FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on April 13, 2014, 08:48:28 PM

Title: கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
Post by: kanmani on April 13, 2014, 08:48:28 PM
உங்களுடைய உடலில் 500 விதமான செயல்பாடுகளை செய்யக்கூடிய உறுப்பாக கல்லீரல் உள்ளது. கல்லீரலில் ஏற்படும் எந்தவிதமான பாதிப்பும், அது செய்யும் வேலைகளையும் பாதிக்கும். பொதுவாக கல்லீரலானது குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்படுகிறது.


இதன் மூலம் உடலில் பல சிக்கல்கள் வந்து சேருகின்றன. இந்த கட்டுரையில் கல்லீரல் நோய் இருப்பதற்கான சில முக்கியமான அறிகுறிகளைப் பற்றிக் கொடுத்துள்ளோம்.


கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரிசெய்யும் சில இயற்கை நிவாரணிகள்!!!

குமட்டல் மற்றும் வாந்தி

பெரும்பாலான நோய்கள் வரும் போது தோன்றும் பொதுவான அறிகுறியாகவே இது உள்ளது. குமட்டல் என்பது வாந்தியை வரச் செய்யும் உணர்வுடன், வேர்வை மற்றும் அதிகபட்ச எச்சில் சுரத்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வாந்தியின் போது வயிற்றிலுள்ளவை அனைத்தையும் வாய் வழியாக, வலியுடன் வெளியேற்றுவதைக் குறிக்கும்.

வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படுதல்

 உங்களது வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் தான் கல்லீரல் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உங்களுக்கு வலி ஏற்படுவதாகத் தோன்றினால், கல்லீரல் நோய் அறிகுறிகளில் ஒன்றாக அதைக் கருதலாம். எனவே, உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

செரிமானக் குறைபாடு

சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் மிகவும் முக்கியமான உறுப்பாக இருக்கும் கல்லீரலில், எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் உணவுகள் செரிமானம் ஆவதில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக உங்களால் சரியாக சாப்பிட முடியாமல் போகலாம் அல்லது வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு தோன்றலாம்.

வலுவின்மை மற்றும் களைப்பு

உடலுக்குச் செல்லும் பெரும்பாலான தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்களை கவர்ந்திழுக்கும் பொறுப்பை கல்லீரல் கொண்டுள்ளது. எனவே கல்லீரல் முறையாக செயல்படுவது தடைப்பட்டால், உடல் வலுவின்மை மற்றும் களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எடை குறைவு

நாம் உட்கொள்ளும் உணவை நமது உடல் சரியாக செரிக்க முடியாத காரணத்தால், நமக்கு பசி ஏற்படுவது குறையும். அதனால், நாம் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து விடும். இதன் காரணமாக நமது உடலில் சராசரியான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு, திடீரென்று உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். இதற்கும் கல்லீரல் நோய் தான் காரணமாக இருக்கும்.

சருமம் மஞ்சள் நிறமாதல்

ஹெபடைடிஸ் அல்லது கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் காமாலையாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுடைய சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறத் துவங்கியிருக்கும்.

குறிப்பு

கல்லீரல் நோயினால் வேறு சில சிக்கல்களும் வருகின்றன. எனவே, இந்த நோய் வருவதை உணர்ந்து கொள்ள வேண்டியதும், வருமுன் காத்து ஆரோக்கியத்தைப் பேணுவதும் மிகவும் அவசியமாகும்.

 கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!


தானியங்கள்

 கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது, அந்த கொபப்புகள் கல்லீரலில் தங்கிவிட்டால், பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தானியங்களை அதிகம் சாப்பிடும் போது அதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், அந்த கொழுப்புகளை கரைத்துவிடும்.

ஆலிவ் ஆயில்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டில் உள்ள கொலஸ்ட்ராலானது உடலுக்கு மிகவும் சிறந்தது. மேலும் அந்த கொழுப்பானது வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுவதோடு, கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே ஆலிவ் ஆயிலை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

பூண்டு

பூண்டில் சுத்தப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. குறிப்பாக அல்லிசின் மற்றும் செலினியம் போன்றவை இருப்பதால், அவை கல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றிவிடும்.

ஆப்பிள்

ஆப்பிள் கல்லீரலை சுத்தப்படுத்தும் பொருள் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த பழத்தில் உள்ள பெக்டின் என்னும் பொருள் வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலில் டாக்ஸின்கள் தங்காமல் தடுக்கும்.

இலைக் காய்கறிகள்

இலைவகைக் காய்கறிகளான காலிப்ளவர், முட்டைகோஸ், ப்ராக்கோலி போன்றவற்றில் குளுக்கோஸினோலேட் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

பீட்ரூட்

 பீட்ரூட்டில் அதிகமாக நிறைந்திருக்கும் ப்ளேவோனாய்டுகள், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும்

அவோகேடோ

அவோகேடோவை சாப்பிட்டால், அவை உடலில் குளுதாதையோனை உற்பத்தி செய்து, கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.

பச்சைக் காய்கறிகள்

காய்கறிகள் பச்சை நிறங்களை பெறுவதற்கு, அவற்றில் குளோரோபில் இருக்கிறது. எனவே இத்தகைய பச்சை காய்கறிகளை சாப்பிட்டால், அவற்றில் உள்ள குளோரோபில் கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, வெளியேற்றும்.

பம்பளிமாஸ்

கல்லீரலில் உள்ள அழுக்குகளை நீக்க வைட்டமின் சி என்னும் சத்து பெரிதும் உதவும். இத்தகைய சத்து கிரேப் ப்ரூட் என்னும் பம்பளிமாஸ் பழத்தில் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி கிடைத்து, கல்லீரலில் அழுக்குளை நீக்கும் நொதிகளை உற்பத்தி செய்து, கல்லீரலை சுத்தம் செய்யும்.

மல்லி

மல்லியை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலானது குளிர்ச்சி அடைவதோடு, கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.

மஞ்சள்

 மசாலாப் பொருட்களில் ஒன்றான மஞ்சள் கிருமிகளை அழிக்க சிறந்தது. ஆகவே வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால், அப்போது மஞ்சளை உணவிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடலாம். இதனால் அனைத்தும் சரியாகும்.

வால்நட்

பொதுவாக கல்லீரலில் மாசுக்கள் தங்குவதற்கு அம்மோனியா அதிகம் இருப்பதே ஆகும். வால்நட்டில் அர்ஜினைன் என்னும் அமினோ ஆசிட் இருப்பதால், அவை அந்த அம்மோனியாவை கல்லீரலில் இருந்து வெளியேற்றி, கல்லீரலை சுத்தமாக வைக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் அதிகமான அளவில் நன்மைகள் அடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய எண்ணற்ற நன்மைகளில், கல்லீரலில் உள்ள அழுக்குளை வெளியேற்றும் கேட்டச்சின்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடும் போது, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தப்படுத்தும் குளுதாதையோனை உடலில் உற்பத்தி செய்கிறது. ஆகவே தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சையை பிழிந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சீமைக் காட்டுமுள்ளங்கி

கல்லீரலில் உள்ள பழுதடைந்த செல்களை சரிசெய்து, அவற்றை சீராக இயங்க வைப்பதற்கு, சீமைக் காட்டுமுள்ளங்கி மிகவும் சிறப்பானதாக இருக்கும்.