FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on November 25, 2011, 08:54:48 AM

Title: உடலுக்கு ஓய்வு தேவை!
Post by: Yousuf on November 25, 2011, 08:54:48 AM
உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஓய்வு எனும் நித்திரை மிகவும் தேவையானதாகும். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பாதுகாக்க முடியும் என்பதோடு, உடலில் சுறுசுறுப்பும் தெம்பும், மனோபலமும் ஏற்பட்டு, அலுப்போ அல்லது களைப்போ இன்றி, நமது அன்றாட அலுவல்களை கவனிக்க முடியும், மற்றும் உடல் ஆரோக்கியமும் பேண முடியும்.

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் நல்ல பொழுது போக்கு, குடும்பத்தில் குதூகலம், பொருளாதார திருப்தி இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை அமைந்திருந்தும், இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இத்தகைய வாழ்க்கை நிம்மதியற்ற நிலைமைக்கும் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பொதுவாக உடல் நோயுற்று, சிரமப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தூக்கம் இல்லாமல் இருப்பதைக்கூட, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சமாளிக்க முடியும். அதற்காக எப்போதெல்லாம் நித்திரை வரவில்லை என்றாலும் தூக்க மாத்திரைகளை பாவித்தால் மிகவும் ஆபத்தானதோடு மட்டுமின்றி, அதன் தாக்கத்தால் வேறு சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது.

சில சமயங்களில் நோயுற்ற காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளாம் தூக்கம் வராமல் போவதும் இயல்பானதாகும். இது ஒரு சாதாரண சூழ்நிலையாகும். மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டால் தூக்கம் வரும். ஆனால் இப்படி எந்த வித காரணங்கள் இன்றி தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகும். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உள்ளன என்று பொதுவாகச் சொல்வார்கள். அவற்றின் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.

தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் என்பது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு இது ஒப்பான கருத்தாகும். இதற்கு சரியாக பதில் கூறுவது என்பது கடினம். அதுபோலதான் தூக்கமும், தூக்கம் என்பது ஆளாளுக்கு மாறுபடும்.

ஒரு நாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் தூக்கம் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாகும். இந்த நேரம் குறைந்தால் இதய நோய் அல்லது கேன்சர் எனும் புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க ஆராயச்சி கூறுகிறது. அதுபோன்றே நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கும் இத்தகைய ஆபத்துகள் விளைய வாய்ப்பு இருக்கின்றது.

தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை குறிப்பெடுத்துக் கொண்டு அனுமானிப்பததோடு தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் கால அளவையும் அவதானிப்பதன் மூலமும், தூக்க மாத்திரையின்றி தூக்கம் வருகிறதா போன்றவற்றை கவனித்து வருவதும் ஒரு விதத்தில், அதன் பின்னனியை அறிந்து கொள்ள முடியும்.

ஒரு சிலரின் இமைகள் மூடியபடி இருக்கும். ஆனால் தூக்கம் வராது. அதே சமயம் ஒரு சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் அடிக்கடி குட்டித் தூக்கம் மேற்கொள்ளுவார்கள். இருப்பினும் நாள் பட்ட தூக்கமின்மையால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால் டயாபடிஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.

தூக்கமின்மை இருந்தால், இரவு 8.00 மணிக்குள் இரவு உணவை அதிக அளவு உட்கொள்ளாமல் உட்கொண்டம பிறகு கொஞ்ச தூரம் நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு, ஒரு டம்ளர் பால், ஏதாவது ஒரு பழத்தை உண்டு விட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து, சீக்கிரமே படுக்கப் போவது சிறந்ததாகும்.

பொதுவாகவே தூக்கம் வரவில்லையே என்பதற்காக ஒரு சிலர் தீய பழக்கங்களான, மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்றவற்றை மேற்கொள்வதும் உடல் நலத்திற்கு கெடுதல் என்பதோடு, நாளடைவில், இவற்றை பிரயோகித்தால் தான் தூக்கம் வரும் என்ற மன நிலைக்கு கொண்டு செல்லுதல், இவ்வாறாக மது, காபி, மன அழுத்தம், மனச்சோர்வு, டென்சன், உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்கும் காரணமாய் அமைகின்றது.

ஒரு சிலர் தூங்க முற்படும்போது, புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது தவறில்லை. ஆனால் அதிக நேரம், குறைவான வெளிச்சத்தில் படிப்பதுமே கண்களை பாதிப்பதோடு, நிம்மதியான தூக்கத்தை தராது. இரவு படுக்க போவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மிகவும் சிறந்ததாகும்.

எது எப்படி இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அது தான் களைப்பாகவோ, சோர்வாகவோ அல்லது எதிலும் ஒரு சுறுசுறுப்போ, ஆர்வமோ இல்லாதபடி செய்து, உடல் நலத்தையும் பாதிப்படைய வைக்கின்றது.

தூக்கம் வராததிற்கு பல வித காரணங்கள் இருப்பதால், மருத்துவரை கலந்து, அதற்கான சிகிச்சை பெறுவது தான் சிறந்தது. அவ்வாறின்றி கண்ட தூக்க மாத்திரைகளையோ, தீய பழக்க வழக்கங்களை மேற்கொள்வதோ ஆபத்தானதாகும்.
Title: Re: உடலுக்கு ஓய்வு தேவை!
Post by: RemO on November 25, 2011, 01:44:53 PM
நல்ல உடல் உழைப்பு இருந்தால் தூக்கம் தானா வரும்
வெறும் தொலைக்காட்சியும், கணிணியும் தான் வாழ்க்கை என ஆனதால் தூக்கம் கூட தூரம் சென்றது