எலிகள் பற்றிய தகவல்கள்:-
(https://scontent-b-lax.xx.fbcdn.net/hphotos-xpa1/t1.0-9/s526x296/10511236_639091932854936_7977390527098351007_n.jpg)
எலி (rat) பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணி. சுண்டெலி, வெள்ளெலி, மூஞ்சூறு, கல்லெலி, சரெவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன. ஓரிணை எலியானது வெறும் 18 மாதங்களில் பத்து இலட்சமாகப் பெருகுகின்றன.
மேலே குறிப்பிட்ட அனைத்து எலி வகைகளும் சாதாரணமாக தமிழகத்தில் வடலூருக்கும், வடக்கு பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்குதெற்கு, விருத்தாசலத்திற்கு கிழக்கு, கடலூருக்கு மேற்கு ஆகிய இடைப்பட்ட பகுதியில் காணப்படுபவையாகும்.
சுண்டெலி
எலிகளில் மிகவும் சிறியது சுண்டெலி. இது கொல்லைகளின் (புன்செய் நிலங்களை கொல்லை என அழைப்பது வழக்கம்) வரப்புகளில் ஒன்று முதல் இரண்டு அடி நீளத்தில் வளை தோண்டி வாழ்பவை. புன்செய் தானியங்களை உண்டு வாழ்பவை.
வெள்ளெலி
பெயருக்கு ஏற்ப இவ்வகை எலிகளின் அடிப்பாகம் வெண்மை நிறமாகவும் உடலின் மேல்புறம் சற்று பழுப்பு நிறமாகவும் காணப்படும். இந்த எலி மனிதர்களால் உண்ணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் வரப்புகள், புதர்கள், வேலியோரங்கள், மரத்தடி ஆகிய இடங்களில் வளை தோண்டி வாழ்பவை. பல அடி தூரம் இவை வளைகளைத் தோண்டுகின்றன. இவ்வித எலிகள், வேறு வேறு இடங்களில் இரண்டு, மூன்று வளைகள் தோண்டி அவை அனைத்திற்கும் பூமிக்குள் ஒன்றுக்குகொன்று தொடர்பை ஏற்படுத்தி விட்டிருக்கும். இவை இரவில் இரை தேடும் இயல்புடையவையாகும். புன்செய் தானியங்களை சேகரித்து வளைக்குள் சேமித்து வைத்து இரை கிடைக்காத காலத்தில் அவற்றை பயன்படுதும். பல எலிகள் கூட்டாக வாழும். இரவில் இரை தேடும் எலிகள் பகலில் பகைவர்களிடமிருந்து பாதுகொள்ள வளையை மண்ணால் அடைத்து வைத்திருக்கும். அப்படியும் எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது உயிர் தப்ப வளையிலிருந்து மேல் பக்கமாக வளைதோணடி மேல் மண்ணைத் திறக்காமல் வைத்திருக்கும். அதை மக்கள் மூட்டு என்று அழைப்பார்கள். வளை வழியாக ஆபத்து வரும்போது மூட்டை திறந்துகொண்டு ஓடி பிழைத்துக் கொள்ளும்.
கருவுற்ற எலி கூட்டமாக வாழும் எலிகளின் மத்தியில் குட்டிகளை ஈன்றால் பிற எலிகளால் இடையூறு ஏற்படும் என்பதால் கருவுற்ற எலியும் ஆணெலியும் கூட்டத்தை விட்டு வெளியேறி தனியாக வளை தோண்டி அதில் தங்கி குட்டிகளை ஈன்று வளர்க்கும். ஒரே ஒரு வளை மட்டுமே காணப்பட்டால் அது குஞ்சுகள் வளரும் வளை என கணித்து விடலாம். கூட்டமாக எலிகள் வாழும் எலி வளைகளை வளையின் ஆரம்பத்திலிருந்து சுமார் இரண்டு அடி உள்ளே தள்ளி வளையை மண்ணால் மூடியிருக்கும். ஆனால் குட்டிகள் வளரும் வளையை நுழை வாயிலிலேயே மூடியிருக்கும். இந்த எலி வளை தோண்டுதல், இரை தேடுதல், பகைவர்களிடமிருந்து காத்துகொள்ள ஓடுதல், எதிர்காலத்திற்கு உணவை சேமித்தல், இரை தேடியபின் தினசரி வளையை மண்ணால் மூடுதல் ஆகிய வேலையை செய்வதால் இவை வலிமையோடு இருக்கும்.
மூஞ்சூறு
இந்த எலி வீட்டில் வாழ்பவை. உடல் சற்று நீண்டும், தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். இது வீட்டில் சிந்திய உணவுகளை உண்டு வாழ்பவை. இடையூறு ஏற்படும்போது இவை கீச், கீச் என்று ஒலி எழுப்பும். இதன் உடலில் ஒருவித நாற்றம் வீசும். வீட்டின் சுவர் ஓரமாகவே ஓடும். இந்த எலி மக்களுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அதனால் இந்த எலியை யாரும் கொல்வது இல்லை. பெட்டி, பீரோ, கட்டில், தொம்பை (தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்) ஆகிய இடங்களில் மறைந்து வாழும்.
கல்லெலி
இது சுண்டெலியை விட சற்று பெரியதாக காணப்படும். கொல்லையின் வரப்புகளில் வளை தோண்டி வாழும். இந்த எலி வெள்ளெலி போல் வளையை மண்ணால் மூடாமல் சிறு சிறு கற்களால் மூடி வைத்திருக்கும். கொல்லையில் இவை காணப்பட்டாலும் மனிதர்கள் இவற்றை உண்பதில்லை.
சரவெலி
இந்த எலி பனை மரம், தென்னை மரம், ஈச்ச மரம் போன்ற மரங்களின் உச்சியில் இலைகளாலும், நார்களாலும் கூடுகட்டி வாழும். இரவில் இரை தேட மரத்தை விட்டு கீழே இறங்கும். பகலில் மரத்திலிலேயே இருக்கும்.
பெருச்சாளி
இந்த எலி உருவத்தில் பெரியது. அதனால், இதனை கிராமத்து மக்கள் பெருச்சாளி என்று அழைக்கின்றனர். இவை மக்கள் வாழும் இடங்களில் மட்டுமே வசிக்கும். வேலியோரங்கள், கற்குவியல், புதர்கள், வைக்கோல்போர் போன்ற இடங்களில் வளை தோண்டி வாழும். இந்த எலியை விநாயகரின் வாகனம் என்றும் கூறுவர். தோட்டத்தில் உள்ள கிழங்குகள், தானியங்கள், மனிதர்களால் வெளியில் வீசப்படும் உணவுக் கழிவுகள் ஆகியவற்றை உண்டு வாழும்.
வயல் எலி
இவ்வகை எலி நன்செய் நிலங்களில் மட்டுமே வசிக்கும். வரப்புகளில் வளைதோண்டி அவற்றில் வாழும். பெருங்கூட்டமாக வாழ்பவை. நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை விளைவிப்பவை. நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி பெருஞ்சேதத்தை உண்டாக்கும். இந்த எலியை விவசாயிகள் கிட்டி என்ற பொறியை வைத்து பிடித்து கொல்வார்கள். நெல் விளைந்த பிறகு கதிர்களை நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும். இந்த எலியை விவசாயின் பகைவன் என்று கூறலாம்.