FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 28, 2014, 02:04:12 PM

Title: ~ எங்க வீட்டு டயட்! ~
Post by: MysteRy on April 28, 2014, 02:04:12 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-rns3DQdbhAc%2FUd0zdFNXJsI%2FAAAAAAAANk0%2FqFyM4f9iq8k%2Fs1600%2F11111.jpg&hash=835d3edb365d70a94d566c3168d5932a035fce42)

'ரசித்துச் சாப்பிடும் உணவு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா? அதுவே சத்தாகவும் சகல நோய்களையும் போக்கும் அருமருந்தாகவும் இருந்தால்... ஆயுசுக்கும் ஆரோக்கியமாக வாழலாம்!’ என்பதே மருத்துவர்கள் சொல்லும் மகத்தான உண்மை!

இருமல், ஜலதோஷம் எனச் சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு மட்டும் அல்லாமல், காய்ச்சல் முதல் காமாலை வரை அத்தனை நோய்களின் வீரியத்தையும் குறைக்கும் அருமருந்து வீட்டில் சமைக்கும் உணவுதான். அப்படி, சட்டென நோயின் பிடியில் இருந்து நம்மை விடுவிக்க கை கொடுத்த உணவு செய்முறைகளையும் அனுபவங்களையும் வாசகர்கள் இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.

நெல்லிக்காய் சாம்பார்
குடும்பத்துடன் ஊட்டிக்குப் போயிருந்தோம். ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்தால் எல்லோருக்கும் ஜுரம், தலைவலி. வெளியில் சாப்பிட்டது ஏற்றுக்கொள்ளாமல் வாய் முழுவதும் கசப்பு. உடல் சூட்டினால், சிறுநீர் கழிக்கவும் சிரமம். இந்நிலையில், தனது வீட்டில் விளைந்த நெல்லிக்காய்களை உறவினர் ஒருவர் கொண்டுவந்து தந்தார். புளிக்குப் பதிலாக நெல்லிக்காய் சேர்த்து காரம் இல்லாத சாம்பார் சமைத்தேன். வாசனையும் ருசியும் அருமையாக இருந்ததோடு உடல் உஷ்ணமும் குறைந்து குளுமை அடைந்தது. மஞ்சள் காமாலை, மூலநோய் வந்தால் இந்த சாம்பார் செய்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இப்போதெல்லாம், வாரம் இரு முறை எங்கள் வீட்டில் நெல்லிக்காய் சாம்பார்தான்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2012%2F08%2Fzmqmfj%2Fimages%2Fp64d.jpg&hash=a991993af628517a622881505f143cfa9c000dda)

செய்முறை: ஐந்து பெரிய நெல்லிக்காய்கள் ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் இந்த நெல்லிக்காய்த் துண்டுகளைக் கொட்டி மிதமாக வேகவைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு தக்காளியைக் கரைத்து ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். மல்லித்தூள், மிளகாய்த்தூள் தலா அரை டீஸ்பூன், சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த துவரம்பருப்பை அதனுடன் ஊற்றி மீண்டும் கொதிக்கவைக்கவும். இந்தக் கரைசலுடன் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிதத்தை சேர்த்து இறக்கினால் சுவையான நெல்லிக்காய் சாம்பார் தயார்.


புதினா மல்லி முள்ளங்கி ஜூஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2012%2F08%2Fzmqmfj%2Fimages%2Fp64a.jpg&hash=593dfc1c78c96dcfdbcf84eb802ab6ab0554da73)

எங்கள் வீட்டில் எல்லோரும் யோகா, தியான வகுப்புகளுக்குச் செல்பவர்கள். அதனால், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளையே அதிகமாக விரும்பிச் சாப்பிடுவோம். சில சமயம் கல்யாணம் போன்ற விசேஷ வீடுகளில் நாங்கள்  சாப்பிட நேரும்போது உணவு சரியாக ஜீரணமாகாமல் பாடாய்படுத்தும். இதுபோன்ற தருணங்களில், இந்தப் புதினா மல்லி முள்ளங்கி ஜூஸ் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது. வாரம் ஒரு முறை இதைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தால், வாய்க் கசப்பு நீங்கி வயிறும் சுத்தமாக இருக்கும். நன்றாகப் பசி எடுப்பதோடு உடலில் ஒருவித புத்துணர்ச்சி உண்டாகும்.
செய்முறை: புதினா - கொத்தமல்லி - நறுக்கிய முள்ளங்கி தலா ஒரு கப் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது உப்பு, சிட்டிகை மிளகுத்தூள், அரை கப் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டால் அதற்குப் பெயர்தான் புதினா மல்லி முள்ளங்கி ஜூஸ்.


கோதுமை ஓட்ஸ் சப்பாத்தி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2012%2F08%2Fzmqmfj%2Fimages%2Fp64b.jpg&hash=ddf22359ca7230fb3b2942e7856e73e8d913044a)

வயதானவர்கள் இரவு நேரத்தில் அரிசி சாப்பாட்டை சாப்பிடுவதைவிடவும் சிற்றுண்டி உண்ணுவதே நல்லது. இது எளிதில் ஜீரணமாகும் என்பதால், பெரும்பாலும் என் வீட்டில் சிற்றுண்டிதான் செய்வோம். என் மாமியாருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது. அவருக்காக கோதுமை மாவுடன் ஓட்ஸ் கலந்து சப்பாத் தியாகச் செய்வோம். இதனால் காலை ஆறு மணி வரை பசி எடுக்காமல் இருக்கும். இதனுடன் தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி அரைத்துச் சேர்க்கும்போது மேலும் சுவையாக இருப்பதோடு, உடல் பருமனையும் குறைக்கும். வெள்ளரி தயிர் ரெய்தாவைத் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்முறை: ஒரு துண்டு இஞ்சி, வெங்காயம் - தக்காளி - பச்சை மிளகாய் தலா ஒன்று, அரைக் கட்டு கொத்தமல்லி ஆகிய வற்றைப் பொடியாக நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, ஓட்ஸ் இரண்டையும் தலா ஒரு கப் கலந்து, தேவையான உப்பு சேர்த்துப் பிசையவும். (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்). இந்தக் கலவையை சப்பாத்தியாக தோசைக்கல்லில் சுட்டு எடுக்கும்போது சிறிது எண்ணெய் விட்டு, வேக வைக்கவும்.