FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 10, 2014, 02:51:16 PM
-
பீனிக்ஸ் பறவை
ஒவ்வொரு முறையும் என்னை
பார்வையால் சுட்டெரிக்கிறாய் நானும்
பீனிக்ஸ் பறவையாய்
மறுபடி மறுபடி உயிர்த்தெழுகிறேன்
உன் பார்வை
என் மேல் படாதா என
சிரிப்பழகி
உன் கோபங்கள் கூட என்னை
எதுவும் பண்ணுவதில்லை ஆனால்
நீ ஒவ்வொரு முறையும்
சிரிக்கும் போது நான்
ஒவ்வொரு முறையும்
செத்து செத்து பிழைக்கிறேன்
அழகின் அவதாரம்
உலகில் உள்ள
பெண்களை எல்லாம் படைத்த
இறைவன் தானே
உன்னையும் படைத்தான்
உன்னிடம் மட்டும் ஏன் இத்தனை கரிசனம்
எல்லா அழகையும்
உன்னிடம் கொட்டி வைத்திருக்கிறானே
ரோஜா
பனியில் நனைந்த ரோஜா
கேள்விப் பட்டிருக்கிறேன்
நீ குளித்து விட்டு வரும் போது தான்
அந்த ரோஜா எப்படி இருக்கும் என
நான் அறிந்து கொண்டேன்
காந்தக்கண்கள்
அவள் கண்களை
காந்தம் என்று சொன்னார்கள்
காந்தம் இரும்பை அல்லவா
கவரும்
அவள் கண்கள்
என் இதயத்தை அல்லவா
கவர்கிறது
ரோஜாவுக்கு பிடிக்காத ரோஜா
உன்னை
எனக்குப் பிடிக்கும்
என் வீட்டாருக்கு ரொம்பப்பிடிக்கும்
ஆனால்
என் வீட்டு செடியில் இருக்கும்
ரோஜாக்களுக்கு மட்டும்
உன்னை பிடிக்கவில்லை
நீ அவைகளுக்கு போட்டியாக வந்தவளாம்
ஓவியம் நீ
கொஞ்சம் மலர்கள்
கொஞ்சம் சந்தனம்
கொஞ்ச்ம் நிலா வெளிச்சம்
கொஞ்சம் வானவில் வர்ணங்கள்
நிறைய சங்கீதங்கள்
ஒன்றாக குழைத்து
வரையப்பட்ட ஓவியம் நீ
காதலின் அளவு
காதல் எத்தனை பெரியது
என்னிடம் கேட்டால்
நான் சொல்வேன்
அவள் கைகள் இரண்டின் நீளம் அளவு
காதல் பெரியது என்று
ஏனென்றால்
உன் கைகள் இரண்டால்
எனை கட்டியணைத்து
காதல் எத்தனை பெரிதென
எனக்கு உணர்த்தியவள் நீ தானே
எனக்காக நீ
மலருக்காக தேன்
படைக்கப் பட்டது போல
எனக்காக நீ படைக்கப் பட்டாய்
தேனுக்காக வண்டு
படைக்கப் பட்டது போல
உனக்காக நான் படைக்கப்பட்டேன்
பிறவிகள்
கதவு ஜன்னல்
கட்டில் நாற்காலி
இன்னும்
பல பிறவிகள்
எடுத்து விடுகிறது
செத்த பின்பும்
மரம் !!
மழை
எத்தனை முறை
இமைகள்
குடைகளாய் விரிந்தாலும்
எப்படியும்
நனைந்துதான் விடுகின்றன
விழிகள்
கண்ணீர் மழையில்
மரணம்
மணல் அள்ளும்
லாரிகளில் அடிபட்டு
மரணிக்கின்றன
ஒவ்வொரு
வரண்ட ஆறும்
தண்டனை
தவறு செய்யாமலேயே
தோல் உரிக்கிறார்கள்
சாத்துக்குடியை
கள்ளிச்செடிகள்
பெண்களின் எண்ணிக்கை
குறைந்திருந்த
அந்த கிராமத்தில்
கள்ளிச்செடிகள் மட்டும்
நிறைய இருந்தன