மணத்தக்காளி வத்தல் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69j.jpg&hash=251e5692aaf2b2f1a454c89ff711ae19b3d05260)
தேவையானவை:
மணத்தக்காளி வத்தல், சின்ன வெங்காயம் - தலா கால் கப், உரித்த பூண்டு - அரை கப், சின்னத் தக்காளி - 3, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - ருசிக்கேற்ப, குழம்பு மிளகாய்த்தூள் - 5 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை. தாளிக்க: எண்ணெய் - 4 டீஸ்பூன், வெந்தயம், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
வெறும் சட்டியில் மணத்தக்காளி வத்தலைப் போட்டு வறுத்து, அதை பேப்பரின் மீது பரப்பி, சப்பாத்திக் கட்டையால் தேய்த்துவிடவும். தக்காளியைக் கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து, வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். பிறகு புளியை ஒரு பாத்திரத்தில் கெட்டியாகக் கரைத்து, அதில் தக்காளிக் கரைசலைச் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் குழம்புக்குக் கரைக்கவும். வதங்கிய வெங்காயத்தில், கரைத்துவைத்திருக்கும் குழம்பை ஊற்றி, மணத்தக்காளி வத்தலைச் சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். பச்சை வாசனை போய், குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
பலன்கள்:
குடல் புண்ணை ஆற்றும். சீரணத்தை சீர்செய்யும். அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். மாரடைப்பைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ள பொருட்கள் இதில் கலந்துள்ளதால், அனைவரும் அவசியம் சேர்த்துக்கொள்ளக்கூடிய சிறந்த உணவு.