மைத் தொட்டு கூச்சம் ஏற்படுத்தும் பொழுது நமக்குப் பதட்டம் ஏற்படுகிறது; இது பூச்சிகள் மற்றும் சிலந்திகளிடமிருந்து நம்மை காப்பாற்ற இயற்கையிலேயே நம் உடலில் அமைந்திருக்கும் ஒரு தற்பாதுகாப்புப் பொறிமுறை (Defense mechanism) ஆகும். அதே கூச்ச உணர்வு, நம்மை ஒரு பய நிலைக்குக் கொண்டு சென்று, நமது பயத்தைக் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பாக வெளியேற்றுகிறது. அந்த நபர் உங்களுக்குக் கூச்ச உணர்வு ஏற்படுத்தப் போகிறார் என்று நீங்கள் அறிந்திருந்தாலும் கூட, அவரது தொடுகை, அமைதியின்மை மற்றும் நம்மை இவர் காயப்படுத்தப் போகிறாரோ என்ற பயத்தை உங்களிடம் ஏற்படுத்துகிறது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும், ஆனால் உங்களை நீங்களே கூச்சம் காட்ட முடியுமா? இல்லை தானே? அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மை சொல்லப்போனால், அதன் காரணத்தை இன்று வரை ஆராய்ச்சியாளர்கள் முழுமையாகக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால், இது மூளையுடன் தொடர்புடைய ஒரு செயல்பாடு என்று எண்ணப்படுகிறது. மூளை, நமது உடலை பிறருடைய தொடுதல் மற்றும் நகர்தல் ஆகிய செயல்களுக்கு எப்படி எதிர்வினை செய்வது என்பதை கற்று வைத்திருக்கிறது. நம் இடையை நாமே தொடும் பொழுது, உடலுக்கு மூளை, உங்கள் கைகளைப் பற்றிய செய்திகளை அனுப்பிவிடுகிறது. இதன் மூலம் உங்களது உடல் அந்தத் தொடுகைக்குத் தயாராகி, பயத்தை போக்கிவிடுவதால் நீங்கள் சிரிக்க மாட்டீர்கள்.