ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சிகள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F1bacfa7a-6b2f-4b7e-8f2a-294d7666ef68_S_secvpf.gif&hash=54cd892cbad1fe2fc1ed5516a443b0216566550f)
நாம் செய்யும் அன்றாட வேலைக்கு நடுவில் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடுகிறோம். அல்லது, செய்யும் வேலையே உடலுக்குப் பயிற்சிதானே என்று அசட்டையாக இருந்துவிடுகிறோம். காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கச் செல்லும் வரை ஒருவர் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என, பார்க்கலாம்.
இந்த கையேடு உங்கள் கைவசம் இருந்தால், நோய் நொடியில்லாத நிம்மதியான சந்தோஷமும், வாழ்வின் மீதான நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும் என்பது நிச்சயம்! தினமும் எழுந்தது முதல் செய்ய வேண்டிய ஆரோக்கிய விஷயங்கள்....
• ஒவ்வொருவர் வீட்டிலும் எடை பார்க்கும் கருவி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். தினமும் காலையில் எழுந்ததும், எல்லா வயதினரும் தங்கள் எடை எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது உடல் எடை சற்று கூடியிருந்தால், நாள் முழுக்க நம் மனதில் அது நிழலாடும். அப்போதுதான் அன்று கொஞ்சம் கூடுதலாக உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று கடைப்பிடித்து எடையைக் குறைக்க முயற்சி எடுக்க முடியும்.
• காலையில், காலைக்கடனை முடித்துவிட்டு நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். குழந்தைகள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்னை இல்லாதவர்கள் நடைப்பயிற்சிக்குப் பதில், ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
40 வயதைக் கடந்தவர்கள், வயதானவர்கள் நடைப் பயிற்சி செல்லலாம். அதுவும் 'பிரிஸ்க் வாக்' எனப்படும் வேக நடைப் பயிற்சி செல்வது அவசியம். சாதாரணமாக நடப்பதால், எந்த பலனும் இல்லை. 'பிரிஸ் வாக்' செய்யும்போதுதான், உடலுக்கு அதிக அளவு நன்மை கிடைக்கும்.
மழை நேரத்தில் வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யலாம். வசதியிருந்தால், நல்ல தரமான ட்ரெட் மில் இயந்திரத்தில் வாக்கிங் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யும்போது மூட்டுகள், தசைகள், எலும்புகள் வலுவடையும்.
எலும்பு உறுதியாக இருக்க, கால்சியம் அவசியம். உடற்பயிற்சி செய்வதால், கால்சியத்தை எலும்பு நன்கு கிரகிக்கும். இல்லையெனில் என்னதான் கால்சியம் சத்து மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அத்தனையும் வெளியேறிவிடும்.
நடைப்பயிற்சி என்பது 30 முதல் 45 நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். மெதுவாக நடைப் பயிற்சியை ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதேபோல், வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நடைப்பயிற்சியை முடிக்க வேண்டும்.
இதன் பிறகு, ஜிம் உடற்பயிற்சிகள் செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜிம்மில் செய்யக்கூடிய எடைப் பயிற்சிகளை செய்யலாம். 90 வயதினர்கூட ஜிம் பயிற்சியைச் செய்யலாம். அவர்களுக்கு ஏற்ற வகையில் எடை குறைவாக வைத்து செய்யும்போது தசைகள் வலிமையாக, இளமையாக, ஆரோக்கியமாக இருக்கும்.
யோகா, தியானம் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடலாம். அனைத்துப் பயிற்சிகளையும் விட சிறந்தது நீச்சல் பயிற்சி. இந்தப் பயிற்சி செய்யும்போது, மூட்டுகளுக்கு அழுத்தம் செல்லாது.
முழு உடலுக்கும் பயிற்சி கிடைக்கும். பெண்கள், பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளையும் தாண்டி, தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
• காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு அன்றைய வேலையில் ஈடுபடலாம். அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதற்கு பதில், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிய நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்.
அலுவலகத்தை இரண்டு முறை சுற்றிவந்தாலே போதுமானது. அலுவலகத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதற்குப் பதில், படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதும் ஒருவகையில் பயிற்சியாக இருக்கும். முடியாத நேரத்தில் மட்டும் லிஃப்ட் பயன்படுத்தலாம்.
• மாலையில் அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது, வீட்டுக்கு நடந்தே செல்வது நல்ல உடற்பயிற்சி. வெகு தூரத்தில் இருப்பவர்கள், குறைந்த தூரமாவது நடக்க வேண்டும்.
இரவு சாப்பிட்டதும் உடனே படுக்கச் செல்லக்கூடாது. 15 நிமிடங்கள் வாக்கிங் சென்றுவிட்டு வந்து, மீண்டும் உங்கள் எடை எவ்வளவு என்று பார்க்க வேண்டும். உடற்பயிற்சிகளை வாரத்துக்கு நான்கு நாட்கள் செய்தால் போதும். இரண்டு நாட்கள் சிறிய அளவில் பயிற்சிகள் செய்துகொள்ளலாம். ஒருநாள் முற்றிலும் செய்யாமல் ஓய்வு எடுக்கலாம்.
வயோதிகர்கள் நடக்கும்போது தடுக்கி விழாமல் இருக்க, எப்போதும் கையில் ஸ்டிக் வைத்திருப்பது அவசியம். தினசரி வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்துவந்தால் எந்த ஒரு நோயும் உங்களை அண்டாது.