FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 04, 2014, 02:18:35 PM

Title: ~ கொள்ளுக் காரக் குழம்பு ! ~
Post by: MysteRy on February 04, 2014, 02:18:35 PM
கொள்ளுக் காரக் குழம்பு !

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F02%2Fyzuzyz%2Fimages%2Fp50.jpg&hash=4b43d45ebe8b62a7b3b6cecef05c013a5e6d434d)

''சிறு தானியங்களை வைச்சு என் மாமியார் சமைச்சாங்கன்னா, அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களும் பாத்திரத்தோட ஓடிவந்திடுவாங்க. அந்த அளவுக்கு, சமையல் வாசமும் சுவையும் இருக்கும். அவர்கிட்டதான் கொள்ளுக் காரக் குழம்பு செய்யுறதைக் கத்துக்கிட்டேன். என் வீட்டுல வாரம் ஒரு நாள் இந்தக் குழம்பை செஞ்சிடுவேன். என் மகளுங்க, மகன், பேரப் பிள்ளைங்கன்னு எல்லாருமே விரும்பிச் சாப்பிடுவாங்க. உடம்பும் உரம் மாதிரி ஆரோக்கியமா இருக்கும்'' என்கிற கோவையைச் சேர்ந்த சாவித்திரி சந்திரன்,  கொள்ளுக் காரக் குழம்பு செய்யும் முறையை விளக்கினார்.

தேவையானவை:
கொள்ளு - 200 கிராம், தோல் உரித்த சின்ன வெங்காயம் - 100 கிராம், சுண்டைக்காய் வத்தல் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5, மிளகு, சீரகம் - தலா 50 கிராம், தனியா - 100 கிராம், தக்காளி - 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி - 100கிராம், கடுகு - உளுத்தம் பருப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, புளி - ஒரு எலுமிச்சை அளவு.

செய்முறை:
வெறும் கடாயில் கொள்ளு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம் இவற்றைச் சிறிது எண்ணெயில் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். கடாயில் மீண்டும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கி, சுண்டைக்காய் வத்தல் போட்டு, புளியைக் கரைத்துவிடவும். இதில் அரைத்த கொள்ளுப் பொடி, மசாலாப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு மேலாகக் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இதே முறையில், கொள்ளுப் பொடியைக் குறைவாகப் போட்டு, ரசப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால், கம-கம ரசம் தயார்.

டயட்டீஷியன் கிருஷ்ணன்:
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உறுதியாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் வலுப்பெறும். சிறுநீரகக் கற்களையும் கரைக்கும்! புரதம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் நார்ச் சத்து இதில் அதிகம். ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது.