காலிஃப்ளவர் பொக்கே டிஷ் !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-GaQ2rT_r_hw%2FUww7X0icGfI%2FAAAAAAAAOOc%2F4T0b2ytJJvw%2Fs1600%2F333.jpg&hash=2c05e17af81080cfaab7b940ecc441ff3225632e)
தேவையானவை:
அடர்த்தியான, அரை கிலோ எடையுள்ள, வெண்மையான காலிஃப்ளவர் - ஒன்று, தக்காளி - 2, வெள்ளை மிளகுத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், முந்திரிப்பருப்பு - 10, எலுமிச்சம்பழம் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், கெட்டித் தயிர் - 4 கப், நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, வாழை இலை - ஒன்று.
செய்முறை:
காலிஃப்ளவரின் அடியில் உள்ள தண்டு, இலையை அகற்றிவிட்டு முழு பூவாக, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கவிழ்த்து வைக்கவும் (பூ பாகம் தண்ணீரில் அமிழ்ந்து இருக்க வேண்டும்). 10 நிமிடம் கழித்து எடுத்து, அதன் மேல் சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பூவை அப்படியே எடுத்து ஆவியில் வேகவைக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நைஸாக அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை சிறிய துண்டுகளாக்கி வறுத்து எடுக்கவும்., அதே வாணலியில், அரைத்த விழுதைப் போட்டு... மிளகுத்தூள், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஈரம் வற்றும் வரை கிளறவும். இந்தக் கலவை ஆறியவுடன், ஒரு தட்டில் வாழை இலையை அளவாக 'கட்’ செய்து போட்டு அதன் மேல் காலிஃப்ளவரைக் கவிழ்த்து வைத்து, மசாலா கலவையை ஸ்பூனில் சிறிது சிறிதாக எடுத்து இடைவெளிகளில் அடைக்கவும்.
காலிஃப்ளவரை சுற்றி கொத்தமல்லி, தேங்காய் துருவலை போட்டு அலங்கரிக்கவும். சாப்பிடும் சமயம் சாஸரில் தயிருடன் முந்திரி கலந்து, அதில் காலிஃபிளவரை தேவையான அளவு துண்டுகளாக செய்து போட்டு பரிமாறவும்.