FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 23, 2013, 11:53:52 AM

Title: ~ சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்:- ~
Post by: MysteRy on September 23, 2013, 11:53:52 AM
சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்:-

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/1234969_613851941970458_197465603_n.jpg)


அனைவரும் புகைப்பிடித்தால், புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. புகைப்பிடிப்பதால், புற்றுநோய் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் அவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ளோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

தற்போது இத்தகைய பழக்கம் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் சிகரெட் பிடிப்பது ஒரு ஸ்டைலாக இருந்தது. அதனால் பலர், அதனை ஒரு முறை மட்டும் செய்து பார்க்கலாம் என்று பின்பற்றினர். அவ்வாறு ஒருமுறை சிகரெட் பிடிக்க ஆரம்பித்தவர்களால், அதனை நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாகிவிடும்.

மேலும் எவ்வளவு தான் அதனை நிறுத்துவதற்கு முயற்சி செய்தாலும், சிலரால் அது முடியாத செயலாகிவிடும். இதனால் தொடர்ச்சியான புகைப்பழக்கத்தால், அதில் உள்ள புகையிலை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சிலரது உயிரையே பறித்துவிடுகிறது. என்ன தான் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், உடற்பயிற்சிகளை பின்பற்றினாலும், சிகரெட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்தை மட்டும் தடுக்க முடியாது.

புற்றுநோய்

புகைப்பிடித்தால், முதலில் உடலில் ஏற்படும் நோய் தான் புற்றுநோய். அதிலும் அந்த சிகரெட்டில் உள்ள கார்சினோஜென் நுரையீரல், வாய், தொண்டை மற்றும் உணவுக்குழல் போன்ற இடங்களில் புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சிகரெட் பிடித்ததால், 90 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிலர் சிறுநீர்ப்பை, கணையம், கர்ப்பப்பை வாய், சிறுநீரகம் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயாலும் அவஸ்தைப்படுவார்கள்.

கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி

சிரெட் பிடிப்பதால், மூச்சுக்குழாயில் அழற்சி ஏற்பட்டு, சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். அதிலும் நீண்ட நாட்கள் சிகரெட் பிடித்தால், மூச்சுக்குழாய் அழற்சியானது தீவிரமாகி, சுவாசிக்க முடியாமல், இறுதியில் இறப்பை சந்திக்க நேரிடும்.

மாரடைப்பு

புகைப்பிடித்தால், இதயம் மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய் மற்றும் மற்ற பாகங்களில் உள்ள இரத்தக் குழாயில், கொலஸ்ட்ராலை தங்க வைத்து, அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பு மற்றும் இதர இதய நோயை உண்டாக்கும்.

இனப்பெருக்க மண்டலம்

சில நேரங்களில் சிகரெட் பிடித்தால், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியமானது பாதிக்கப்பட்டு, கருத்தரிப்பதில் பிரச்சனை, குறைப் பிரசவம், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை திடீரென்று கருவில் இருக்கும் குழந்தை இறப்பது போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்பு குறைபாட்டின் தீவிரம் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தி தடைப்பட்டு குழந்தை பிறப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.

அல்சைமர்

நோய் புகைப்பிடித்தல், மனச் சரிவை ஏற்படுத்திவிடும். மேலும் புகைப்பிடிப்பதால், தமனிகளில் பாதிப்பு, இரத்த உறைதல் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்பட்டு, இறுதியில் ஒருவரின் மனநிலையையே மாற்றிவிடும்.

நோய்த்தொற்று

சிகரெட் பிடிப்போரின் மேல் சுவாசப் பாதையில் மற்றும் நுரையீரலில் நோய்த்தொற்றானது அதிகம் ஏற்பட்டு, புரையழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்றவற்றை ஏற்படுத்தி, நிம்மதியான வாழ்க்கையையே கெடுத்துவிடும்.

இதய நோய் பாதிப்பு

புகைப்பிடிப்போரின் அருகில் இருக்கும் பெரியோர் மற்றும் சிறுவர்களுக்கு, 20-30 சதவீதம் இதய நோய் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள் சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை பிறக்கும் போது, மிகவும் எடை குறைவாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

குழந்தைகள்

குழந்தைகள் புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்படுவதோடு, வளர வளர நுரையீரலின் வளர்ச்சியும் வளராமல் தடைபடும்.