தால் உருளை டிலைட் !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-9tB0a55aC-U%2FUtTyPzrClPI%2FAAAAAAAAOG0%2FhfHBZUcoC18%2Fs1600%2Fp44a.jpg&hash=38343b756fb34904221f48694ec8ecf25c24d935)
தேவையானவை:
கடலைப்பருப்பு - 500 கிராம், உருளைக்கிழங்கு - 4, சீரகத்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், சீரகம், எள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, லவங்கம், ஏலக்காய் - தலா 3, பட்டை - ஒரு துண்டு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், சர்க்கரை, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கடலைப்பருப்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்து அரைப்பதமாக அரைக்கவும். ஒரு கப் தண்ணீரை வாணலியில் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் அரை டீஸ்பூன் எள், அரை டீஸ்பூன் இஞ்சி விழுது, ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் சிட்டிகை பெருங்காயத்தூள், சிறிதளவு உப்பு, சர்க்கரை சேர்த்து... கடலைப்பருப்பு விழுதையும் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி எண்ணெய் தடவிய அகலமான தட்டில் பரவலாகக் கொட்டி ஆறவிடவும். நன்கு ஆறிய பிறகு செவ்வகங்களாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பருப்பு துண்டுகளையும் தோல் சீவி சிறு துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கையும் பொன்னிறமாக (தனித்தனியாக) வறுத்து எடுக்கவும். சிறிதளவு எண்ணெயில் சீரகம் தாளித்து... மீதமுள்ள இஞ்சி விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், அதில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்த பின், பருப்புக் கலவை செவ்வகங்களை போட்டு 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யை சூடாக்கி லவங்கம், ஏலக்காய், பட்டையை வதக்கி சேர்க்கவும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால்... அசத்தலான சுவையில் இருக்கும்.