டிராப்காம் நிறுவனத்தை ரூ.3340 கோடிக்கு கையகப்படுத்துகிறது கூகுள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmedia.webdunia.com%2F_media%2Fta%2Fimg%2Farticle%2F2014-05%2F31%2Ffull%2F1401530710-4598.jpg&hash=88762c1145063b5e4adbf0fe42d79f92ba5b6fbf)
கூகுள் நிறுவனத்தின் நெஸ்ட் லாப்ஸ் நிறுவனம், வீட்டைக் கண்காணிக்கும் கேமரா சேவையை வழங்கி வரும் டிராப்காம் நிறுவனத்தைச் சுமார் 3340 கோடி ரூபாய்க்கு (555 மில்லியன் டாலர்) கையகப்படுத்துகிறது.
இந்த இரு நிறுவனங்களும் இந்தக் கையகப்படுத்தலைத் தங்கள் வலைப்பதிவுகளில் உறுதி செய்துள்ளன. ஆனால், கைமாறும் மதிப்புக் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
கூகுள், நுகர்வோர் சந்தையில் தன் முதலீட்டையும் முயற்சிகளையும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றது. அதிவேக இன்டர்நெட் இணைப்பு, ஓட்டுநர் இல்லாமல் தானாகச் செல்லும் கார், ரோபாட் கருவிகள் உள்ளிட்ட அதன் அண்மைக் காலத் தொழில் விரிவாக்கம், இதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
புகை அலாரம், வெப்பச் சமச்சீர்ச் சேவைகளை வழங்கி வரும் நெஸ்ட் நிறுவனத்தை 2014 ஜனவரியில் சுமார் 19,278 கோடி ரூபாய்க்கு (3.2 பில்லியன் டாலர்) கூகுள் கையகப்படுத்தியது. இது, கூகுளின் இரண்டாவது மிகப் பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கையாகும்.
ஸ்மார்ட் வீடுகள் எனப் படும் அதிநவீன வசதிகளுடன், தொலைவிலிருந்தே கண்காணிக்கும் வசதி கொண்ட வீடுகள் துறை, வெகுவாக வளர்ந்து வருவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆயினும் பயனரின் பிரத்யேகத் தகவல்களைத் திரட்டுவதன் மூலம் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூகுள் மீது குற்றச்சாட்டும் உண்டு.
இந்நிலையில் வீடுகளையும் அலுவலகங்களையும் இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்க உதவும் டிராப்காம், நெஸ்ட் நிறுவனத்தின் தனி உரிமைக் கொள்கைகளை உள்வாங்கிச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தான் திரட்டும் தகவலை, டிராப்காம், பயனரின் அனுமதியின்றி, கூகுள் உள்பட எந்த நிறுவனத்துடனும் பகிராது.
கூகுள், செயற்கைக் கோள் சேவை அளிக்கும் ஸ்கை பாக்ஸ் நிறுவனத்தைச் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய்க்கு (500 மில்லியன் அமெரிக்க டாலர்) கையகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.