FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on May 20, 2014, 07:39:08 PM

Title: ~ வைரி பறவை பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on May 20, 2014, 07:39:08 PM
வைரி பறவை பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/p403x403/10302638_610784219019041_242086248234252806_n.jpg)


வல்லூறு, வில்லேத்திரன் குருவி அல்லது பறப்பிடியன் என்று பலவாறு அழைக்கப்படும் வைரி ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் பெருமளவிற்குக் காணப்படுகின்றது.

30 - 34 செ.மீ உடலளவு கொண்ட (சாதாரண புறாவின் அளவை ஒத்தது) இப்பறவை, நீலச்சாம்பல் நிற மேலுடலும் வெண்ணிற அடியுடலில் பழுப்பு-நிற மென்வரிப் பட்டைகள் குறுக்கேயும் கொண்டிருக்கும். பெண் பறவையின் மேலுடல் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும்; பெண் சற்று பெரியதாயிருக்கும். இளம்பறவையின் அடியுடலில் செம்பழுப்பு-நிறப் புள்ளிகள் நீள்வாக்கிலிருக்கும். வாலில் கரும்பட்டைகளிருக்கும்.

மரங்கள் நிறைந்த திறந்தவெளிப் பகுதிகளை விரும்பும் வைரி, அடர்ந்த வனங்களைத் தவிர்க்கும். மனித வாழ்விடங்களுக்கு அருகில் அதிகம் காணப்படும்.

தன் பார்வையிடமான இலைகளடர்ந்த மரக்கிளையிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இரையை நோக்கிக் கீழிறங்கும் வில்லேத்திரன், இமைப்பொழுதில் இரையைக் கொத்திச் செல்லும்.

இதன் கூப்பாடு கி .. கீ ... என்று தொனியில் கரிச்சான் குருவியின் கூப்பாட்டை ஒத்திருக்கும்.

இறக்கைகளைப் பலமுறை அடித்த பின் நழுவும் பாணியில் பறந்து செல்லும். வானத்தில் வட்டமிடும் பாணியில் பறப்பதையும் காணலாம்.

அணில்கள், ஓணான்கள், எலிகள், குருவிகள், தட்டானின் இளம்புழுக்கள் போன்றவை இதன் உணவாகின்றன. தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் காலங்களில் வீடுகளிலிருந்து கோழிகளைத் திருடுவதும் உண்டு.

மார்ச்சிலிருந்து சூன் வரை இதன் கூடு கட்டும் காலமாகும். மாமரத்திலோ அதையொத்த மரத்திலோ காய்ந்த புல், வேர்களாலான காகத்தின் கூட்டையொத்த கூட்டை வில்லேத்திரன் அமைக்கும்.

மூன்று அல்லது நான்கு நீல வெண்ணிற முட்டைகளைப் பெண் பறவை இடும். ஆணும் பெண்ணும் சேர்ந்தே குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன.