FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 21, 2011, 05:28:12 AM

Title: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !!
Post by: Global Angel on November 21, 2011, 05:28:12 AM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !!  


கோவில்களும் தர்ம சாஸ்திரங்களும் வேதங்களும் திருவிழாக்களும் பஞ்சமில்லாமல் ஊரெங்கும் நிரம்பி கிடக்கின்ற நமது இந்திய தேசம், கோவில்கள் தோறும் வழிபாடுகளுக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் இருக்க கட்சிகள் வேறு போட்டி போட்டுக்கொண்டு வல்லூறுகளாய் சுற்றிக்கொண்டிருக்கும் தேசம் நமது இந்திய தேசம். அதே தேசத்தில் இன்றைக்கு ஊழலுக்காக வலிமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கின்ற போராட்டம், இதை ஆதரிக்கும் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. இதென்ன கூத்து?

'படிப்பது ராமாயணம் இடிப்பது சிவன் கோவிலா?' கோவில் உண்டியல்களில் நிரம்பி வழிகின்ற கருப்புப்பணம், கணக்கில் வராத பொன் ஆபரணங்கள், கடவுளுக்கே லஞ்சம், கடவுள் மன்னிப்பாரா? லஞ்சம் வாங்கிய பணத்தை கோவில் கும்பாபிஷேகத்திற்கு, கோவில் திருவிழாக்களுக்கு, நேர்த்தி கடன்களுக்கும் செலவிட்டால் கடவுள் ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்வார் என்போமானால் லஞ்சம் வாங்குவதும் கணக்கில் வராத கருப்புப்பணம் சேர்ப்பதும் பாவமில்லையா? பாவமில்லை என்போமானால் எதற்காக அன்னா ஹசாரேயை ஆதரிக்கும் ஊர்வலங்களும் கோஷங்களுக்கும் ஆதரவு? அல்லது எதற்க்காக ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம்?

சட்டமும் கடவுளைப்போன்றதுதானே? தவறுகளையும் மீறுதல்களையும் பொருத்துக் கொள்வதற்காக அல்லவே? சட்டத்தை மீறி இருப்பினும் கடவுளின் பார்வைக்கு தப்ப முடியாதல்லவா? இவ்வாறிருக்க ஊழலும் லஞ்சமும் கருப்புப்பணமும் எதனால் நமது தேசத்தில் அதிகமாயிற்று? மனிதனுக்கு கடவுளையும் சட்டத்தையும் விட பண ஆசை, இல்லை இல்லை பேராசை காரணம் என்று சொல்வோமா? அப்படியானால் கடவுளை வணங்குதல் என்பது கடமையா அல்லது நாடகமா?

'எதையும் கொண்டு வரவில்லை எதையும் கொண்டு போகபோவதில்லை' என்று வாய் கிழியப் பேசினாலும் தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிட சேமித்து வைத்துவிட்டு போகவேண்டும் என்கின்ற பேராசையை மேற்கொள்ள சம்மதமில்லை என்பதுதான் இதன் பொருளா? அல்லது ஊருக்கு உபதேசமா? அன்னா ஹசாரேயின் லோக்பால் மசோதாவை ஆதரிப்பவர்கள் எல்லோருமே தங்களது சொந்த வாழ்க்கையில் கருப்புப்பணம் வாங்கியதோ ஊழல் செய்வதில் ஈடுபட்டதோ இல்லையா? யார் தான் ஊழலை ஆதரிக்கபோகின்றார்கள்? ஊழலை ஆதரிப்பவர்களாக இருந்தாலும் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வார்களா? உள்ளொன்றும் புறமொன்றும் என்பதுதான் பழகிப்போனதாயிற்றே!!

உண்மையில் பார்க்கப்போனால் ஏழை எளிய மக்கள், மாதாந்திர சம்பளம் வாங்கி பற்றாக்குறையோடு வாழ்க்கையின் போராட்டத்தில் சிக்கித் தவிப்போரைத் தவிர ஊழலுக்கு எதிராக உண்மை குரல் கொடுப்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?