FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 28, 2011, 04:40:04 AM
-
கடைசி சாமுராய் (The Last Samurai)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Flastsamurai1.jpg&hash=8a5a9c7104343f65fd074fdd2356f0c7ee82900f)
ஜப்பானின் சாமுராய்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவர்கள். பல நூற்றாண்டுகளாய் ஜப்பானிய மன்னர்களின் பாதுகாவலர்களாய் இருந்தவர்கள். தன்மானத்திற்கும், நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும் பெயர் போனவர்கள். ஈட்டி, வில், சிறிய கத்திகள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும் அவர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை தங்கள் வாளைப் பூஜிப்பவர்களாகவும், அதற்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தவர்கள். அப்படிப்பட்ட சாமுராய்களின் பெருமையை உணர்ச்சிபூர்வமாகவும் கவிதையாகவும் சொல்ல முயன்றதில் வெற்றி பெற்ற ஆங்கிலத் திரைப்படம் கடைசி சாமுராய். (The Last Samurai). முன்னமே ஒரு முறை பார்த்து ரசித்திருந்தாலும் சமீபத்தில் தொலைக்காட்சியில் இன்னொரு முறை பார்த்த போதும் சலிக்கவில்லை. அதுவே என்னை இதை எழுதத் தூண்டியது...
திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே கதை சொல்பவர் இப்படிச் சொல்வதாகப் போடுகிறார்கள்: “எல்லோரும் சொல்கிறார்கள் ஜப்பான் வாளால் உருவாக்கப்பட்டது என்று. ... நான் சொல்கிறேன் ஜப்பான் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில மாவீரர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒன்றிற்காக தங்கள் உயிரையும் தரத் தயாராக இருந்தவர்கள். அது தான்- தன்மானம்”
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானில் மேற்கத்திய வழிமுறைகளையும், போர்முறைகளையும் கொண்டு வந்து விட சக்கரவர்த்தியின் பிரதான ஆலோசகர் ஓமுரா (நடிகர்-Masato Harada) துடிக்கிறார். இளம் சக்கரவர்த்தியும் அதற்கு இசைகிறார். தங்கள் பாரம்பரிய மதிப்பீடுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரான மாற்றங்களை ஜப்பானில் கொண்டு வர கட்ஸுமோடோ (நடிகர்-Ken Watanabe) என்பவர் தலைமையில் உள்ள சாமுராய்கள் எதிர்க்கின்றனர். அவர்கள் எதிர்ப்பை அடக்க ஓமுரா ஜப்பானிய தேசியப்படையினருக்கு மேற்கத்திய சண்டைப் பயிற்சியும், துப்பாக்கிப் பயிற்சியும் தர அமெரிக்க வீரர்களின் உதவியை நாடுகிறார். அப்படி வரும் குழுவில் ஒரு கேப்டன் தான் படத்தின் கதாநாயகன் நாதன் அல்க்ரென் (நடிகர்- Tom Cruise).
அல்க்ரென் அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு பல அப்பாவி பழங்குடியினரைக் கொன்று குவித்து அதன் பின் எழுந்த மனசாட்சியின் குற்றச்சாட்டின் உறுத்தலில் இருப்பவர். அதை மறக்க குடியை நாடும் அவருக்கு ஜப்பானிய சக்கரவர்த்தி தர ஒத்துக் கொண்ட பெரிய வெகுமதித் தொகை தான் சம்மதிக்க வைக்கிறது. வந்தவர் துப்பாக்கியைப் பற்றி சிறிதும் அறியாத ஜப்பானிய தேசியப் படையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி தரத் துவங்குகிறார். அந்த சமயமாகப் பார்த்து சாமுராய்களின் தாக்குதல் ஓரிடத்தில் ஆரம்பிக்க ஜப்பானியப் படையினர் அதை முறியடிக்கப் போக, அவர்களுடன் சில அமெரிக்க வீரர்களும் போக நேரிடுகிறது. அவர்களில் அல்க்ரென்னும் ஒருவன்.
சாமுராய்களின் எண்ணிக்கையை விட பல மடங்காக ஜப்பானியப் படையினர் இருந்த போதும் சாமுராய்களின் திறமைக்கும் வேகத்திற்கும் முன் ஈடுகொடுக்க முடியாமல் தோற்கின்றனர். அல்க்ரென் முடிந்த வரை வீரத்துடன் போராடி சாமுராய்களின் முக்கியமான ஒரு தலைவனை(கட்ஸுமோடோவின் தங்கையின் கணவனை)க் கொன்று காயப்பட்ட போதிலும் பலனில்லாமல் போகிறது. அல்க்ரெனைக் கொல்ல சாமுராய்களில் சிலர் முயன்ற போது அல்க்ரெனின் வீரத்தைக் கண்டு மெச்சிய கட்ஸுமோடோ அவனைக் கொல்லாமல் பிணைக்கைதியாக சிறைபிடித்துச் செல்கிறார்.
அல்க்ரெனை அவர்கள் தொலைதூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Flastsamurai4.jpg&hash=9132a91ae646bad457ab369123609110dc45e863) அங்கே அவன் காயங்களைக் கழுவி சிகிச்சை செய்யும் பொறுப்பு கட்ஸுமோடோவின் சகோதரி டாகா (நடிகை-Koyuki)விற்குக் கிடைக்கிறது. கணவனைக் கொன்றவன் என்ற வெறுப்பு ஆரம்பத்தில் அவளுக்கு இருந்தாலும் பின் சிறிது சிறிதாக மறைகிறது. அல்க்ரென் சாமுராய்களின் வழிமுறைகள், பாரம்பரியம், ஒழுக்கம், தியாக உணர்வு ஆகியவற்றால் சிறிது சிறிதாகக் கவரப்படுகிறான். டாகாவிடம் ஈர்க்கப்படுகிறான். டாகாவிடமும், அவள் குழந்தைகளிடமும் அவன் பழக நேரிடும் போது அவனுக்கு ஏற்படும் ஆரம்ப தர்மசங்கடங்களும், குற்ற உணர்வும் மிக அழகாக காட்டப்படுகின்றன.
குணமான அவன் சாமுராய்களின் தலைவனான கட்ஸுமோடோவிற்கு நெருங்கிய நண்பனாகிறான்.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2FTheLastSamurai_3.jpg&hash=680558bc16f86d32bac0753267d55ca4f29809f0) அவர்களது வாழ்க்கை முறையில் இருக்கும் அமைதி அவனுடைய புண்பட்ட மனதிற்கு மருந்தாக அமைகிறது. டாகாவின் கணவனைத் தான் கொன்றதற்காக ஒரு முறை அவன் வருத்தப்படுகிறான். அதற்கு கட்ஸுமோடோ சொல்கிறார். “அவன் மரணம் நல்ல மரணம்”. சாமுராய்கள் இறந்ததற்காக வருத்தப்படுவதில்லை. எப்படி இறப்பது என்பது முக்கியம் என்றே கருதுகிறார்கள் என்பதை ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுகிறது.
ஆரம்பத்தில் சாமுராய் பிள்ளைகளிடம் வாட்பயிற்சி பெறும் அல்க்ரென் பின் பெரியவர்களிடமும் பயிற்சி பெற்று நல்ல தேர்ச்சியும் பெறுகிறான். ஓமுராவால் கஸுமோடோவைக் கொல்ல அனுப்பப்படும் நபர்களை எதிர்த்து கட்ஸுமோடோ போரிடுகையில் அவருக்கு பக்க பலமாக அல்க்ரெனும் நின்று போரிட்டு வந்தவர்களைத் தோற்கடிக்கிறான்.
கட்ஸுமோடோ சக்ரவர்த்தியிடம் நேரடியாகச் சென்று தங்கள் பக்க நியாயங்களையும், ஜப்பானின் பாரம்பரியம் காக்க மேலை நாட்டினரிடம் விலை போகக்கூடாது என்பதையும் விளக்குகிறார். ஆனால் ஓமுராவின் தவறான ஆலோசனைகளில் மயங்கிப் போயிருந்த பலவீனமான சக்ரவர்த்தி அப்போதும் அதற்கு செவி சாய்க்க மறுக்கிறார். ஓமுரா கட்ஸுமோடோவை சிறைப்படுத்தி விடுகிறார். அல்க்ரென் உதவியாலும், தன் மகன் உதவியாலும் கட்ஸுமோடோ தப்பித்தாலும் மகன் கொல்லப்படுகிறான்.
கடைசியில் ஓமுரா சாமுராய்களை அழிக்க இரண்டு பெரிய போர்ப்படைகளை அனுப்புகிறார்.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Flastsamurai2.jpg&hash=73e754a845ce7de7d06b5a88d71ad75c5b45ab69) கட்ஸுமோடோவும் சாமுராய்களும் அத்தனை பெரிய படைகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுக்கு எதிராக தாங்கள் வெல்ல முடியாது என்று அறிந்தும் போரிடத் தயாராகிறார்கள். அல்க்ரெனும் அவர்களுடன் போரிடத் தயாராகிறான். அவனுக்கு டாகாவின் கணவனின் போர்க்கவசம் தரப்படுகிறது. யாரைக் கொன்றிருந்தானோ அவனுடைய போர்க்கவசத்தையே அணிந்து கொண்டு அவன் எந்த இலட்சியத்திற்காகப் போராடினானோ அதே இலட்சியத்திற்காகப் போரிட அல்க்ரென் தயாராகிறான்.
போரில் சாமுராய்கள் மேற்கத்திய போர் உபகரணங்கள் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். சரணடைந்தால் உயிர்ப்பிச்சை தருவதாக எதிரிகள் கூறியதை ஏற்காமல் மேற்கொண்டு போரிட்டு துப்பாக்கி சூட்டிற்குப் பலியாகிறார்கள். கட்ஸுமோடோ காயமடைந்து எதிரிகளிடம் பிடிபட விரும்பாமல் அல்க்ரென் உதவியுடன் தன்னையே மாய்த்துக் கொள்கிறார். அதைக் கண்ட எதிரிப்படை வீரர்கள் அத்தனை பேரும் தங்கள் தொப்பிகளை எடுத்து மண்டியிட்டு மரியாதை செலுத்துகிறார்கள். அந்த காட்சி மிகவும் உருக்கமாக படமாக்கப்பட்டுள்ளது.
கடைசியில் கட்ஸுமோடோவின் வாளுடன் அல்க்ரென் சக்கரவர்த்தியை சந்திக்கச் செல்கிறான். அந்த நேரத்தில் தான் அமெரிக்கர்களுடன் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட சக்கரவர்த்தி தயாராக இருக்கிறார். அவரிடம் கடைசி சாமுராய் கட்ஸுமோடோவின் வீரவாளை ஒப்படைக்கிறான் அல்க்ரென். ”இதை அவர் உங்களிடம் ஒப்படைக்கச் சொன்னார். இதை வைத்திருந்த அவருடைய முன்னோர்களும் எதற்காக இறந்தார்கள் என்பதை இதைக் கையில் கிடைக்கும் போதாவது நீங்கள் நினைத்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை அவரது கடைசி மூச்சு போகும் நேரத்தில் இருந்தது. சாமுராய்கள் இல்லா விட்டாலும் அவர்கள் சக்தி உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்”
அல்க்ரென் என்ற அமெரிக்கன் ஒரு ஜப்பானிய சாமுராயுடன் சேர்ந்து போரிட்டதும், (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Flastsamurai3.jpg&hash=177e6fd00a2225d983d775fb430461b80fb02b41)அந்த வாளைக் கொண்டு வந்து அப்படிச் சொன்னதும் சக்ரவர்த்தியைப் பெரிதும் பாதித்தது. அனைத்தையும் அறிந்த பிறகு அவர் மனம் மாறுகிறார். ஓமுரா சக்ரவர்த்தியிடம் ஏதோ சொல்ல முன் வந்த போது அவரை அலட்சியப்படுத்திய சக்ரவர்த்தி அமெரிக்கர்களுடனான ஒப்பந்தத்திற்குக் கையெழுத்து போட மறுத்து விடுகிறார்.
அல்க்ரென் அந்த ஜப்பானிய கிராமத்திற்கே திரும்புகிறான். டாகா, மற்றும் அவள் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். கடைசியில் கதை சொல்பவரின் குரல் இப்படி சொல்லி படத்தை முடிக்கிறது. “சாமுராய்களின் நாட்கள் இப்படியாக முடிந்து போயின. நாடுகளும் மனிதர்களைப் போல ஒரு விதிக்கு உட்பட்டவையே அல்லவா. அந்த அமெரிக்க கேப்டனைப் பொறுத்த வரை சிலர் போரில் கிடைத்த காயத்தின் மூலமாகவே இறந்தான் என்கிறார்கள். சிலர் தன் நாட்டிற்கே திரும்பினான் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் தேடி வெகு சிலருக்கே கிடைக்கும் மன அமைதியை அவன் கடைசியில் கண்டு கொண்டான் என்றே நம்ப ஆசைப்படுகிறேன்”
திரைப்படம் முடிந்த பிறகும் மனம் என்னவோ செய்கிறது. கதாபாத்திரங்கள் மனதில் தங்கி விடுகின்றனர்.
பல விருதுகளைப் பெற்ற இந்த திரைப்படத்தின் கதை ஜான் லோகன் என்பவரால் எழுதப்பட்டது. திரைப்படத்தை இயக்கியவர் எட்வர்டு ஸ்விக். 2003ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கடைசி சாமுராய் கட்ஸுமோடோவாக நடித்த கென் வாடனபே நடிப்பு மிக அருமையாக இருக்கிறது. அந்த நபராகவே திரைப்படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார் மனிதர். அல்க்ரென்னாக நடித்த டாம் க்ரூயிஸும், டாகாவாக நடித்த கொயுகியும் கூட மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். போர்க்காட்சிகளின் பிரம்மாண்டமும், ஜப்பானிய கலாச்சாரத்தை அழகாகச் சொல்லும் கிராமத்துக் காட்சிகளும் கண்களையும், மனத்தையும் கவர்கின்றன.
காலம் வென்று நிற்கக்கூடிய இந்தத் திரைப்படத்தை சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.