-
அரிசி வடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F1.jpg&hash=4ec46d5f7720446e4f2ca13aff3ad57b2c6e67c9)
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 6 கப், துவரம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3 கப், நறுக்கிய கொத்தமல்லித் தழை - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவை யான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அதனுடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும். ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு 2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும் (மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது.... ரொம்ப இளக்கமாகவும் இருக்கக் கூடாது). கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.
இதற்கு தக்காளி ரச அடி வண்டல், தயிர் போன்றவற்றை தொட்டுக் கொள்ளலாம்.
-
கார தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F2.jpg&hash=159b7ede0dca7297892ea4a2d5b77d596d362152)
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - தேவையான அளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தேவையான நீர் விட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மாவை 2 மணி நேரம் புளிக்க வைக்க வும். பிறகு, மாவை தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்.
இதற்கு தொட்டு கொள்ள... கத்திரிக்காய் சட்னி ஏற்றது. கத்திரிக் காயை சுட்டு, தோலுரிக்கவும். மிக்ஸி யில் பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புளி, சாம்பார் வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து... கத்திரிக்காயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
-
தொப்பை சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F3.jpg&hash=e2b4c6d4ab713be084d0a192507a0fa30eb1ea76)
தேவையானவை:
சிவப்பு பூசணி (தோல் மற்றும் விதையுடன் கூடிய சதைப் பகுதி), வாழைக்காய் தோல், பிஞ்சு புடலங்காய் உள்ளே உள்ள விதைப் பகுதி, பீர்க்கங்காய் தோலுடன் கூடிய சதைப் பகுதி, சேனைக்கிழங்கின் தோல் நீக்கி லேசாக நறுக்கிய சதைப் பகுதி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4 (அல்லது தேவைக்கேற்ப), புளி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். காய்களின் தோல், சதைப் பகுதிகளை நன்றாக கழுவி நீரை வடித்து வைக்கவும். கடாயில் ஒரு குழி கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் காய்களை சேர்த்து சிவக்க வதக்கவும். மிக்ஸியில் உப்பு, புளி, கறிவேப்பிலை மற்றும் வறுத்த பொருட்கள் சேர்த்து அரைக்கவும். பிறகு, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கிய காய்கள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதம், குழம்பு சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.
-
வெந்தயக் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F4.jpg&hash=2c0b8b89946ff6b353a23749be68d4064b938a82)
தேவையானவை:
வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு, பூண்டு - 15 அல்லது 20 பற்கள், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெல்லம் (விருப்பப்பட்டால்) - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்க்கவும். வெந்தயம் சிவந்து மணம் வந்தபின் புளியைக் கரைத்து விடவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், சிறிது வெல்லம் சேர்க்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்க்கவும். கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். (குழம்பு ரொம்ப நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்).
-
சோள வடாம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F5.jpg&hash=991e1e2ba1e2b8ce61d98313f2c5096962112546)
தேவையானவை:
தோல் நீக்கிய வெள்ளை சோளம் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சோளத்தைக் கழுவி, 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து... பின்னர் நீரை வடித்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நீர் விட்டு நைஸசாக அரைக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து, பொடித்த மிளகு சேர்க்கவும். இந்த மாவை 3 மணி நேரம் புளிக்கவிடவும். மாவை கரண்டியில் எடுத்து வடாம் ஸ்டாண்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்க... 2 நிமிடத்தில் வெந்துவிடும். இதனை உரித்து எடுத்து உடனே சாப்பிடலாம். நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். உடனே சாப்பிடும்போது இட்லி மிளகாய்ப்பொடியில் நல்லெண்ணெய் கலக்கி தொட்டு சாப்பிடலாம்.
வடாம் ஸ்டாண்ட் கிடைக்கவில்லை என்றால், வாழை இலை, புரச இலையைப் பயன்படுத்தி ஆவியில் வேக வைக்கலாம்.
-
கொள்ளு ரசம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F6.jpg&hash=9f4b0ce692abaea342a11e905aeb9a0dedf925cc)
தேவையானவை:
கொள்ளு - அரை கப்புக்கும் கொஞ்சம் குறைவாக, தனியா, சீரகம் - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - அரை டீஸ்பூன், நறுக்கிய சாம்பார் வெங்காயம் - கால் கப், புளிக்கரைசல் - கால் கப், நெய், கறிவேப்பிலை, கடுகு, சீரகம் - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளைக் கழுவி, 4 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் (குக்கரில் 6 (அ) 7 விசில் விடலாம்). கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, சாம்பார் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும் ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து... வேக வைத்த கொள்ளு கால் கப் சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் வேக வைத்த கொள்ளு ஒரு டேபிள்டீஸ்பூன் சேர்க்கவும். பிறகு புளிக்கரைசல் விட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கி... கொத்தமல்லி சேர்க்கவும். நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
-
தக்காளி தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F7.jpg&hash=329add85ead891eb6ac0228e144bf22905bc09ea)
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், தக்காளி - 4 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, தனியா - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி, ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை (எண்ணெய், வெங்காயம் நீங்கலாக) சேர்த்து கொரகொரவென்று அரைத்து, வெங்காயத்தை சேர்க்கவும். மாவை ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, சூடான தோசைக்கல்லில் மாவை மெலிதான தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, முறுகலானதும் திருப்பிப் போட்டு, நன்றாக மொறுமொறுவென்று வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்.
-
கலவைக் காய் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F8.jpg&hash=01f69657d434a5c84d812d5c4c7c0a0111e2252f)
தேவையானவை:
மஞ்சள் பூசணி - ஒரு கீற்று (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், அவரைக்காய், பச்சை மொச்சைக்கொட்டை, பீர்க்கங்காய், காராமணி, மாங்காய் (சேர்ந்து) - 2 கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் காய்கறிகளைப் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு (மிகவும் கெட்டியாகவோ, தண்ணீராகவோ இல்லாமல் மீடியமாக கரைக்கவும்) கொதிக்கவிடவும். இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், கீறிய பச்சை மிளகாய், வெல்லம், உப்பு சேர்க்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் கரண்டியால் 2 முறை மசித்துவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தயிர் சாத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
-
முருங்கைக்காய் கூட்டுச் சாறு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F9.jpg&hash=06f8be3bd2d09f6399be126a09bb8165ecb68447)
தேவையானவை:
முருங்கைக்காய் - 2, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3, உரித்த சின்ன வெங்காயம் - அரை கப்.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, தட்டிய சின்ன வெங்காயம் - 5.
செய்முறை:
காய்ந்த மிளகாய், தனியா, துவரம்பருப்பு ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் சற்று அதிக அளவு எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பிறகு, எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
முருங்கைக்காயைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தேவையான தண்ணீர் விட்டு... உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். முருங்கைக்காய் வெந்தபின் அரைத்த விழுதைப் போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, தட்டிய வெங்காயம் போட்டு வதக்கி சேர்க்கவும்.
-
புழுங்கலரிசி இலை வடாம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F10.jpg&hash=97552624446a4c62c9c3e091e4244f1f5b2d17fa)
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், மிளகு - (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைத் தண்ணீரில் கழுவி 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடித்து, தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க வைக்கவும் (அதிக புளிப்பு வேண்டாம் என்பவர்கள் 3 மணி நேரம் புளிக்க வைக்கலாம்). பிறகு, மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கலக்கவும். வடாம் ஸ்டாண்ட் அல்லது புரச இலை அல்லது வாழை இலையில் மாவை லேசாக ஊற்றி, ஆவியில் வேக வைத்து, வெந்ததும் எடுத்து உரித்து உடனே சாப்பிடலாம். இதை நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். உடனே சாப்பிடும்போது இட்லி மிளகாய்த்தூள், சூடான நெய் சேர்த் துக் கலந்து தொட்டு சாப் பிடலாம்.
-
சின்ன வெங்காய குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F11.jpg&hash=bf2422ccff570156e325dacea323558ca5186932)
தேவையானவை:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் (சிறியது) - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் புளியைக் கரைத்து விடவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.
பச்சை மிளகாய்க்குப் பதில் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்தும் தயாரிக்கலாம்.
-
கச்சாயம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F12.jpg&hash=130d84360ccf419aaac61596d92927a2a759f9c6)
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், பாகு வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு கப்.
செய்முறை:
பச்சரிசியைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து நிழலில் உலர்த்தி, நைஸாக பொடித்து, சிறிய கண்ணுள்ள ஜல்லடையில் 2, 3 முறை சலிக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும். பாகு உருண்டை பதம் வந்தபின் அதில் மாவை கொட்டிக் கிளறவும். (எப்போதும் மாவு அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்). கிளறிய மாவை எடுத்துப் பார்க்கும்போது மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது... லூஸாகவும் இருக்கக் கூடாது. மாவின் மீது நெய் தடவி வைக்கவும் (மாவை உபயோகிக்கும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்). அடுத்த நாள் வாழை இலையில் நெய் தடவி, மாவை உருட்டி வைத்து, லேசாக தட்டவும். கடாயில் நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த கச்சாயத்தை போட்டு, உடனே திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து சாப்பிடவும்.
-
பச்சை மிளகாய் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F13.jpg&hash=28ef7d8c13b1410c7e67458b535ddd299f5a592e)
தேவையானவை:
பச்சை மிளகாய் - 10, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: பச்சரிசி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி 'கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி... தனியே எடுத்து வைக்கவும்.
புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும். குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
-
கார அச்சு முறுக்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F14.jpg&hash=68843d31c706d1e4ffd20965531adb6dfc426dd3)
தேவையானவை:
பொன்னி பச்சரிசி - 2 கப், காய்ந்த மிளகாய் - 5, சலித்த பொட்டுக்கடலை மாவு - கால் கப், சுத்தம் செய்த எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள் சேர்த்துக் கரைக்கவும் (மாவு தண்ணியாக இருக்கக் கூடாது. பஜ்ஜி மாவு பதம் இருக்க வேண்டும்). கடாயில் முறுக்கு அச்சு முழுகுமளவுக்கு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அச்சை எண்ணெயில் போடவும். அச்சு சூடானதும், வெளியில் எடுத்து மாவில் தோய்த்து பிறகு கைப்பிடியை பிடித்துக்கொண்டு எண்ணெயில் விடவும். அச்சில் உள்ள மாவு கழன்று விழுந்துவிடும். மாவு விழவில்லை என்றால், நீண்ட கம்பியால் தள்ளிவிடலாம். முறுக்கு இருபுறமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.
குறிப்பு: மாவை அரைத்தவுடன் முறுக்கு செய்யவும். மாவு புளிக்கக் கூடாது.
-
ஆப்பம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F15.jpg&hash=6a532cc908aa96939ea2dd4aef1cbe01dd875bda)
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், வெந்தயம், உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதல் நாள் இரவு புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மறுநாள் ஆப்பக்கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, ஆப்ப மாவை விட்டு கடாயை சுழற்றவும். பிறகு மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஆப்பம் மொறுமொறுவென்று ஆனதும் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
-
மகிழம்பூ முறுக்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F16.jpg&hash=f5e17f1f697d2ee95eb5285d66bb0b801af94fe5)
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 4 கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 6 அல்லது 7, வெண்ணெய் - சிறிதளவு, எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் காய்ந்த மிளகாய், பெருங் காயம், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, தண்ணீரில் சுத்தம் செய்த எள் மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். மாவை மகிழம்பூ அச்சில் (கடைகளில் கேட்டால் கிடைக்கவும்) போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
-
தட்ட வடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F17.jpg&hash=34977cc174f0702a349d8606e19a19b728e73812)
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - கால் கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து, சலிக்கவும். புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து, மாவுடன் சேர்த்து, பொடித்த உளுத்தம் பருப்பு, எள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிது சூடான எண் ணெய் சேர்த்துப் பிசைந்து, கையில் எண்ணெய் தொட்டு, கொஞ்சம் மாவை எடுத்து வாழை இலையில் வைத்து லேசாக தட்ட வும். தட்டியவற்றை வெள்ளை காட் டன் துணியில் போட்டு, 5 நிமிடம் கழித்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
-
இட்லி சாம்பார்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F18.jpg&hash=33e38e2ab05c08221142247f9995e8b345093b32)
தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப், உரித்த சாம்பார் வெங்காயம், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு (சேர்த்து) - ஒரு கப், புளிக்கரைசல் - கால் கப் (கெட்டியாக இருக்கக் கூடாது), நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
வறுக்க:
தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத் தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங் காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண் ணெய் - சிறிதளவு.
செய்முறை:
துவரம்பருப்பைக் கழுவி, அதனுடன் காய்களை சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான தண் ணீர் விட்டு குழைய வேக வைக்கவும். பிறகு வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும். வேக வைத்த துவரம் பருப்பு, காய்களுடன் புளிக்கரைசல், அரைத்த விழுது சேர்த்து... தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப் பிலை தாளித்து சாம்பாரில் சேர்த்து, நல்ல மணம் வந்தபின் இறக்கி, நறுக் கிய கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
குறிப்பு: இந்த சாம்பார் ரொம்ப கெட்டியாக இருக்கக் கூடாது. விருப்பப் பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.
-
தேங்காய் போளி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F19.jpg&hash=e5cf9b0f7031bd9b750c6fe3d30535d073f07b0e)
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், மைதா - 3 டீஸ்பூன், நல் லெண்ணெய் - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு, வாழைப் பழம் - ஒன்று.
பூரணத்துக்கு:
தேங்காய் துருவல் - 2 கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
கோதுமை மாவு, மைதாவுடன் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து, சப்பாத்தி மாவைவிட தளர்வாக பிசையவும். பிறகு அதன் மேல் கால் கப் நல்லெண்ணெய் விட்டு 3 மணி நேரம் மூடி வைக்கவும். தேங் காய் துருவல், ஏலக்காய்த்தூளை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கவும். இதனை அப்படியே கடாயில் போட்டு, இதில் உள்ள நீர் சுண்டும் வரை வறுக்கவும். ஆறியவுடன் உருண்டை களாக உருட்டவும்.
மேல் மாவு சிறிது எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து கைகளால் பரவலாக தட்டி, அதில் பூரண உருண்டை வைத்து மூடி, அப்படியே தோசை வடிவத்தில் போளியாக தட்ட வும். சூடான தோசைக்கல்லில் போளி யைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசைத்திருப்பியால் எடுத்து... அதன் மேல் நறுக்கிய வாழைப்பழம், நெய் விட்டு சூடாகப் பரிமாறவும்.
-
ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F20.jpg&hash=71a11762bf47d6e900a62b53904877c8b9e353a7)
தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், சலித்த கடலை மாவு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
இட்லி புழுங்கல் அரிசி, துவரம்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த உடனேயே அதனுடன் கடலை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, வாழைக்காயை மெலிதாக சீவி மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
தேங்காய் சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ். சோடா உப் புக்கு பதில் ஒரு சிறிய கரண்டி அளவு தோசை மாவு சேர்க்கலாம்.
-
வறுத்து அரைத்த தேங்காய் சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F21.jpg&hash=2f5628366c38d44b6155dae900ca9e04dec088a5)
தேவையானவை:
தேங்காய் துருவல் (இளம் தேங்காய் துருவல் வேண்டாம்) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், புளி, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுக்கவும். இவை சற்று சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, ஆற வைத்து இதனுடன் உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைஸாக அரைக்கவும்.
குறிப்பு:
இது ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. தண்ணீர் விடாமல் அரைத்தால், வெளியூர் பயணத்துக்கு புளி சாதம், இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக உபயோகிக்கலாம். தேங்காய் துரு வலை, பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்க வேண்டியது அவசியம்.
-
திடீர் மாங்காய் சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F22.jpg&hash=e14c3faa6de378716ee467687fe4ecc7785f15de)
தேவையானவை:
கிளிமூக்கு மாங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
மாங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.
-
கத்திரிக்காய் கடைசல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F23.jpg&hash=574bba017d31e79409a3e906e352c4097de9e0bd)
தேவையானவை:
பெரிய கத்திரிக்காய், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, புளிக்கரைசல் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கத்திரிக்காயை சுட்டு தோலுரித்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் உப்பு,
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் கொதிக்க விட வும். பிறகு கீழே இறக்கி, மசித்த கத்திரிக்காய் சேர்த்து மத்தினால் கடைந்து, மேலே நறுக்கிய கொத்தமல்லிதழை தூவி பரி மாறவும்.
இது இட்லி, தோசைக்கு ஏற்ற சை டிஷ். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
-
தக்காளி புளி பஜ்ஜி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F24.jpg&hash=10648f7680d9575b39621e2ee624b10752641767)
தேவையானவை:
நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், கத்திரிக்காய், பீர்க்கங் காய் (சேர்த்து) - ஒரு கப், புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத் தம்பருப்பு - 2 டீஸ்பூன், வெங் காயம், ஒன்று, பச்சை மிளகாய் - 2 அல்லது 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப் பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து... நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிள காயை வதக்கி, பிறகு தக் காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய உருளைக் கிழங்கு, கத்திரிக்காய், கேரட், பீர்க்கங்காய் சேர்த்து மேலும் வதக்கி... புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் மத்தால் நன்கு கடையவும்.
இது இட்லி, தோசை, ஆப்பம் ஆகியவற்றுக்கு ஏற்றது.
-
முருங்கைக்காய் பலாக்கொட்டை குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F25.jpg&hash=f183c36575e93f7736fb9349e6989ee576fcf4a7)
தேவையானவை:
மாங்காய், முருங்கைக்காய் - தலா ஒன்று, பலாக்கொட்டை - 10 அல்லது 15, வேக வைத்த துவரம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
பலாக்கொட்டையைச் சிறிய கல்லினால் தட்டி தோல் எடுத்துவிட்டு வேக வைக்கவும். முருங்கைக்காய், மாங்காயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். முருங்கைக்காய், மாங்காய் துண்டுகளுடன் தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைக்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
வேக வைத்த பலாக்கொட்டை, முருங்கைக்காய், மாங்காயுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்தும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் சேர்க்கவும்.
-
கொள்ளு குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F26.jpg&hash=830cd5ccd5252ef97ffddcd29d17b885d9a89db6)
தேவையானவை:
கொள்ளு - கால் கப், சிறிய புளி - எலுமிச்சை அளவு, தோல் உரித்த சின்ன வெங்கயம் - கால் கப், தட்டிய சின்ன வெங்காயம் - 6, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளை தண்ணீரில் போட்டு, கல் நீக்கி அரித்து எடுத்து, பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 6 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். முழுதான சின்ன வெங்காயத்தை 2 டீஸ்பூன் எண்ணெ யில் வதக்கவும். வறுத்த பொருட்களுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து, தண் ணீர் தெளித்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் வேக வைத்த கொள்ளு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இந்த விழுதில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும், சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். தட்டிய சின்ன வெங்காயத்தை எண் ணெயில் வதக்கி குழம்பில் சேர்த்துப் பரிமாறவும்.
-
இனிப்பு அவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F27.jpg&hash=fedfe312c02c295ab65983ee414c520ba49a3907)
தேவையானவை:
மெலிதான அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 2, தேங்காய் துருவல் - கால் கப்.
செய்முறை:
அவலில் தண்ணீர் விட்டு கழுவி, உடனே நீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். பொடித்த வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப் பில் வைத்து கொதிக்கவிட்டு, வடிகட்டி... மீண்டும் அடுப்பிலேற்றி, வெல்லக் கரைசல் ஒரு கொதி வந்தவுடன் எடுத்து அவலில் ஊற்றி... பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு பரிமாறவும்.
வெளியூர் பயணங்களில் கழுவிய அவலில், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கியும் சாப்பிடலாம்.
-
மஞ்சள் பூசணி மாங்காய் பச்சடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F28.jpg&hash=adb188930fd399b720df0ee54f7a6ff9849f1392)
தேவையானவை:
தோல் சீவி, நறுக்கிய மஞ்சள் பூசணி - ஒரு கப், தோல் சீவி, நறுக்கிய மாங்காய் - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, வெல்லம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண்ணெய், - சிறிதளவு.
செய்முறை:
தேங்காய் துருவல், சிறிதளவு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். தோல் சீவி நறுக்கிய பூசணி, மாங் காயை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இதில் உப்பு சேர்க்க வும். பிறகு அரைத்த தேங்காய் விழுது, வெல்லம் சேர்த்து, நன்றாக கொதி வந்ததும் இறக் கவும். தாளிக்க கொடுத்துள்ள வற்றை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.
-
வேர்க்கடலை பக்கோடா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F29.jpg&hash=5bfba9d538773c11f92858ce52be06c097a9aa8c)
தேவையானவை:
பச்சை வேர்க்கடலை - ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது (விருப்பப் பட்டால்) - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் தண்ணீர் தெளித்து பிசிறவும். பிறகு, காய்ந்த எண் ணெயில் உதிர்த்துப் போட்டு பொரிக் கவும். பின்னர், சிறிதளவு கறிவேப் பிலையை பொரித்து எடுத்து கலக்கவும்.
-
ஹோட்டல் சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2F30.jpg&hash=a0120c3767f6fbea43c4d7dcd0d9b575abe5ddca)
தேவையானவை:
பொட்டுகடலை - ஒரு கப், பூண்டு - 3 பல், இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - விருப்பத்துக்கேற்ப, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக, நைஸாக அரைக்வும்.
வெளியூர் பயணத்துக்கு எடுத்து சென்று உபயோகிப்பதென்றால், கொப்பரை துருவல், பொட்டுக்கடலை, உப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து பொடிக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் விட்டு உபயோகிக்கவும்