FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: micro diary on November 16, 2011, 02:26:00 PM

Title: முள்ளங்கி சப்பாத்தி
Post by: micro diary on November 16, 2011, 02:26:00 PM
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்றுகின்றன. உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது முள்ளங்கி. அவ்வகையில் முள்ளங்கி சேர்த்துச் சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம். ஓமம் சேர்ப்பதால் வாசம் நிறைந்த சத்தான சப்பாத்தி ரெடி!

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 2
கோதுமை மாவு - 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
ஓமம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

* துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்­ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீ­ர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம்.

முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல்தானே!