FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 18, 2013, 10:59:49 AM

Title: மணப்பாறை முறுக்கு
Post by: kanmani on October 18, 2013, 10:59:49 AM
இனிப்பாகவும் இல்லாமல், காரமாகவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான சுவையோடு மணக்கும் இந்த மணப்பாறை முறுக்கு அனைவராலும் விரும்பப்படுகிறது.

இந்த முறுக்குக்கு ஒருவித அபாரமான ருசி எப்படி ஏற்படுகிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கையே!. இதற்கு உள்ளூர்வாசிகள் கூறும் பதில் என்னவென்றால்,  மணப்பாறையில் கிடைக்கும் லேசான உப்பு ருசி கலந்த தண்ணீர்தான் என்கிறார்கள். இந்த  உப்புத் தண்ணீர்தான் இந்த முறுக்குக்கு ஒருவித வாசனையையும்  கொடுப்பதாக சொல்கிறார்கள். இது மட்டுமின்றி, முறுக்கை இவர்கள் இரண்டு தடவை பொறித்தெடுப்பதாக சொல்கிறார்கள்.ஒருமுறை பொறித்தெடுத்து வைத்துவிட்டு 3 நிமிடம் கழித்து கரகரப்பாக வரும்படி மீண்டும் பொறித்தெடுக்கிறார்கள்.   இப்படி  பொறிப்பதால் வித்தியாசமான ருசி கிடைப்பதாக சொல்கிறார்கள்.  இந்த மண்ணிலேயே விளையும்  பச்சரிசியைத்தான்  முறுக்கு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். அதுவும் பிரத்தியேகமான ருசிக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.  சில ஸ்பெஷல் ஆர்டர்கள் வந்தால், முறுக்கு மாவுடன் நெய்யோ, வெண்ணையோ முறுக்கு மாவுடன் கலந்து ரிச்சாக  தயாரிக்கப்படுகிறது.

மணப்பாறை முறுக்கு செய்யும் முறை எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1 கிலோ;கொஞ்சமாக உளுத்தம்பருப்பு   இரண்டையும் நன்கு மாவாக்கி அத்துடன் ஜீரகம் , எள்,பெருங்காயம் ஓமம், 10 கிராம் உப்பு இவற்றை கலந்து  அத்துடன்  தண்ணீரை கொஞ்சமாக விட்டுக் கலந்து, அத்துடன் கொஞ்சம் எண்ணெயும்  சேர்த்துப் பிசைந்து கொண்டபின்,  முறுக்கு மேக்கரில் விட்டு  முறுக்கு இழைகளாக தயாரித்து, அந்த முறுக்குகளை கொஞ்ச நேரம் உலர வைக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து எடுத்து கடலை எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்து விட்டு இரண்டாவது பேட்ச் முறுக்குகளைப் போட்டு பொறித்து எடுத்து வைக்கவேண்டும்.  பிறகு முதலில் பொறித்துவைத்த முறுக்குகளை திரும்பவும் பொறிக்கவேண்டும். அடுத்து இரண்டாவது பேட்ச் முறுக்குகளை  பொறிக்க வேண்டும். இப்படியாக இரண்டிரண்டு தடவைகளாக பொறிக்கவேண்டும். பின்னர், காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து டைட்டாக மூடிவிட வேண்டும். கொஞ்சம் ரிச்சாக இருக்கவேண்டுமானால், வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம். இதுவே மணப்பாறை முறுக்கு செய்யும் விதம்.!

ஆனாலும் மணப்பாறையில் ஊறும் தண்ணீரும் மணப்பாறையில் விளையும் அரிசிக்கும் மட்டும்தான் அந்த சுவையும் மணமும் வருமாம்!.