FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RemO on November 22, 2011, 09:35:13 AM

Title: அலுவலகத்தில் பாலிடிக்ஸ்
Post by: RemO on November 22, 2011, 09:35:13 AM
அரசியல்வாதிகள் மட்டும்தான் அரசியல் செய்யவேண்டும் என்பதில்லை பாலிடிக்ஸ் என்பது எங்கும் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் மாமனார், மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு செய்யப்படும் பாலிடிக்ஸ் தொடங்கி, நாத்தனார், ஓர்படி என அனைவரின் பாலிடிக்ஸ்சையும் சமாளித்து நிமிர்வதற்குள் அலுவலகத்தில் பாலிடிக்ஸ் ஆரம்பமாகி விடுகிறது.

அலுவலகத்தில் அனைத்து தரப்பு பணியாளர்களும் ஏதாவது ஒருவிதத்தில் அரசியலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏனெனில் அலுவலக அரசியல் என்பது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது. இருப்பினும் அந்த அரசியலை நாசூக்காக கையாண்டால் எங்கும், எதிலும் வெற்றிதான். இதோ நிர்வாகவியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகள்:

இடம் பொருள் ஏவல்

நம்மிடம் இருந்தே வார்த்தைகளை பெற்று அதை நம்மை நோக்கி திருப்பிவிடும் அஸ்திரத்தை கற்றுக்கொண்ட எத்தர்கள் அதிகம் உண்டு. எனவே யாரைப் பற்றி எங்கு எப்போது பேசுகிறோம் என்பது முக்கியம். வீடோ, அலுவலகமோ, “யாகாவராயினும் நாகாக்க” இல்லையெனில் நாம் உபயோகித்த வார்த்தை நமக்கு எதிராக திரும்பும் ஜாக்கிரதை.

வேண்டாம் விவாதம்

உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்வதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறீகள் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

சிறப்பான செயல்பாடு அவசியம்

அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே. உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.

அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது. ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தோமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.

நிழல் விசயங்களில் கவனம்

அலுவலக அரசியலில் மிக சவாலான விசயம் என்னவெனில் நம்மைப் பற்றி புகழ்ந்து கொண்டே நமக்கு எதிராக செயல்படுபவர்கள் அதிகம் இருப்பார்கள். இதுதான் பெரும் சவாலான விசயம். எனவே உங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்பொழுதான் அலுவலகத்தில் நமக்கெதிராக செயல்படும் நிழல் உலக 'தாதா'க்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.

நேருக்கு நேராக சந்தியுங்கள்

எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும்.

என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம். உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்தபட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக் கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.

நெருக்கடியில் உதவுங்கள்

பிற துறையை சார்ந்தவர்கள் ஒரு வேலையை முடிக்க முடியாமல் திணறும் போது நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகாமல் உதவி செய்வது அவசியம். வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும்படி இது உதவும்.

சக அலுவலக நண்பர் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் உறுதியோடு இருக்க வேண்டும். உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சினையின் சிக்கலை தீர்க்க வேண்டும்.

புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள். உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள்.

எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம் எனவே குறைவாக பேசி அதிகம் கேட்கவேண்டும். எதையும், கேட்கவோ, சொல்லவோ மிகப் பொறுமையான தருணத்திற்காக காத்திருங்கள். அனைவரையும் சமமாக கருதுங்கள்

எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம். எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா? எனவே எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது.

ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும்.

உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள். அப்புறம் என்ன நீங்கள் தான் எதையும் சமாளிக்கும் சமாளிப்பு திலகம்.
Title: Re: அலுவலகத்தில் பாலிடிக்ஸ்
Post by: Yousuf on November 22, 2011, 12:32:05 PM
நல்ல பதிவு ரெமோ மச்சி. அனைவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!
Title: Re: அலுவலகத்தில் பாலிடிக்ஸ்
Post by: Global Angel on November 22, 2011, 02:15:20 PM
nalla pativu rempo... katrathu kaiyalavu... kallaathathu ulagalavu .. ;)
Title: Re: அலுவலகத்தில் பாலிடிக்ஸ்
Post by: RemO on November 22, 2011, 05:56:56 PM
ama apple
nan kathukituruken