FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Global Angel on November 17, 2011, 04:37:50 PM
-
ராஜுவின் கதை
சிறு வயது முதலே வாத்தியார் இல்லாமலேயே தனது சொந்த முயற்ச்சியில் பலவித கைவினை பொருட்களை செய்யும் ஆர்வம் மிகுந்து இருந்தது ராஜுவிற்கு, பத்து வயது சிறுவனால் இத்தனை அழகான கைவினை பொருட்களை உருவாக்க இயலுமா என்று வியக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக கைதேர்ந்த கைவினை பொருள் உருவாக்கும் கலைஞரின் கைவண்ணம் போலிருக்கும் ராசுவினால் உருவாக்கப்பட்ட பொருட்கள். இயற்கையாகவே தாய் வழி சொத்தாக கிடைத்த பாடும் குரலும் திறமையும், இருபது வயது மதிக்கத்தக்க வாலிபப்பருவம் அடையும்போது கவிதை கதைகள் எழுதுவதிலும் அந்த திறமை வளர்ந்தது , வசதியான பெற்றோர்களை கொண்ட குடும்பச் சூழல் அடுத்த வேளைச் சோற்றிற்கு சம்பாதிக்க வேண்டுமென்கின்ற கட்டாயத்தை மறக்கச் செய்தது, கலையார்வம் துரத்தியது,
அடுத்தடுத்த தெருக்களில் வசித்து வந்த பிரபலங்கள் ராஜுவின் கலையார்வத்திற்க்கு மிகவும் உருதுணையானார்கள், அதில் ஒரு திரைப்பட பிரபலத்திடம் தினமும் சென்று தனது கலையார்வத்திற்க்கு தீனி போடும் வாய்ப்பும் கிடைத்தது, அங்கு வந்த பல பிரபலங்களின் அறிமுகமும் கிடைத்தது, ராஜுவிற்கு பணத்தின் அருமை தெரியாமல் வளர்ந்ததன் விளைவு, பிரபலங்களின் அறிமுகத்தை கொண்டு தன் கலை வாழ்க்கை உயர்வதற்கு பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் போனது, அன்றைய கால கட்டத்தில் அரசு வேலை வாய்ப்பாக இருந்தாலும் தனியார் வேலை வாய்ப்பாக இருந்தாலும் தற்காலத்தில் இருப்பது போன்று கடினமாக இருக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம், ராஜுவின் தாய் மருத்துவர், பிரபல மருத்துவர் ரங்காச்சாரியின் மாணவிகளில் ஒருவர், அவரது அப்பா தென்னக ரயில்வேயின் ஆங்கிலேய மூத்த அதிகாரி, அவரது மூத்தமகள் ராஜுவின் தாய், முதல் பெண்மருத்துவர் முத்துலெட்சுமியாம்மாவிடம் நெருங்கிய தொடர்புடையவர் என்று அடுக்கடுக்காய் பல விதங்களில் செழுமை மிக்கதொரு குடும்ப அடிப்படையின் காரணம், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
ராஜுவின் சகோதரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசுபணியில் பணியாற்றத் தொடங்கிவிட்டனர், ராஜுவிற்கு நண்பர் கூட்டம் அதிகம், ஒவ்வொருவராக வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போது ராஜுவின் தாயாரும் ராசுவை வேலைக்கு போகச் சொன்னபோது அப்போதைய அரசு தொலைபேசியில் வேலையில் சேர்ந்து ஒழுங்காக வேலைச் செய்ய ஆரம்பித்தார் ராசு. திரைப்படங்களில் அப்போதைய பிரபல வசன கர்த்தாவும் பாடல் ஆசிரியரும் நடிகருமான ராஜப்பா என்பவர் ராஜுவின் கலை ஆசான், அடுத்த தெருவில் வசித்த பிரபலங்களில் ஒருவர், அவரிடம் திரையுலக சம்பந்தமான பலரும் வந்து செல்வது வழக்கம், அதில் ஒருவர் இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு). ராஜப்பாவின் நண்பர், ராசப்பாவின் வீட்டில் முதன் முதலில் ராஜுவிற்கு பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படத் துவங்கியது, அதற்க்கு முன்பே திரு கிருஷ்ணன் அவர்களை சிறுவயது முதலே பார்த்து பழக்கம் இருப்பினும் அதுவரையில் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படாமலிருந்தது, திரு கிருஷ்ணன் அவர்களும் சிறுவயது முதலே அடுத்த தெருவில் வசித்து வந்தவர்.
அந்த கால கட்டத்தில் புரசைவாக்கம் பல பிரமுகர்கள் வாழுகின்ற இடமாக இருந்தது, அங்கேதான் திரு ராஜுவும் ராஜுவின் சகோதரர்களும் பிறந்து படித்து வளர்ந்தது, ராஜப்பாவின் சொந்த ஊர் தஞ்சை, ஐயங்கார் வகுப்பை சார்ந்தவர், திரையுலகில் பணிபுரிவதற்காக சேலம் கோவை போன்ற நகரங்களில் இருந்த பட்சிராஜா பிலிம்ஸ் பணி புரியத் துவங்கிய போது அறிமுகமானவர்களில் திரு கிருஷ்ணனும் ராஜப்பாவும் இன்னும் பல அன்றைய திரையுலக ஜாம்பவான்களும் உண்டு பிறகு சென்னைக்கு திரைப்பட நிறுவனங்கள் ஸ்தாபிக்கபட்ட போது ராஜப்பா புரசைவாக்கத்தில் வந்து குடியேறியதாக கூறப்பட்டது.
திரு சிவாஜிகணேசன் நடித்த பராசக்திக்கு முன்னர் பல திரைப்படங்களை திரு ஏ.வி.எம். தயாரித்தபோது அங்கே எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு பஞ்சு அவர்களின் நட்பு திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் மூலம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது, இருவரும் ஒரே brand என்பதால் கிருஷ்ணன் அவர்களுக்கு சிகரெட் தீர்ந்து போனபோது அருகில் சிகரெட் வாங்குவதற்கு வேலையை விட்டு விட்டு பாதியில் வெளியே சென்று வாங்க இயலாமல் போனதால் அதே brand சிகரெட் திரு பஞ்சு அவர்களும் பிடிக்கும் வழக்கம் இருந்ததாகவும் சிகரெட் கொடுத்ததிலிருந்து நட்பும் தொடர்ந்தது அந்நட்பு தொழிலிலும் தொடர்ந்து பின்னர் இருவரும் உறவினர்களாகியும் விட்டனர். திரு கிருஷ்ணனிடம் நண்பராகவும் தொழிலில் உதவியாகவும் திரு ராசு இணைத்துக் கொள்ளபட்டார். இதனால் அரசு வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒரு கால் என்பது போல காலம் கடந்தது, ராஜுவின் பெற்றோரின் வசதி காரணமாக துவக்க காலங்களில் வாயிற்று பிழைப்பை பற்றிய அக்கறை இருக்கவில்லை ராஜுவின் தாய் அவரது ஐம்பத்து இரண்டாவது வயதிலேயே மரணமடையும் சூழல் உருவானது அதற்க்குக் காரணம் ராஜுவின் மூத்த சகோதரர் இளம் வயதிலேயே திடீரென்று டைபாய்டு (அப்போதெல்லாம் டைபாய்டு நோய்க்கு சரியான மருந்துகள் கிடையாது) ஜுரத்தால் பாதிக்கப்பட்டு இருபது நாட்களிலேயே காலமானதால் அந்த துயரை தாங்கிக்கொள்ள இயலாமல் ராஜுவின் அம்மா குறைந்த வயதிலேயே இறந்து போக நேரிட்டதால் குடும்பத்தில் இருந்த மற்ற அனைவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியானது. சொத்துக்களை ஏமாற்றி பலர் எடுத்துகொண்டனர், ராஜுவின் அப்பா 'அவளே போய்ட்டா இனிமேல் எனக்கு சொத்து எதுக்குன்னு' சொல்லி உயிருடன் இருந்த மற்ற பிள்ளைகளைப் பற்றி யோசிக்காமலேயே குடும்பம் நசிந்துபோனது
-
ராஜுவின் கதை - இறுதி பாகம்
முதல் அண்ணன் காலமாகிவிட மீதம் ராஜுவையும் சேர்த்து நான்கு பேர் சகோதரர்கள் ஒருவருக்கும் அப்போது திருமணமாகவில்லை. அப்போது தொலைபேசி அலுவலகம் தனியார் நிருவனமாக்கப்படவில்லை, ராஜுவின் சகோதரரில் ராஜுவிற்கு மூத்த சகோதரர் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் அரசு பணியில் இருந்து வந்தார், ராஜுவின் மூத்த சகோதரர் வேலையை விட்டு விடாதே, திரைப்பட தயாரிப்பிலோ இயக்குனராகவோ கிருஷ்ணன் முன்னுக்கு கொண்டு வருவார் என்கின்ற உன் நம்பிக்கையை நம்பி அரசு பணியை விட்டு விடாதே என்று எடுத்துக் கூறியுள்ளார், ராஜுவின் இரண்டு தம்பிகளில் மூத்தவர் ரயில்வேயில் எழுத்தராக பணி செய்து வந்தார், [கடைசி தம்பியும் பிற்காலத்தில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்தார்]. அவருக்கு அப்போதைய தென்னிந்திய ரயில்வேயின் பொதுமேளாளர் மிகவும் நெருக்கம் என்பதால் ரயில்வேயில் பணியமர்த்திவிடுவதாக ராஜுவிடம் பல முறை சொல்லியும் இயக்குநர் கிரிஷ்ணரின் வாக்குறுதியின் மீதிருந்த நம்பிக்கையால் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் திரைப்பட மோகத்தினால் இழுக்கப்பட்டு கிருஷ்ணனே கதி என்று நம்பிக்கிடந்தார் ராசு.
ஆனால் நம்பிக்கை எந்த அளவிற்கு உதவி செய்தது, கிருஷ்ணர் தனக்கிருந்த நண்பரும் தொழில் பார்ட்னருமான பஞ்சுவிடம் பீம்சிங்கை அறிமுகப்படுத்தினார், பீம்சிங் எங்கிருந்து திடீரென்று வந்தார், அவரும் அடுத்த தெருவில் வசித்தவர், பீம்சிங் ராசுவைப்போல இல்லை, தொழில் நுணுக்கத்தை பிடித்துக்கொண்டு கிருஷ்ணனின் உதவியுடன் திரைப்பட இயக்குனராகிவிட்டார், இயக்குனராவதற்கு உதவிய கிருஷ்ணன் பீம்சிங்கை தனது தங்கைக்கு திருமணம் முடித்து வைத்து சொந்தமாக்கிவிட்டார். ராஜுவின் நிலை என்ன, கேள்விக்குறிதான். பஞ்சுவும் பீம்சிங்கும் [பீம்சிங்கின் தாயார் தெலுங்கு பிராமணர்] பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணரின் தகப்பனாரும் பிராமணர், ஆக பிராமணர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு தங்களை முன்னேற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் சொந்தமாக மாறிப் போயினர். ராசு அடிப்படையில் கிறிஸ்த்துவர், அவரை உயர்விற்கு கொண்டுவந்து அதனால் அவர்களுக்கு ஆகப்போவது என்ன என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்திருக்கலாம்.
ஏமாளி ராசு, பிழைக்கத்தெரியாதவர், அப்பாவி அப்போதும் இவற்றையெல்லாம் உணரவில்லை, கிருஷ்ணர் தனக்கு நிச்சயம் உதவிவிடுவார் என்று அவரது வாக்கை நம்பி காலமெல்லாம் காத்திருந்தார், திரு வாசு அவர்களால் தயாரிக்கப்போகின்ற திரைப்படம் பெற்றால்தான் பிள்ளையா, அதில் நிச்சயம் நல்ல வசூல் கிடைக்கும் அதன் மூலம் அந்த தயாரிப்பாளரிடம் சொல்லி அடுத்த திரைப்பட வாய்ப்பை பெற்று தருவதாக இறுதியாக வாக்களித்தார் ராஜுவிடம் கிருஷ்ணன், ஆனால் நடந்தது என்ன, யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஆர்.ராதா அவர்கள் திரு. எம்.ஜி.ஆரை சுட்டுவிட பெற்றால்தான் பிள்ளையா திரைப்படம் நன்றாக ஓடி வசூலைக்கொடுத்தாலும் தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கும் வாய்ப்பை அத்துடன் இழந்துவிட்டார். இதற்கிடையில் ராசு வேறு அரசுபணிகளில் சேர்ந்தார், ஆனால் ஒவ்வொரு முறை கிருஷ்ணன் ஏதோ ஒருதிரைப்படத்தை இயக்குவதை அறிந்து அந்த வேலையை நிறுத்திவிட்டு கிருஷ்ணன் இயக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார்.
மனிதர்கள் மட்டும் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தாலும் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பானது, சகோதரர்கள் எல்லோரும் குடும்பஸ்த்தர்களாகி விட்டனர், ராஜுவின் நிலைமையைப் கேட்கவா வேண்டும், ராசுவை நம்பி ஒரு பெண் வாழ்க்கை பட்டார், குழந்தையும் ஆனது, காப்பாற்ற இயலாமல் குடும்பத்தில் கஷ்டம், கிருஷ்ணன் என்ன செய்தார், எல்லா பொறுப்பையும் பஞ்சுவின் மேற்பார்வையில் வைத்துக் கொண்டார், கிருஷ்ணரின் குடும்பத்தினரின் பார்வையில் ராசு எடுபிடி, ராசு கிருஷ்ணருக்கு பெண்களைக் கூட கூட்டி வந்து கொடுப்பவன் என்கின்ற எண்ணம். ராஜுவும் கிருஷ்ணரும் சந்திப்பது அவரது (பஞ்சு உட்பட) குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடிப்பது இல்லை,
ஆனால் நடந்தது என்ன கிருஷ்ணன் தனக்கொரு வைப்பாட்டியை தானே தேடிக்கொண்டார், ஆனால் அவர்கள் நினைத்தது அந்த வைப்பாட்டியையும் ராஜுதான் கூட்டி வைத்தார் என்று, ஆனால் வைப்பாட்டி என்ன செய்தார் அந்த குடும்பம் ராசுவைப்பற்றி என்ன நினைக்கிறது என்பது அறியாதவர், உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு என்பதைப்போல, ராஜுவிற்கு கிருஷ்ணன் செய்யவிருந்த உதவிகளையெல்லாம் தன்வசம் திருப்பிக்கொண்டுவிட்டார், பிழைக்கத் தெரிந்த பெண். அப்போதும் ராஜுவிற்கு கிருஷ்ணரின் மீதிருந்த நம்பிக்கையும் அன்பும் எவ்விதத்திலும் குறையவே இல்லை என்பதுதான் ராஜுவின் குடும்பத்தாற்க்கு ஆச்சரியமான விஷயம், இப்படியும் ஒருவன் உலகில் இருப்பானா, என்று கேட்கின்ற அளவிற்கு உலகின் தில்லு முல்லுகளைப் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தார் ராசு.
வாழ்க்கையில் கஷ்டங்களின் எல்லைக்கே வந்தாகிவிட்டது, இனியும் படுவதற்கும் சுமப்பதற்கும் உலகில் வேறொரு கஷ்டம் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் ராசு, அவரைப்பற்றி அறிந்தவர்கள் கூறுவது, கலைஞரை உங்களுக்கு தெரியுமே சென்று பாருங்களேன் ஏதாவது உதவி செய்வார், (சிவாஜி) கணேசனை உங்களுக்கு தெரியுமே போய் பார்க்கக் கூடாதா ஏதாவது உதவி செய்வார், இப்படி ராஜுவைப் பற்றி நன்கு அறிந்த அவரது நண்பர்களும் மற்றவர்களும் பலமுறை கூறுவதுண்டு, எத்தனையோ அன்றைய பிரபலங்களை ராஜுவிற்கு தெரிந்திருந்தும் ராசு நம்பியது இயக்குநர் கிருஷ்ணரை மட்டுமே கடைசிவரையில், வாக்குறுதி கொடுப்பவர்கள் மறந்துவிடுவது வாடிக்கைதானே, கிருஷ்ணரும் அப்படித்தானோ அல்லது அவரை சுற்றி இருந்தவர்களின் தந்திரமோ, உண்மைகள் எப்போதும் மவுனம் சாதிக்கும் அல்லவா, ஆனால் கிருஷ்ணர் கடைசிவரையில் தனது வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தன்னையே நம்பி காலமெல்லாம் காத்துக் கிடந்த ராஜுவிற்கு செய்யவேயில்லை என்பது வேதனை ஏற்ப்படுத்தும் செய்தி. ஆனால் ராஜுவின் நம்பிக்கை மட்டும் சற்றும் குறையவே இல்லை. வறுமை, வியாதி, பசி, பட்டினி, பிச்சை, குடிசை, வயோதிகம், மரணம் இவை எல்லாம் ராஜுவின் வாழ்க்கையை தலை கீழாய் மாற்றி போட்ட போதும் அந்த பாழாய்ப் போன 'நட்பு, நேர்மை, நம்பிக்கை, நண்பர்கள்' என்கின்றவைகளை ராசு கட்டிகாத்தவிதம், மதித்தவிதம் என் கண்களில் என்றும் தீராத கண்ணீரையும் மனதினில் ஆறாத் துயரத்தை கொடுத்துவிட்டது.
ராஜுவிற்கு என் சிரம் தாழ்ந்த அன்பு என் உயிருள்ளவரை என்றென்றும் உண்டு, அவரது நேர்மை பண்பு, வறுமையிலும் உதவி என்று வலியோரை நம்பி போகாமல் வறுமையைக் கூட தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எண்ணி ஏற்றுக்கொண்டு பொருமையாய் வாழ்ந்த விதம் என் நெஞ்சை விட்டு என்றும் அகலாத ரணங்கள். அன்னாரின் ஆத்மாவிற்கு என் அஞ்சலிகள் என்றும் உரித்தாகுக
-
nala kathai
ithu unmai thana?
nalavangaluku kaalamila
-
yah unmaithan :(