ஆட்டுக்கால் பாயா!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-WcAz-r3m7ps%2FUvCHH4XH8EI%2FAAAAAAAAOLM%2FUL2A4Uy27VI%2Fs1600%2F111.jpg&hash=db4995f670fde693c0adf21ecca00a77f6f057c9)
தேவையான பொருட்கள்:
ஒரு ஆட்டின் கால் சுத்தம் செய்யப்பட்டவை.
இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 50 மில்லி லிட்டர்.
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக அரிந்தது).
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது).
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி.
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 3 தேக்கரண்டி.
பட்டை - சிறிய துண்டு.
ஏலக்காய் - ஒன்று.
கிராம்பு - ஒன்று.
பிரிஞ்சி இலை - ஒன்று
உப்பு - தேவையான அளவு.
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி.
கொத்தமல்லித் தழை - தேவைக்கு
செய்முறை:
ப்ரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றி, சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை இவைகளைப் போட்டு, வாசனை வந்தவுடன், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மொறு மொறுவென வதக்க வேண்டும்.
இப்போது, இஞ்சிப் பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, நறுமணம் வந்ததும், ஆட்டுக்காலை கலந்து, இளந்தீயில் 5 நிமிடம் மூடி வைக்கவும்.
மூடியைத் திறந்து, மிளகாய்த் தூளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் தனியாத் தூள், மிளகுத் தூள் இரண்டையும் கலந்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.
அதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து, நன்றாக கலந்து சுமார் 3 லிட்டர் தண்ணீருடன் 1/2 மணி நேரம் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், குக்கரைத் திறந்து, ஆட்டுக்கால் நன்கு வெந்து, பாயா நல்ல பதத்துடன், எண்ணெய் மேலே மிதந்து வரும் நிலையில் கொத்தமல்லி தழை, கரம் மசாலாத் தூள் இவற்றை சேர்க்க வேண்டும்.
மிக எளிய முறையிலும், விரைவாகவும் செய்யக்கூடிய இந்த உணவுப் பக்குவம், எல்லா வயதினரும் விரும்பி உண்ணும் வகையில் அமையும் என்பது என் அனுபவத்தில் கண்டது. பரோட்டா, இடியாப்பம், இட்லி, தோசை இவற்றுடன் சேரும் போது பொருத்தமாக இருக்கும். வதக்க வேண்டியவற்றை பக்குவமாக, தீய்ந்து விடாமல் வதக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், ஆட்டுக் கால் வேகவில்லை என்றால், மேலும் கொஞ்சம் நீர் சேர்த்து 15 நிமிடம் வேக விடலாம்.