FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Global Angel on December 02, 2011, 10:16:39 PM

Title: இருட்டுப்பள்ளம்
Post by: Global Angel on December 02, 2011, 10:16:39 PM
இருட்டுப்பள்ளம்


அன்று அலுவலகத்தில் வேலைகளை முடிப்பதற்குள் மணி 7 ஆகிவிட்டது. வாஷ்பேசினில் இருந்த குழாயில் முகத்தை அலம்பிக்கொண்டு அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தை பார்த்தவாறே கையிலிருந்த சிறிய டவலால் முகத்தை அழுந்த துடைத்து ஆடையை சரி செய்து கொண்டு தான் உட்கார்ந்து வேலை செய்யும் மேஜையை பூட்டி அதன் சாவியை எடுத்து கைப்பையில் போட்டுக் கொண்டு லிப்டிற்க்குள் நின்று, தரைக்கு வந்ததும் ஆபீசின் கட்டிடத்திலிருந்து வெளியே வந்து சாலையில் போய் கொண்டிருக்கும் சன கூட்டத்தில் கலந்து பேருந்து நிலையத்திற்கு வந்து சேருவதற்குள் மணி 7.30 காண்பித்தது அருணாவின் கைகடியாரம்.

ஏற வேண்டிய பேருந்து கூட்டத்தை சுமந்து கொண்டு ஒரு புறமாக சாய்ந்து ஊர்ந்து வந்து பேருந்து நிலையத்தில் நின்றதும் அதுவரை பேருந்தின் சன்னல் கம்பிகளிலும் வாசலிலும் தொங்கி வழிந்து கொண்டிருந்த சிலர் பேருந்தை விட்டு இறங்கி இறங்குபவர்களை வரவேற்ப்பது போல வாசலின் இருபுறமும் நின்று வெளியே நின்றிருந்த கூட்டம் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு ஏற, பயணிகளை திணித்துக் கொண்டு மறுபடியும் சன்னல் கம்பிகளில் வழிந்து, நடத்துனரின் இரு விசிலோடு பேருந்து மறுபடியும் வாகன கூட்டத்தில் ஊர்ந்து செல்ல துவங்கியது.

இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்கள் தள்ள, பேருந்திலிருந்து பிதுங்கி கொண்டு கீழே இறங்கி சாலையோரத்தில் நடந்து பின்னர் ஆள் அதிகம் நடக்காத பங்களாக்கள் நிறைந்த தெருவில் தான் தங்கியிருந்த பெண்கள் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அருணா. அருணாவின் பூர்வீகம் திருச்சி, சென்னையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது, வேலையில் சேர்ந்து மூண்டு மாதங்களே ஆகி இருந்தது, சென்னைக்கு இதற்க்கு முன்னால் கல்லூரியில் படிக்கும் போது சுற்றுலா வந்தது மட்டுமே, உடன் படித்தவர்கள் யாரேனும் சென்னையில் வேறு நிறுவனங்களில் வேலை செய்வதாக அதுவரையில் அவளுக்கு தகவல் இல்லை, உறவினர்களும் யாரும் சென்னையில் இல்லை என்பதால் பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு செல்லவது வழக்கமாகியது.

தெருவில் விளக்கு வெளிச்சம் இல்லை கரும் இருட்டாக இருந்தது, தினமும் நடக்கும் தெரு என்பதால் ஒரு யூகத்துடன் தட்டு தடுமாறிக் நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்தாள்.

வலது கால் எதன் மீதோ பலமாக விழுந்தது வலது கையிலும் சரியான வலி, குழியிலிருந்து ஏற முயன்றும் காலும் கையும் ஒத்துழைக்கவில்லை. வலியின் தீவிரம் மூளைக்குள் மின்சாரம் பாய்ந்தது போல விண்ணென்று பரவ சுய நினைவு இழந்தாள்.

கண் திறந்து பார்த்த அருணாவின் பக்கத்தில் அவளது அறையில் தங்கியிருந்த ராதிகா

ராதி.. .......

அருணா ...........

'முதலில் பல் தேய்த்து விடறேன்'.........என்று சொல்லிக் கொண்டேகட்டிலின் தலைபகுதியை மேலே உயர்த்தினாள் ராதிகா

ராதி....... என்னை ....எப்படி........இங்க......

கையில் பல் தேய்க்க பசையுடன் வந்த ராதிகா , ' முதலில் பல் தேய்த்து விட்டு காப்பி சாப்பிடு அப்புறம் நடந்ததை பத்தி பேசலாம் ' என்றாள்.

இல்ல உனக்கு எதற்கு சிரமம் நானே தெய்ச்சுக்கிரேனே ' சொல்லிக் கொண்டே வலது கையை தூக்க முயன்றவள், கைகளில் போடப்பட்டிருந்த கட்டுகளை பார்த்து , வலியின் தீவிரம் சிறிது குறைந்திருப்பது உணர்ந்தாள். கையில் பலத்த காயம் என்பதால் கட்டு போடப்பட்டிருந்தது, ராதிகாவின் உதவி யின்றி பல் தேய்ப்பது மட்டுமல்ல வேறு எந்த வித அசைவிற்கும் உடல் ஒத்துழைக்காது என்பது அருணா தெரிந்து கொண்டாள்.

காலை உணவை ஊட்டி முடித்ததும் சில மாத்திரைகளுடன் நீரையும் குடிக்க கொடுத்தாள் ராதிகா. அருணாவின் கண்களில் நீர் மல்க தொடங்கியது.

அழாதே அருணா, உனக்கு ஒண்ணும் ஆகல, டாக்டர் ஒண்ணும் பயப்பட வேண்டாம்ன்னு சொன்னார்.

சொல்லேன்....ராதி.......என்னை ஆஸ்பத்திரிக்கு எப்படி கூட்டிட்டு வந்தே.....

'இரவு சுமார் ஒன்பது இருக்கும் உன்னை காணலியேன்னு உன்னோட செல்போனுக்கு போன் செய்தேன், தொடர்ந்து அடிச்சுட்டு 'no reply' ன்னு வந்தது, செல்போனை தொலைச்சுட்டியா இல்லன்னா மறந்து ஆபீசிலேயே வச்சுட்டு வந்துட்டியான்னு குழப்பமா இருந்துச்சு'.

'ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து நின்று சிறிது நேரம் தெருவையே பார்த்து கொண்டிருந்தேன், மெதுவாக நடந்து கொண்டிருந்த போது, தெரு முழுதும் ஒரே இருட்டா இருந்ததால யார் நடக்கராங்கன்னே தெரியல, என்னோட செல்போன்ல இருந்த டார்ச் வெளிச்சத்துல தெருவில் நடக்க ஆரம்பித்தேன், அப்போது உன் செல்போன்ல இருக்கிற ரிங்க்டோன் சத்தம் கொஞ்சம் தூரத்துல இருந்து கேட்டுது, சத்தம் வந்த பக்கம் வேகமாக நடக்க ஆரம்பிச்சேன், சத்தம் நின்னுடுச்சி என்னோட செல்போன்ல இருந்து உன்னோட செல்போனுக்கு கால் பண்ணேன், மறுபடியும் அதே ரிங்டோன் சத்தம் கேட்டுது, சத்தம் வந்த பக்கம் மெதுவா நடந்தேன், என்னோட செல்போன் வெளிச்சத்துல அங்கே இருந்த ஒரு குழியிலிருந்து ரிங்க்டோன் சத்தம் வந்தது தெரிஞ்சது, கிட்ட போய் பார்த்தால் நீ அங்கே விழுந்து கிடந்தே, கூப்பிட்டு பார்த்தேன், நீ மயக்கமா இருக்கிறன்னு தெரிஞ்சுது, உடனே தெருவை விட்டு வண்டிகள் போய்க் கொண்டிருந்த சாலைக்கு வந்து ஒரு ஆட்டோவை அழைத்து வந்து ஆட்டோக்காரரின் துணையுடன் உன்னை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, நேரே ஹாஸ்டலுக்குப் போய் அவர்களிடம் நடந்ததை சொல்லிவிட்டு, நம் அறையிலிருந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து சேர்த்தேன்'.

' டாக்டர் எக்ஸ்ரே ரத்த டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு காலிலும் கையிலும் லேசான எலும்பு முறிவு, கை இடுப்பு கால் எல்லா இடத்திலும் பலமா அடி பட்டு இருக்குன்னு சொன்னார், ஒரு வாரமாவது படுக்கையில இருக்கனம்ன்னு சொன்னார் ' என்றாள் ராதிகா.

' காலைல வேலைக்கு போகிற அவசரத்துல தெருவில் குழிகள் தோண்டப்பட்டு இருந்ததா என்று கவனிக்காமல் போய்டேன் போல இருக்கு, தெருவில் விளக்குகள் இல்லாதிருந்ததனால் குழிகள் தோண்டப்பட்டு இருப்பதை பார்க்க முடியலை'....என்றாள் ஈனஸ்வரத்தில் அருணா.

[ தெரு விளக்குகளும் இல்லாமல் தெருவிலும் குழிகளை தோண்டிவிட்டு வேலைகளை முடிக்காமல் தோண்டிய குழிகளில் பாதசாரிகளோ வண்டிகளோ விழுந்து விபத்துக்குள்ளாவதை குழியை தோண்டுபவர்கள் உணர்ந்தால் இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்படாமல் தடுக்கமுடியும்.]