FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Yousuf on November 19, 2011, 08:54:06 AM
-
சில வாரங்களுக்கு முன் தெகல்கா வார இதழில் வெளிவந்ததுள்ள கட்டுரை
காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை. கட்டுரையாளர் ஷாகித் இரஃபிக் ஒரு காஷ்மீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.
நான் எப்பொழுதும் சண்டையை விரும்பியது கிடையாது. கல்லூரி காலங்களில் என் நண்பர்கள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விமர்சனம் செய்வார்கள். என்னால் ஒரு உடல் வலு இல்லாதவனை கூட அடிக்க இயலாது என்றும் கூட சொல்வார்கள். ஆனால் நான் கோழை அல்ல. என்னை பொருத்தவரை பெரும்பான்மையான சண்டைகள் பயனில்லாதவை. அகிம்சாவாதி என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, கருத்து விவாதங்கள் போன்ற பல நல்ல வழிகள் உள்ளன என்பதே என் கருத்து.
ஆனால் இன்று நான் ஒரு ஊடகவியலாளனாக எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான் கொண்டிருக்காவிட்டால், எனது நண்பர்களை போலே நானும் காஷ்மீரத்து நகரவீதிகளில் கல்லெறிந்து கொண்டிருப்பேன்.
ஆரம்ப காலங்களில் காஷ்மீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், படுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை மட்டுமே ஏற்படுத்தி வந்தன. ஆனால் கடந்த இரு மாதங்களாக காஷ்மீரில் நடப்பவை எல்லாம் தெளிவான நீரோடையை போல உள்ளது.
உலகம் காஷ்மீரில் நடப்பதை கண்டும் காணாமல் வாய் மூடி மௌனித்துள்ளது. இந்த மௌனம் அகிம்சாவாதத்தை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுகொண்டே வருகின்றது. இந்த கள்ள மௌனமே எல்லா வன்முறைகளும் ஆரம்பிக்க காரணமாகும்.
வீட்டிலிருந்து வருகின்ற எல்லா அலைபேசி அழைப்புகளுமே இதயத்தை பிளக்கக் கூடிய செய்திகளாக உள்ளன. என்னுள் வன்முறை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வதை உணர்கின்றேன் நான். எங்கள் வீட்டின் அருகிலுள்ள காய்கறி கடைக்காரர் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று என் அம்மா எனக்கு கூறிய போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வரும் முன்பு என் பக்கத்து வீட்டிலிருந்து கடைசி நபர் அவர் ஒருவர் மட்டும் தான். விடைபெறும் முன் இருவரும் புன்னகையை பரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை கடுங்கோபம் சூழ்ந்துகொண்டுள்ளது.
மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் மிகக்கடுமையான கோபத்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள அனைவரையும் கடுமையாக தாக்குகின்றனர் என என்னிடம் கூறினான் என் தம்பி.
தில்லியில் காஷ்மீரை மேற்பார்வையிடும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் நண்பன் கடந்த வாரம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவனது பணிகளுக்கு இடையிலும் அவன் காஷ்மீரில் அரச படையினால் அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுவன் சமீர் அகமதின் உடலை அவனும் பார்த்திருப்பான் என நினைக்கின்றேன். அவனது உடலெங்கும் லத்தி குச்சியின் வரிகள் சாரை, சாரையாக உள்ளன. அவன் தின்று கொண்டிருந்த மிட்டாயின் மீதம் இன்னும் அவனது வாயில் அப்படியே உள்ளது.
நான் அவனை சமாதனப்படுத்த முயல இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் சமாதனப்படுத்திக் கொண்டோம். அடுத்த நாள் காலை அவன் தில்லியிலிருந்து காஷ்மீருக்கு செல்லப் போவதாக கூறினான். "இங்கு எல்லோரும் பொய்யை மட்டுமே கூறுகின்றனர். மேலும் அவர்களின் பொய்யை அவர்கள் உண்மையென்று நம்புகின்றார்கள்" என்றான் அவன்.இந்தியாவில் ஒரு "பொய்" எல்லோராலும் பரவலாக நம்பப்படுகின்றது, அதாவது அரச படைகள் காஷ்மீரத்து மக்களை பாதுகாக்கின்றனர் என்பதே அந்த "பொய்".
ஆனால் காஷ்மீரிகள் தாங்கள் அரசபடைகளால் பாதுகாக்கப்படுவதாக நம்புவதே இல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் அரசபடையை "பாதுகாவலர்கள்" என்றும், அவர்கள் தான் தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீரிகளை பாதுகாக்கின்றனர் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தான் காஷ்மீரிகளை பாதுகாக்க வேண்டியுள்ளது என்பதே உண்மை. காஷ்மீரிகள் தங்களை ஆக்கிமிரத்துள்ள இந்த படைகள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோருகின்றனர். அரசபடைகள் மீது அவர்கள் கொண்டுள்ள உணர்வு பயம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்றவை மட்டுமே.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை சுட்டதில் 55 ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். ஒன்று இவர்கள் கல்லெறிந்து கொண்டிருந்திருக்கலாம் அல்லது அண்டை வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காஷ்மீரில் பதட்டநிலை ஆரம்பிக்கும் காலகட்டங்களில் நான் அங்கு இருந்தேன்.
ஒவ்வொரு இறுதி ஊர்வலத்திற்கும் சென்ற நான் மக்கள் மிகக்கடுமையான கோபத்துடன் இருப்பதை கண்டேன். கங்பக் என்ற பகுதியில் 17 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவனது இரு நண்பர்கள் அவனை காவல்துறை அழைத்துச் சென்றதாகவும், பின்னால் அவன் நீரில் மூழ்கி இறந்துவிட்டான் என காவல் துறையை கூறியதாகவும் ஊடகங்களுக்கு சொன்னார்கள். ஆனால் இறந்த சிறுவன் நன்கு நீச்சல் தெரிந்தவன், ரண அறுவை சிகிச்சையில் தலையில் இரண்டு பலத்த காயங்கள் இருப்பது தெரிந்தது.
இதற்கு மறு நாள் "NDTV" என்ற செய்தி ஊடகத்தில் பேசிய மாநில முதல்வர் பரூக் அப்துல்லா "அவனது நண்பனது உயிர் முக்கியம் எனத் தெரிந்திருந்தால், இந்த இருவரும் அவனை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க வேண்டியது தானே" என கேட்டார். இவ்வாறு கேட்பதற்கு பரூக் அப்துல்லாவால் மட்டும் தான் முடியும், அதிகாரவர்க்கத்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும்.
இவர்களை பொருத்த வரையில் காஷ்மீரிகள் "PDP" யின் பணத்திற்காகவும், பாகிஸ்தானின் உளவு நிறுவனங்களுக்காகவும் உயிரை விடும் தரகர்கள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு காலம் வாழ்ந்ததால் பரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வந்துள்ளது. முஃப்திகளோ இவர்களை விட மோசம், அவர்கள் எப்பொழுது பிரிவினை கோருவார்கள், எப்பொழுது இந்திய தேசியவாதிகளாக மாறுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. அவர்களின் தேவை எல்லாம் ஆட்சி அதிகாரம் மட்டும் தான். மத்திய அரசு பரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெகபூபாவை முதல் மந்திரி ஆக்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.
காஷ்மீரிகளுக்கும், அப்துல்லாக்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. காஷ்மிரீகளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிகள் தயாராக இருக்கும், அப்துல்லாக்களை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்களும், முப்திக்களும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
இருபது வருட காலங்களில் இங்கு கொல்லப்பட்டுள்ள 70,000 மக்களின் புதைகுழிகளில் தங்கள் பொய்யையும் சேர்த்தே அவர்கள் புதைத்து வந்துள்ளனர்.
ஒரு காலத்தில் தேசிய காங்கிரசின் தீவிரமான ஊழியராக இருந்த எங்கள் உறவினர் ஒருவர் பிற்காலத்தில் அதே கட்சி காஷ்மீரிகளுக்கு துரோகம் செய்து விட்டது எனக் கூறினார் என்பதன் பொருள் எனக்கு இப்பொழுது தான் புரிகின்றது. சேக் அப்துல்லா டோர்கா மன்னர்களின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட மோசமான அடக்குமுறை அரசிடம் ஒப்படைத்து விட்டார் என அவர் தினமும் கூறுவார்.
சிறீநகரின் கசூரி பாக் பகுதியில் வயதான தந்தை ஒருவர் கொல்லப்பட்ட தனது மகனின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவரை அவரது மகனின் உடலை விட்டு பிரித்துச் செல்ல முயன்று கொண்டிருந்தனர். ஆனால் அவர் மகனின் உடலை விட்டு பிரியாமல் அருகிலேயே இருந்தார். அவரது சட்டை மகனின் இரத்ததில் நனைந்து போனது, அவரது வெள்ளை தாடி இரத்தத்தால் சிகப்பு நிறமானது. அந்த படத்தை நான் பார்க்க பார்க்க என்னுள் ஏற்படும் வலியின் ரணம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இறந்த தனது மகனின் உடலை கட்டியணைத்து தனது சோகத்தை ஒரு தந்தை வெளிபடுத்துவதை தவிர அவரால் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. பரூக் அப்துல்லாவால் அந்த தந்தையை அடக்குமுறையை மீறி அரச படைக்கு எதிராக கல்லெறிவதை தடுக்க குடியுமா? அந்த வயதான மனிதரின் இடத்தில் பரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பார், ஒரு தந்தையைப் போலவா? ஒரு முதல்வரை போலவா?. இந்நேரம் இந்நகரமே துண்டாடப்பட்டிருக்காதா? சிறீநகரம் பற்றி எரிந்திருக்காதா?
தங்களின் நேசத்திற்குரிய இறந்த உறவுகளை கல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்கள் அவர்களின் தந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள். இது மட்டும் எப்படி தவறாகும்?
காஷ்மீரை சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று சுருக்கி பார்த்திட முடியாது, அது ஒரு மீக நீண்ட குருதி தோய்ந்த வரலாற்றை கொண்டது. மத்திய ஆயுத படையால் அனாதையாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மட்டும் கல்லெறிய ஆரம்பித்தால் உங்களால் 60,000 கல்லெறிபவர்களை காண முடியும், இவர்களுடன் அரச படையால் விதவையாக்கப்பட்டவர்களும் சேர்ந்தாலே 30,000 பெண்கள் ஒவ்வொரு பதுங்கு குழி மற்றும் ஒவ்வொரு படை வீரரை நோக்கியும் கல்லெறிவதை நீங்கள் காணலாம்.
கையில் கல்லுடன் ஒரு சிறுவன் படை வீரருக்கு எதிராக வந்து நிற்கும் போது அவனுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள படை வலுவின் வித்தியாசம் நன்கு தெரியும். அவன் என்ன தான் சரியாக குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய காயமோ அல்லது ஒன்றிரண்டு தையல்களுடனான காயத்தை மட்டும் தான் படை வீரனுக்கு கொடுக்க முடியும் இதற்கே அவன் படைவீரனின் காலில் உள்ள பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத மேல் சட்டை, தலைக் கவசம் இதை எல்லாம் மீறி அவன் எறியும் கல் செல்ல வேண்டும். ஆனால் படை வீரனின் துப்பாக்கியில் இருந்து வரும் துவக்கு(Bullet) மற்றும் படை வீரன் எறியும் கண்ணீர் புகைக்குண்டுகளினால் அந்த சிறுவன் மிகக் கடுமையாக பாதிக்கப்படலாம் அல்லது உயிரையும் கூட இழக்கக்கூடும் என்பது அந்த சிறுவன் மற்றும் படைவீரன் என இருவருக்குமே தெரியும்.
தனது ஆயுதமாக எப்பொழுது அந்த சிறுவன் கல்லை கையிலெடுக்கத் தொடங்கினானோ அப்பொழுதே அவனது போராட்டம் சமூக நெறிகளின் படி(Social Moral) உயர் நிலையை அடைந்துவிடுகின்றது. அந்த சிறுவனது நோக்கம் படைவீரனை கொல்வது தான் என்பது மிகவும் முட்டாள்தனமான ஒரு கருத்து. இந்த ஒரு காரணத்தினால் தான் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்றுவரும் கல்லெறியும் போராட்டங்களில் ஒரு படை வீரனோ, காவல் துறையைச் சேர்ந்தோரோ கூட இதுவரை இறக்கவில்லை.
ஐந்து கல்லெறியும் போராளிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட காவல்துறை அல்லது படை வீரர்கள் பலரது புகைப்படங்களை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இது வரை இறந்ததில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காஷ்மீரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் மொழியை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இதனால் எல்லா மனிதர்களும் புரிந்த ஒரு மொழியில் பேச வேண்டும் என காசுமீரிகள் எண்ணினார்கள். கடந்த இரண்டு மாதங்களாக கல்லெறியும் மொழியின் மூலமாக தங்கள் துயரத்தை காசுமீரிகள் உலகத்தாரிடம் எடுத்துக் கூறுகின்றார்கள்.
எந்த தாயிடம் உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என பரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த தாயே வீதிகளுக்கு வந்து கல்லெறிய துவங்கியுள்ளார். கடந்த மாதம் தொலைக்காட்சியில் "இலசுகர் இ தொய்பாவின்" பணத்திற்காக இந்த கல்லெறிதல் நிகழ்வதாக காட்டிய போது அந்த "பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்" நான் எனக்கு அடையாளம் தெரிந்த சிலரை பார்த்தேன்.
அவர்கள் இருவரும் எனது வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் இரு பெண்கள். 2005ஆம் ஆண்டு அந்த பெண்களின் தம்பியை மத்திய ஆயுதப் படை கைது செய்து அழைத்துச் சென்ற பொழுது இவர்களில் ஒருவர் வெறும் கால்களில் மத்திய ஆயுதப் படை வண்டியை துரத்திக் கொண்டு நெடுதூரம் சென்றார். பத்து நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணின் தம்பியின் உடல் பக்கத்து தெருவில் கிடந்தது. அவனது தோல்கள் எரிந்த நிலையில் இருந்தன. அவனது உடலில் கனரக சக்கரங்கள் ஏறியது போலிருந்தது. அவனது பிறப்புறுப்பில் மின்சார கம்பிகள் இருந்தன. இந்த நிகழ்வுக்கு பின்னால் அந்த பெண்கள் முன்பு போல் இல்லை.
1995ல் தனது கணவனை தொலைத்து விட்ட (காணாமல் போன) ஒரு பெண்ணையும் நான் அந்த "பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்" பார்த்தேன். அரச படையால் கொல்லப்பட்ட மகனை பறிகொடுத்த தாயை நான் அந்த "பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்" பார்த்தேன். அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின் பின்னும் கடந்த 20 வருடங்களாக சொல்லாத துயரமான கதை உணடு அதை அவர்கள் தங்கள் கைகளில் உள்ள கல்லின் மூலமாக சொல்லுகின்றனர். அவர்கள் எறியும் கல் படைவீரரை நோக்கி செல்கின்றதா என்பது அவர்கள் நோக்கமல்ல. அவர்கள் நோக்கம் கல்லை எறிவது மட்டும் தான். குறிபார்த்து அடிப்பது அல்ல. இதற்காக தான் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்துள்ளனர்.
பெண்கள் தான் இந்த பிரச்சனையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் அரச படைகள் நடத்தும் உளவியல் தாக்குதல்களாகும். ஆனால் இவை எல்லாம் மிகவும் குறைத்தே இது வரை மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த வலி பெண்களுக்கும், மனவியல் மருத்துவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றாகும். கல்லெறிவதை அவர்கள் இராணுவத்திற்கு தரும் பேதி மருந்தாக பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை கல்லை எறியும் போதும் தங்கள் இதயக்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாடத்தையும் அவர்கள் இராணுவத்திற்கு கற்பிக்கின்றனர்.
-
சில வாரங்களுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த எனது அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்கள் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர் மத்திய ஆயுத படையைச் சார்ந்தவர்கள். அவன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். எனது அத்தையின் பத்து நிமிட கெஞ்சலுக்கு பின்னரே அவன் படைவீரர்கள் அவனை பார்த்து மிரட்டிய வார்த்தைகளை சொன்னான்.
எனது அத்தை வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். கோபத்தில் தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தனது வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த விடுதலை போராட்ட ஊர்வலத்தில் தன்னையும் தன் மகனையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுதலை முழக்கங்களை எழுப்பினார்.
இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவர்கள் இருவருமே வீட்டை விட்டு வந்து இது போன்ற ஊர்வலத்தில் கலந்து கொள்வது இது தான் முதல் முறை. எனது அத்தை தனது கைகளில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எல்லாம் "இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)" என்ற வாசகங்களையும், அந்த ஐந்து வயது சிறுவனோ அதே வாசகங்களை தனது வீட்டு சுவர்களில் எழுதிவைத்தான்.
இந்த ஒரு வாக்கியம் மட்டும் தான் அவனுக்கு ஆங்கிலத்தில் அவனுக்குத் தெரியும். இது போன்ற சிறுவர்கள் தான் சிறீநகரின் அடைக்கப்பட்ட கடைக் கதவுகளிலும், யாருமில்லாத சாலைகளிலும், சுவர்களிலும் இது போன்ற விடுதலை முழக்கங்களை எழுதுகின்றனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்சனைகளை எல்லாம் தாண்டி காஷ்மீர் விடுதலை நிகழ்வு சென்று விட்டது. காஷ்மீர் துப்பாக்கிகளிலிருந்து விடுதலை முழக்கங்களுக்கு மாறிவிட்டது.
இதில் கல்லெறிவது கூட தங்கள் அமைதி வழி போராட்டம் அரசால் மிகக்கடுமையாக அடக்கப்படும் போது மட்டுமே நிகழ்கின்றது. 2008ல் 3 இலட்சம் மக்கள் வீதிகளுக்கு வந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மனித சங்கலி போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஒருவர் கூட எந்த ஒரு பதுங்கு குழியையும், படை வீரரையும் தொடக்கூட இல்லை. ஆனால் இந்த வருடம் காஷ்மீர் மக்களின் அமைதி ஊர்வலங்கள் அரசால் கட்டாயமாக தடை செய்யப்பட்டன. கூட்டத்தை கலைப்பதற்காக மக்களை சுடுவதற்கு இராணுவத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
இந்த வருடத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் கூடுவதற்கு இராணுவம் அனுமதியே கொடுக்கவில்லை. இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை நோக்கி அவர்கள் பலமுறை சுட்டனர். இதனால் பலர் கல்லெறிபவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
காஷ்மீரில் இன்று இராணுவத்தினால் ஒரு மருத்துவமனையையோ, தங்களுக்கு உதவக் கூடிய வீட்டையோ காண்பது அரிதான ஒன்று. காஷ்மீரிகள் இந்தியாவுடனான தங்கள் பிரச்சனையை துப்பாக்கிகள் இல்லாமல் தீர்வு காணுகின்றனர். ஊடகங்கள் காஷ்மீரிகளை பாகிசுதானின் உளவு நிறுவனத்தின் காசுக்காகவும், PDP யின் காசுக்காகவும் போராடுபவர்களை போல காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீநகரின் எல்லா தொகுதிகளையும் வென்றது தேசிய காங்கிரசு, PDP அல்ல. இந்த இடம் தான் கல்லெறிதலில் மிக முக்கியமான நகரமாகும்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு நேர்காணலில் பரூக் அப்துல்லாவிடம் இந்த கேள்வியை கேட்டேன், நீங்கள் உங்களை காஷ்மீரிகளின் தலைவராக பார்க்கின்றீர்களா?, அல்லது காஷ்மீரில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பார்க்கின்றீர்களா?. அவர் மிகவும் கோபமாக சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த வாக்குகள் எல்லாம் எங்கு சென்று விட்டன என எண்ணுகிறார் அவர்? கல்லெறிபவர்களும், அமைதி வழியில் போராடுபவர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்ந்தால் காஷ்மீரிகள் தாங்கள் முன்பு வைத்திருந்த துப்பாகிகளை கண்டிப்பாக மீண்டும் கையிலெடுப்பார்கள்.
உலகிலேயே அதிக ஆயுத கொள்வனவு செய்யும் நாடான இந்தியாவிற்கும், காஷ்மீரில் உள்ள 7,00,000 துருப்புகளுக்கும் எதிரான இன்னொரு ஆயுத புரட்சியும் தீவிரவாதம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக கையில் கல்லுடன் மோதும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் உள்ள கல்லை கீழே வைத்து விட்டு தாங்களும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990களில் இருந்ததைவிட மிக மோசமாக மாறிவிடும்.
காஷ்மீர்களுக்கு தெரியும் எவ்வாறு ஆயுதப் போராட்டம் தங்கள் குழந்தைகளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவர்கள் தங்கள் விடுதலைக்காக அதைச் செய்வார்கள். ஆனால் தற்போது காசுமீர் போராட்டம் வெறும் கற்களுடன் மட்டுமே நடைபெறுகின்றனது. ஆனால் தங்களைச் சுற்றி உள்ள இந்த கண்ணாடி மாளிகைகள் அப்படியே இருக்காது. போர் மிகத் தீவிரமான ஒன்றாக மாறும், இருந்தபோதிலும் என்னுள் உள்ள அமைதி விரும்பி அந்த நிலைக்கு காசுமீர் தள்ளப்படாது என்று கூறுகிறான்.
1990களில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது. நான் அப்பொழுது சிறியவன். ஆனால் இன்று அந்த நிகழ்வு பல திரிபுகளுக்கு உள்ளாகிவிட்டது. காஷ்மீரில் பண்டிட்டுகளையே காணாத இசுலாமிய இளைய தலைமுறைகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த வருடம் என்ன நடைபெற்றது என்பது பற்றிய பல கதைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன்.
எப்பொழுதெல்லாம் அன்று என்ன நடைபெற்றது என தெளிவாக தெரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாமல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்களது பழைய குடும்ப புகைப்படங்களில், பல காஷ்மீர் பண்டிட்டுகளை நான் பார்த்ததுண்டு. எங்களது குடும்பத்தை பொருத்தவரையில் பண்டிட்டுகளுக்கு எதிராக பேசுவது தவறு, அவர்கள் விடுதலையை எதிர்க்கும் வலது சாரி இயக்கத்தை சார்ந்தவர்களாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் சரி. பண்டிட்டுகள் மீண்டும் அவர்களின் பூர்விக நிலங்களில் வந்து குடியேற வேண்டும். என்னை போன்ற இளைஞர்கள் அவர்களை வேறு யாரோ ஒருவர் என எண்ணாமல் நண்பர்கள் போல பழகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதும் உண்டு.
என்னை பொருத்தவரை காஷ்மீர் என்பது கென்றி காரிட்டர் பிரசனின் புகைப்படத்தை போல. அந்த புகைப்படத்தில் ஒரு பெண்கள் கோ.இ.மாரன் மலை உச்சியில் நின்று கொண்டு தங்களது தெய்வங்களை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் பழைய காஷ்மீரி பர்காவிலும், இன்னொருவர் காஷ்மீரின் பாரம்பரிய உடையுடனும் மலைகளையும், அகண்ட வானவெளியை பார்த்த மாதிரி இருப்பார்கள். அவர்களின் இறைவழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவர்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தது. இந்த பிரச்சனை ஏற்கனவே அவர்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது. அமைதி வழி போராளிகள் கொல்லப்படுவது தொடர்ந்தால் இந்த பெண்களும் ஒரு நாள் காணாமல் போய் விடுவார்கள். நாம் கனவு கண்ட காஷ்மீர் கனவிலேயே போய்விடும் போல் உள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் நானும் "விடுதலை" போராட்டம் முடிவடைந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் துப்பாக்கிகளிலிருந்து கல் என்ற ஆயுதமாக மாற எடுத்துக் கொண்ட காலம் தான் அது என்பது எனக்கு இன்று புரிகின்றது. 1953களில் சர்வசன வாக்கெடுப்பு என்று இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான "Al Fatah" (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989களில் சம்மு காசுமீர் விடுதலை அமைப்பு என்றானது, இன்று ஒன்பது வயது கல்லெறியும் சிறுவன் என்றிருக்கும் போராட்ட நிலையில் என்றும் விடுதலை முழக்கம் மட்டும் மாறவே இல்லை. போராட்ட வழிமுறைகள் மட்டுமே மாறியுள்ளன.
"பெரிய பொருளாதார மற்றும் அதிகார போட்டியில் வளர்ந்து வரும் நாடான இந்தியா" காஷ்மீரி மக்களின் மனங்களை கவர பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து முயற்சி செய்தது. பெரும்பான்மையானோர் அந்த பணத்தை பெற்றிருப்பினும் தங்கள் உணர்வுகளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வதாயில்லை. இது வழிமுறை 1. இது சரியாக நடைபெறாததால் வழிமுறை 2ல் தவறான நபர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் கவனிப்பு நடந்தது. ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. இந்தியா தனது பணத்தையும், ஆயுதத்தையும் கீழே வைத்து விட்டு காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும்.
இரண்டு வழிகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிரச்சனையில் சம பங்குள்ளவர்கள் என கருதி தில்லி காசுமீரி மக்களுடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது. அல்லது இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி நோயை அல்லாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தும் வேலையில் ஈடுபடுதல். தேசிய காங்கிரசு PDP போன்ற அரசியல் கட்சிகள் கூறும் இந்திய அரசமைப்பின் எல்லைக்குள் "சுயாட்சி" போன்றவற்றை எல்லாம் மைய அரசு தூக்கியெறிந்து பல நாளாகி விட்டது.
மக்கள் கூட்டமைப்பின் தலைவர் "சாச்சத் லோனோ கூறும் "அடையக்கூடிய தேசியம்" என்பதை பற்றி இரண்டு வருடமாக ஒருவர் கூட இதுவரை வாயே திறக்கவில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் "தில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஊசலாட்டதில் வைத்துள்ளோம்" என்கிறார். இந்தியா ''வெறும் புகைப்படத்திற்கு மட்டும் அல்லாமல் குறைந்தபட்சம் நேர்மையுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என நாங்கள் நம்புகின்றோம்'' என்றார் அவர்.
இந்திய படை வீரர்களோ மிகவும் ஏழ்மையான கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமற்ற பதுங்கு குழிகளில் கழிக்கின்றனர். கல்லுக்கு பதிலாக காஷ்மீரத்து சிறுவர்களின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்கள். சுற்றி போடப்பட்டுள்ள முள்வேலிகள், உளவியல் ரீதியான கோளாறுகளால் அதிக பட்சமான தற்கொலைகளும், தங்கள் குடும்பத்தினரையே கொலை செய்தல் போன்றவையும் காஷ்மீரில் மிக அதிக அளவில் உள்ளன. இந்தியா இவர்களை தேச பகதிக்காக எரியும் மெழுகாய் மட்டும் பார்க்காமல் தகுதி வாய்ந்த குடிமகன்களாய் என்று பார்க்கத் தொடங்குகின்றதோ அன்று தான் காஷ்மீரிகளுக்கும், படையினருக்கும் உண்மையான விடுதலை ஆகும்.
இந்தியா ஒன்று காஷ்மீரை விட்டு வெளியேறலாம் அல்லது அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம். ஆனால் 63 வருடங்களாகியும் இந்தியாவால் காஷ்மீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை.
-
veliye payirai meinthaar pola
inum avarkal manathil india idam pidikaathathaal than angulla silar theeviravaathiyaaga matra sila theevira vaatha iyakangal muyankirathu enpathu en karuththu
-
தீவிராவதிகள் உருவாவதற்கு காரணமே சரியான நியாயம் வழங்க படாமல் மறுக்க படுவதால் தானே அந்த நிலைமை தானே இன்று காஷ்மீரில் உள்ளது ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு ஆளானவர்கள் வேறு என்ன செய்வார்கள் அவர்களை எதிர்த்து தான் போராடுவார்கள் போராடியவர்களை இந்திய அரசபடை தீவிரவாதி என்று கூறுகிறது இது தானே உண்மை!
ஒரு நடுநிலையோடு சிந்தியுங்கள் ரெமோ!
-
aama yous solrathu mutilum unmai .... :(
-
ungal karuthai nan etru kolkiren usf
-
நன்றி ஏஞ்செல் & ரெமோ!