FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on November 21, 2013, 04:04:11 PM

Title: ~ கூடுதல் வீட்டுக்கடன் பெற எளிய வழி! ~
Post by: MysteRy on November 21, 2013, 04:04:11 PM
கூடுதல் வீட்டுக்கடன் பெற எளிய வழி!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdinakaran.com%2Fdata1%2FDNewsimages%2FTamil-Daily-News_34731256962.jpg&hash=b05c4b5d99d554f829f8563c0c5b5ebbad1394ad)


வீட்டுக்கடனை தம்பதியர் கூட்டாக வாங்கும்போது, பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியவில்லை. இதுபற்றிய ஒரு பார்வை:
வீடு கட்டுவதற்கோ, வாங்குவதற்கோ அதிக தொகை வீட்டுக்கடனாக தேவைப்படும். இதுபோன்ற சமயங்களில் தம்பதியர் இருவரும் இணைந்து கூட்டாக விண்ணப்பிக்குமாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கூறுவதை பார்க்கலாம். இதுபோல கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் வரி செலுத்துவதில் சில சலுகைகள் உண்டு தெரியுமா?

கணவனும், மனைவியும் இணைந்து விண்ணப்பிக்கும்போது அவர்களால் கூடுதல் தொகையை மாதாந்திர தவணையாக செலுத்த முடியும் என்பதால் அதிக தொகையை வீட்டுக் கடனாக பெற முடியும். அதே சமயத்தில் செலுத்தும் அசல், வட்டி ஆகியவற்றின் மீது இருவரும் தனித்தனியாக வரி தள்ளுபடி பெற முடியும்.
   
வருமான வரி சட்டத்தின்படி, கூட்டாக கடன் வாங்கும் அனைவருக்கும் வரி சலுகை கிடைக்கும். ஒருவரின் ஆண்டு வருமானத்தில் ரூ.1.5 லட்சம் வரை வீட்டுக்கடன் வரிச்சலுகை கிடைக்கும். கூட்டாக வீட்டுக் கடன் வாங்கும்போது கணவன், மனைவி இருவருக்கும் தலா ரூ.1.5 லட்சம் என ரூ.3 லட்சத்துக்கு வரி தள்ளுபடி கிடைக்கும்.

இந்த சலுகையைப் பெற வீட்டுக் கடன் பெறும் இருவரும் சொத்துக்கு உரிமையாளர்களாக இருக்க வேண்டும். கூட்டாக வீட்டுக் கடன் வாங்கிய கணவன், மனைவி இருவரும் ரூ.2.40 லட்சம் வட்டியாகவும், ஸீ1 லட்சம் அசலாகவும் செலுத்தியிருந்தால், இருவருக்கும் வட்டியின் மீது 1.2 லட்சம் வரையும், அசலின் மீது ரூ.50 ஆயிரம் வரையும் வரி தள்ளுபடி கிடைக்கும்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மனைவி ஏதாவது காரணத்துக்காக ஊதியம் ஈட்டவில்லை, கணவரே வீட்டுக்கடன் தவணையை செலுத்துகிறார் என்ற நிலையில், ''முழு தவணை தொகையையும் கணவர்தான் செலுத்தினார்'' என்று மனைவியிடம் நூறு ரூபாய் முத்திரைத் தாளில் எழுதி பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த ஆண்டு முழு வரிச் சலுகையும் கணவருக்கு கிடைக்கும். கணவர் ஊதியம் ஈட்டவில்லை என்றால் மனைவியும் இதேபோல வரிச்சலுகை பெற முடியும்.

சகோதரிகள், நண்பர்கள், திருமணமாகாத ஜோடிகள் ஆகியோர் இத்தகைய வரிச்சலுகையை பெற முடியாது. மேலும் கூட்டாக வீட்டுக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை 6க்கு மேல் இருந்தால் இந்த சலுகை கிடைக்காது. மொத்தத்தில் கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்குவது சிறந்த லாபம் தரக்கூடியது.