FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Global Angel on November 26, 2011, 04:15:23 AM

Title: இளையத் தலைமுறை
Post by: Global Angel on November 26, 2011, 04:15:23 AM
இளையத் தலைமுறை  


காதலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களது படிப்பிற்கும் பெற்றோருக்கும் கொடுக்கத்தவரும் இளைய சமுதாயத்தினர் மீது பேராசிரியர் சுரேஷுக்கு எப்போதுமே தீராத வெறுப்பு, தனது ஒரே மகன் விக்ரமும் அவனுடைய நண்பர்கள் கூட்டமும் கூட இதே வகையைச் சார்ந்தவர்கள் தான், சுரேஷ் எப்போதும் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்ப்பதுண்டு சுரேஷின் தகப்பனாருக்கு அரிசி மொத்த வியாபாரம், பள்ளி விடுமுறை நாட்களில், சமயம் கிடைக்கும்போதெல்லாம் தனது தகப்பனின் அரிசிமண்டிக்கு சென்று தகப்பனாருக்கு உதவி செய்ய முயலும் போதெல்லாம் அவனது தகப்பனார் 'இந்த வேலையெல்லாம் நீ கத்துகிட்டு வருங்காலத்துல கஷ்ட பட வேண்டாம், நிறைய படிச்சிட்டு பெரிய உத்தியோகம் பார்க்கணும்' என்று சொல்லுவார்.

பள்ளிக் காதலோ கல்லூரிக் காதலோ சுரேஷை பாதிக்கவில்லை, படிப்பில் படுகெட்டிக்காரன், அவனது நண்பன் ஆனந்தும் சுரேஷைப் போன்ற விருப்பு வெறுப்பு என்று எல்லா குணங்களிலும் மிகவும் ஒத்து போகும் நண்பன், இருவரும் சேர்ந்தே பள்ளி கல்லூரி படிப்பை முடித்தனர், வேலை கிடைத்த போது இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் வேலை கிடைத்தது சந்தர்ப்பம் கிடைத்த போது அடிக்கடி சந்தித்தும் வந்தனர், சுரேஷ் வட நாட்டிலிருந்த பல்கலைகழகத்தில் வேலை மாற்றிக்கொண்டு சென்ற பின்னர் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பது இயலாமல் போனது.

தன் மகனின் நான்கு வருட படிப்பு முடிந்தவுடன் தனது நண்பன் ஆனந்த் பணிபுரியும் கல்லூரிக்கு விண்ணப்பித்து பேராசிரியராக நியமனம் கிடைத்த பின் ஆனந்தை பார்த்து தானும் அதே கல்லூரியில் பணி புரியப் போகும் சந்தோஷத்தை தெரிவிப்பதற்கு நண்பனின் வீட்டிற்கு வந்தான் சுரேஷ். சுரேஷ் ஆனந்தின் வீட்டிற்கு வரும்போது வழியில் அதிக வருடங்கள் கழித்து சந்திக்கப் போகும் தனது உயிர் நண்பன் ஆனந்த் தன்னை கண்டதும் சந்தோஷத்தில் மகிழ்ந்து விடுவான் என்று நினைத்து கொண்டு அவனது வீட்டையடைந்தான், அச்சமயம் ஆனந்த் அவனது தோட்டத்திலிருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான், ஆனந்தின் முகத்தில் சோக இருள், சற்றும் சிரிப்பே இல்லாத வெளிறிய முகம் கண்ட போது உடல் நலமின்மையால் ஆனந்தின் முகம் மாருபட்டுள்ளதோ என்று நினைத்து உடல் நலமில்லையா என்றான் சுரேஷ். அதற்க்கு பதிலேதும் கூறாத நண்பனின் மௌனம் சுரேஷுக்கு வியப்பை கொடுத்தது.

தோட்டத்திலிருந்த நாற்காலிகளில் அமர்ந்த இருவருக்கும் ஆனந்தின் பழைய சமையற்காரன் முருகன் தேநீர் எடுத்து வந்தான், தேநீரை வைத்த முருகன் சுரேஷைப் பார்த்து 'ஐயா, சொவ்கியங்களா, வீட்ல எல்லாரும் சவுக்கியமா' என்றான், 'நாங்கள் சவுக்கியம் முருகா நீயும் உன் வீட்டாரும் சவுக்கியமா' என்று பதிலுக்கு விசாரித்தான் சுரேஷ். திரும்பிச் செல்ல இருந்த முருகனிடம் 'ஐயாவுக்கும் சேர்த்து இரவு சாப்பாடு தயார் பண்ணிடு முருகா' என்றான் ஆனந்த்.

இடைப்பட்ட காலத்தில் ஆனந்தை சந்திக்க இயலாமல் போனதன் விவரத்தை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ், இருட்ட ஆரம்பித்தது விளக்குகளை போட்டுவிட்டு இருவரும் வீட்டினுள்ளே சென்றனர், 'ஆமா, நான் வந்ததிலேர்ந்து சிஸ்டரையும் சுபாவையும் காணமே எங்காவது வெளில போயிருக்காங்களா' என்றான் சுரேஷ். 'வா' என்று சுரேஷை பார்த்து சொல்லிவிட்டு வீட்டினுள்ளிருந்த மாடிப்படிகளில் ஆனந்த் ஏற அவனை பின்தொடர்ந்தான் சுரேஷ்,

ஆனந்த் சுரேஷுடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பற்றி பேசும் போது தன் மனைவி சொரணாவையும் அழைத்து உட்கார வைத்து கேட்கச் சொல்லுவான், ஆனந்தின் மனைவி சொர்ணா நன்கு படித்தவர், தங்களது ஒரே மகள் சுபாவை வளர்ப்பதற்காக வேலைக்கு செல்லாமல் மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர், சுபா படிப்பில் ஆனந்தைப் போலவும் சொர்ணவைப் போலவும் படு கெட்டிக்காரி. சுரேஷுடன் விளையாட்டாக பேசும்போதெல்லாம் 'நம்ம ரெண்டு பேரும் சம்பந்திகளாகிடலாண்டா' என்பான் ஆனந்த். மாடியிலிருந்த ஒரு படுக்கையறை சுபாவினுடையது மற்றது கணவனும் மனைவியும் உபயோகிப்பது, சுபாவின் படுக்கையறையின் கதவு பூட்டபட்டிருந்தது, அடுத்த படுக்கையறையில் ஆனந்தின் மனைவி கட்டிலில் படுத்திருந்தார்,

சுரேஷ் ஆனந்தின் காதுகளுக்கு மட்டும் கேட்க்கும் படி மெல்லிய குரலில் 'சிஸ்டருக்கு உடம்பு சரியில்லையா' என்றான், 'மெதுவா ஏண்டா பேசறே சத்தமா பேசினாக் கூட அவள் எழுந்துக்க மாட்டாடா' என்றான் அழுகையுடன் ஆனந்த், ஆனந்தின் தோள்களை தன் மீது இழுத்து அணைத்துக் கொண்டு ஏண்டா என்னடா ஆச்சு சிஸ்டருக்கு என்றான் சுரேஷ், சுரேஷின் குரலில் தடுமாற்றம். ஆனந்த் பதில் சொல்லவே இயலாமல் குமுறி அழுதான், அவனை மேலும் வருத்தப்பட வைப்பதற்கு பிடிக்காமல் மீண்டும் மாடியை விட்டு இருவரும் கீழே வந்தனர்.

இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் படுக்கைக்குச் சென்றனர், அடுத்த நாள் காலை எழுந்த போது படுக்கையில் ஆனந்தைக் காணவில்லை, முருகன் ஓடிவந்தான், 'ஐயா டவல் இந்தாங்க சோப்பு குளியலறையில வச்சிருக்கேன்' என்றான், முருகனிடம் 'எங்கே ஆனந்த்' என்று கேட்டான் சுரேஷ், 'ஐயா காலைல நடக்கபோயிட்டு வருவாருங்க ஐயா வர கொஞ்சம் நேரமாகும் குளிச்சிட்டு வந்து நீங்க காலை உணவை சாப்பிடுங்க' என்றான் முருகன். குளித்து வந்த போது மணி எட்டு ஆகிவிட்டிருந்தது, காலையுணவை முடித்து விட்டு 'என்ன முருகா சொர்ணா சிஸ்டருக்கு எப்படி இந்த நிலைமையாச்சு' என்றான்.

ஐயா உங்களுக்கு எதுவுமே சொல்லலையாங்க, நம்ம சின்னம்மா சுபா வெளிநாட்டுக்கு மேல் படிப்புக்கு போனது தெரியுமாங்க என்றான், இல்லை தெரியாதே என்றான் சுரேஷ், சின்னம்மா வெளிநாட்டுக்கு படிக்க போனாங்க அங்கே அவங்க கூட படிச்சுகிட்டிருந்த பையனோட கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு தன்னோட அப்பா அம்மாவுக்கு போன் செய்து தெரிவிச்சாங்க, உடனே இவங்க ரெண்டு பேரும் கெளம்பி சின்னம்மா இருந்த நாட்டுக்கு அந்த பையன் யாரு என்னனு பார்க்கறதுக்கு போனாங்க, அங்கே போனப்போ சின்னம்மாவோட கூட படிச்சிக்கிட்டிருந்த சிலர் கிட்ட விசாரிச்சப்ப சின்னம்மாவும் அந்த பையனோடசேர்ந்து போதை பழக்கத்துக்கு அடிமையாகிடாங்கன்னு தெரிய வந்தது,

உடனே கிளம்பி இந்தியாவுக்கு போயிடலாம்முன்னு சின்னம்மாவை இவங்க ரெண்டு பேரும் வற்புறுத்தி இருக்காங்க, நான் வாழ்த்தாலும் செத்தாலும் அந்த பையனோடத்தான் இருப்பேன்னு சின்னம்மா பிடிவாதமா வெளி நாட்டுலேயே இருந்துட்டாங்க, இவங்க ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பிட்டாங்க, சில மாசங்களுக்கு அப்புறம் சின்னம்மா போதையில கார் ஓட்டிக்கிட்டு போயி விபத்துல இறந்துட்டாங்கன்னு செய்தி வந்தது, அப்போ அம்மாவுக்கு உடல் நிலை ரொம்ப மோசமா பாதிப்பு அடைஞ்சது, மருத்துவமனையில சேர்த்தாங்க, அங்கே இரண்டு மூணு மாசம் இருந்தாங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்தப்ப அம்மாவுக்கு நினைவே இல்ல, கோமாவுலேயே படுக்கையா கெடக்குறாங்க, உயிர் மட்டும் இருக்கு, ஐயா உடைஞ்சு போயிட்டாரு .......

தூரத்தில் கேட்டை திறந்து கொண்டு ஆனந்த் வீட்டினுள்ளே வருவது தெரிந்தது, என்ன முருகா ஐயாவுக்கு டிபன் சாப்பிட கொடுத்தியா என்றான் ஆனந்த், சுரேஷைப் பார்த்து நீயும் எங்க கல்லூரியில ஜாயின் பண்ண போறதா கேள்விபட்டேண்டா சுரேஷ், அதைச் சொல்லும் போது ஆனந்தின் கண்களில் லேசாக தெம்பு தெரிந்தது, நான் நெனைச்சது போல நம்ம சம்பதிங்களாக முடியாது உன்னோட பையனையும் மனைவியையும் கூட்டிட்டு அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துடுடா என்றான் ஆனந்த்.

ஆனந்தின் வீட்டைவிட்டு வெளியேறும் போது சுரேஷின் மனதில் சுமையும் சோகமும் நெஞ்சை நிறைத்திருந்தது
Title: Re: இளையத் தலைமுறை
Post by: RemO on November 27, 2011, 01:00:01 AM
இளைய சமுதாயம் பெற்றவர்களை மறந்து தன்னை மட்டும் சிந்திப்பது மிகத்தவறு என்பதை சுட்டி காட்டுகிறது இந்த கதை