FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sasikumarkpm on June 13, 2014, 06:56:17 PM

Title: “யாழ்”ப்பாணம்
Post by: sasikumarkpm on June 13, 2014, 06:56:17 PM
அது ஒரு மெல்லிய சப்தம்…
சிறு விசும்பலாயுமிருக்கலாம்..!

பெரிதும் கேட்பார் யாருமில்லாத போதிலும்
ஆதறவற்ற சூழலில் இருந்தபடி
அது தன் சோகம் மீட்டிக் கிடக்கிறது..

நிசப்தங்களுக்கு நடுவினிலும்
பயங்கர ஓலங்களுக்கு மத்தியிலும்
அது நிதானமாய்
மிகத் தெளிவாய்,
சீரான இடைவெளியில் ஒலித்தபடி உள்ளது!

அது ஒரு மெல்லிய சப்தம்,
சிறு அழுகையாகவுமிருக்கலாம்!

தாயினை இழந்த சேயினது கதறலாகவோ,
தனையனை இழந்த தமக்கையின் தவிப்பாகவுமிருக்கலாம்..

உறுப்புகளை இழந்த போதும்,
உறவுகளை தொலைத்த போதும்,

நடுநசி வேளையிலும்,
நண்பகல் வெய்யலிலும்
பாங்கின்றி சப்தமித்துக் கிடக்கிறது..


அது ஒரு மெல்லிய சப்தம்,
ஒரு கதறலாயுமிருக்கலாம்,

துகிலுறியப்பட்ட திரெளபதிகள் கண்ணனை
எதிர்நோக்கியே ஏமாந்த தருணங்களின் ரணமாயுமிருக்கலாம்

அரசியல் சாயாமேற்றப்பட்ட போதும்,
கடைநிலை வியாபார யுக்த்தியாக்கப்பட்ட போதும்
அது வித்தியாசம் ஏதுமற்று விசும்பிக்கிடக்கிறது!

அது ஒரு மெல்லிய சப்தம்,
ஒரு புலம்பலாயுமிருக்கலாம்

விடியலையே எதிர் நோக்கி காத்திருந்த  மலரது
செடியோடு பிடுங்கப்பட்ட நிகழ்வாயிருக்கலாம்

மகன் சடலம் கண்டழும் தாயினது கதறலாகவோ,
தாய் உடல் தேடி தவிக்கும் மகள் வேட்கையாகவோ இருக்கலாம்

விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு
ரசனைகளுக்கு இடமின்றி
அது நொடிக்கு நொடி ஒலித்துக் கொண்டிருக்கிறது


அது ஒரு மெல்லிய சப்தம்,
ஒரு வெடிகுண்டின்  வெடிக்கும் ஓசையாகவும் இருக்கலாம்

கருத்து கிடக்கும் இரவின் நிசப்தங்களுக்கு நடுவில்
வெடிக்கும் குண்டுகளின் சப்தங்கள் பழகிப் போனதினாலோ,
வெடித்த குண்டினால் பாழ்பட்ட செவியினாலே,
அல்லது வாழ்வின் மீதுள்ள வெறுப்பினாலோ,

அசூயை ஏதுமின்றி பிணக்குவியலின்  மத்தியில் படுத்தபடி
வெடிக்கும் குண்டுகளை வாணவேடிக்கையாய் பார்த்து பழகும்
கண்களின் தீராத ஏக்கமாகவோ இருக்கலாம்!

அது ஒரு மெல்லிய சப்தம்,
உரிமைக்காக போராடும் கூட்டத்தின் கோஷமாகவுமிருக்கலாம்,

அது ஒரு மெல்லிய சப்தம்
ஒரு இனப்படுகொலையாகவுமிருக்கலாம்…!!!!


“யாழ்”ப்பாணம்